twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாக்காரன் சாலை 14 - ’பெரும் படங்கள் ஆகும் கனவில் வெறும் படங்கள் ஆகிப்போன குறும் படங்கள்!’

    By Shankar
    |

    - முத்துராமலிங்கன்

    மார்ச் 6 கடந்த வெள்ளியன்று தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நான் நம்பியிருந்த இருவர் என்னை கடுமையாக சோதித்தார்கள். ஏமாற்றத்தின் உச்சத்துக்கு என்னைத் தூக்கிக்கொண்டு போய் அதள பாதாளத்தில் தூக்கிப் போட்டார்கள். ‘நாங்க அந்த அளவுக்கு ஒர்த் இல்ல பாஸ்' என்று ஒரே குரலில் சொன்னார்கள்.

    செல்லச் சண்டைக்கா ‘ரன்' ஆகிய முதல் நபரைப் பற்றி இரண்டாவதாக, அடுத்த கட்டுரையாக எழுதிக் கொள்ளலாம் என்ற முடிவில் இரண்டாவது நபரான கார்த்திக் சுப்பாராஜ் முதலில் வந்துவிட்டார்.

    Cinemakkaran Saalai 14

    கார்த்தி சுப்பாராஜிடம் நான் முதலில் ரசிப்பது அவருடைய ‘எந்தக் கடையில நீ பிட்சா வாங்குற?" உடலமைப்பைத்தான். அப்புறம் தான் ‘பிட்சா' 'ஜிகர்தண்டா' எல்லாம். அடுத்த ஓரிரு வருடங்களில் அஜீத் அல்லது கமல் படத்தில் இவர் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது பேரவா.

    இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள நிலையில் ‘ஸ்டோன் பெஞ்சு' என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கி, தமிழ் சினிமாவின் கிளைகளை விரிவாக்க அவர் களம் இறங்கியபோது, அவர் மீதிருந்த மரியாதை இன்னும் சற்றே உயர்ந்தது. அதிலும் குறும் படங்கள் சிலவற்றை தொகுத்து அவற்றை தியேட்டர்களில் பெரும் படங்களுக்கு போட்டியாக களம் இறக்கப் போவதாக அறிவித்தபோது, நான் இருந்த இடத்தில் இருந்தபடியே இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்கும்படி உரக்க அவருக்கு கேட்கும்படி ‘சபாஷ்' சொன்னேன். அதன் முதல் முயற்சியான ‘ஆறு குறும் படங்கள் சேர்த்து ஒரு செம படம்' பார்க்கும் வாய்ப்பு வெள்ளியன்று கிட்டியது.

    சென்னையில் ரோட்டோர கடைகளில் தயாராகும் புரோட்டாக்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக தயாரிக்கப்படுபவை தமிழ் சினிமாவில் குறும் படங்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தனை குப்பைகள். 5 டி கேமரா வைத்திருப்பவர்கள் அனைவருமே குறும்பட இயக்குநர்கள். ஆனால் இந்த குப்பைகளிலிருந்துதான் கார்த்திக் சுப்பாராஜ் போன்ற சில வைரங்களும் கிடைத்தார்கள் என்பது நிதர்சனம்.

    அப்படிப்பட்ட கா.சு. இப்படிப்பட்ட ஒரு முதல் முயற்சியில் இறங்கும்போது, ரசிகர்களை ஒரு புது அனுபவத்துக்கு தயாராக அழைக்கும்போது, எவ்வளவு மெனக்கெடல் இருக்கவேண்டும்? அவர் சொன்னது போல் செம படம் வேண்டாம். ஒரு சுமார் படமாவது இருந்திருக்கவேண்டாமா?'. அய்யோ..அய்யோ... (கடைசி இரண்டு வார்த்தைகளை மட்டும் வடிவேலு குரலில் வாசிக்கவும்).

    Cinemakkaran Saalai 14

    அந்த ஆறு படங்களில் முதல் சொதப்பல், முதல் படமாக வந்த ‘த லாஸ்ட் பேரடஸ்'. ‘ஆரண்யகாண்டம்' ஜிகர்தண்டா' புகழ் சோம சுந்தரேஷ்வரின் மோனோ ஆக்டிங்கை நம்பி, வசனங்களின்றி ஊமைப் படமாக இயக்கியிருக்கிறார் அனில் கிருஷ்ணன். சிறையிலிருந்து விடுதலையாகி, தனது வீடு திரும்பும் ஒருவனைப் பற்றிய கதை இது. அவன் எதற்கு சிறைக்குப் போனான். என்பதில் துவங்கி யாருமற்ற அவனது வீட்டில் தொங்கிக்கிடக்கும் பூட்டு வரை அந்த பதினைந்து நிமிடப்படத்தில் இருபத்தைந்து கேள்விகள் கிளம்புகின்றன. அவற்றிற்கு படத்தில் எங்கும் பதில்கள் அல்லது மிஷ்கினின் குறியீடுகள் போன்றோ எதுவுமே இல்லை. இப்படி பெரும்பூடகமாக படம் எடுத்தால் தன்னை இண்டெலக்‌சுவல் என்று ரசிகர்கள் ஏமாறுவார்கள் என்று இயக்குநர் நினைத்திருக்கக்கூடும். கார்த்திக் சுப்பாவைத் தாண்டி ஒரே ஒரு ரசிகர் கூட அப்படி ஏமாற மாட்டார் என்று இருபது ரூபாய் பாண்டு பேப்பரில் நான் எழுதித்தருகிறேன்.

    இரண்டாவது படம் கோபக் குமார் இயக்கியிருக்கும் ‘அகவிழி'. ஒரு முக்கோணக்காதல் கதையை தப்பித் தவறி எக்கோணத்திலும் புரிந்து விடாதபடி குழப்பிக் கும்மியடித்திருக்கிறார். எதிர்காலத்தில் நிறையபேரின் கோபத்துக்கு ஆளாகப் போகிறார் என்று யூகித்து கோபக் குமார் என்று தம்பிக்கு பெயர் சூட்டிய இவரது பெற்றோர்களின் கிரியேட்டிவிடியை வியப்பதைத் தாண்டி சொல்ல ஒன்றுமில்லை.

    அடுத்த அருவாமனை ‘புழு'. இதை இயக்கிய புண்ணியவானின் பெயர் சாருகேஷ் சேகர். கருப்பு வெள்ளை குறியீட்டுடன் இருந்த இந்தப் படத்தில் ஒரு அத்துவான மலைப் பிரதேசத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிவிட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும் இரு நண்பர்கள், ‘சரியா குத்தாம விட்டுட்டேன். உனக்கு என் கையாலதாண்டா சாவு' என்றபடி ஒருவரை நோக்கி ஒருவர் ஊர்ந்து வருகிறார்கள். எதற்கோ நேர்ந்து விடப்பட்ட ஃபீலிங்க்ஸில் ரசிகர்கள் சோர்ந்து விடுகிறார்கள்.

    நாலாவதாக நாம் நூலாவது மோனேஷ் இயக்கிய ‘நல்லதோர் வீணை செய்தே' பார்த்து. ஒரு டியூஷன் வாத்தியார், கவனிங்க டீச்சர் இல்ல. ஒரு டியூஷன் வாத்தியார் பல வருடங்களாக தன்னிடம் கற்க வரும் மாணவனிடம் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது பற்றிய கதை. அந்த வாத்தியாரை விட மோசமான மேக்கிங். இந்த ஆறு படங்களில் ஆகச்சிறந்த குப்பை இதுவே.

    Cinemakkaran Saalai 14

    ‘என்னதான் ஆச்சி இந்த கார்த்திக் சுப்பாராஜுக்கு? என்று எண்ணியபடி தியேட்டரை விட்டு எஸ்கேப் ஆகிவிடலாமா என்று யோசித்தபோது ஐந்தாவதாக வந்த ‘மது' கொஞ்சம் ஆறுதலாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். காதல் தோல்வியில் தற்கொலை செய்யப்போவதாக நண்பர்களை போதையில் மிரட்டும் ஒருவனின் மனநிலையை இயல்பான வசனங்களால் நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார் ரத்னக்குமார். சொன்னதையே சொல்லும் திரும்பத் திரும்ப சொல்லும் குடிகாரன் போலவே படத்தின் நீளம் வளவள...

    சவப் பெட்டியின் இறுதி ஆணியை அடித்தவர் சாட்சாத் கார்த்திக் சுப்பாவேதான். முன்பு ‘நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் பரிசு வென்ற அவரது ‘நீர்' படம் ஆறாவது ஆறுதலாய் அமைந்தது. இதில் தற்போது நல்ல மார்க்கெட்டில் உள்ள விஜய் சேதுபதி முக்கியப் பாத்திரத்தில் நடித்திருப்பதால் வியாபார ரீதியாய் ஆட்களை உள்ளே இழுக்க உதவும், அதன் மூலம் கொஞ்சம் காசு பார்க்கமுடியும் என்று கா.சு. நினைத்திருக்கக்கூடும். அதுக்கெல்லாம் நோ சான்ஸு பாஸ். மதுரைக்காரரான உங்களுக்கு நோகாம நொங்கு சாப்பிட முடியாதுன்ற பழமொழிய நாங்களா சொல்லித் தரணும்?

    இதற்கு முன்பு இப்படிப்பட்ட முயற்சியில் இந்திய சினிமாவில் யாரும் செய்யவில்லை என்று பேட்டிகளில் வெட்டியாக முழங்கிய கா.சு. தனது முதல் முயற்சிக்காக எவ்வித சிரத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை படங்களின் தேர்வுகளில் இருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது. இந்தப் படங்களில் சில ஏற்கனவே யூட்யூப் பக்கங்களில் இருந்தவைதான். தற்போது பெரும்பட திரையிடல் முயற்சிக்காக அவற்றை 'வெவரமாக' முடக்கியிருக்கிறார்கள்.

    அடுத்த தேர்வுகளும் இப்படியேதான் இருக்குமெனில், தனது ஸ்டோன் பெஞ்சை ஏதாவது ஒரு பார்க்குக்கு பரிசாகக் கொடுத்துவிட்டு, கார்த்திக் சுப்பாராஜ் தொடர்ந்து படங்கள் இயக்குவதில் மட்டும் கவனம் செலுத்துவது அவருக்கும் தமிழ்சினிமாவுக்கும் நல்லது.

    பி.கு: கட்டுரைக்கு இவ்வளவு கோமாளித்தனமான தலைப்பு வைத்ததற்கு இந்தப் படங்கள் பார்த்த மனநிலையே காரணம். இதற்கு அடுத்த கட்டுரைகளில் இந்த அநியாயம் நிகழாது என்று உங்க தலைமேல் அடித்து சத்தியம் செய்கிறேன்!

    (தொடர்வேன்...)

    English summary
    The 14th Episode of Muthuramalingan's Cinemakkaran Saalai analysingDirector Karthik Subbaraj's new effort of compiling 6 Short Films as amain film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X