twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாக்காரன் சாலை 13: 'சற்றென்று மாறிய வானிலை!’

    By Shankar
    |

    கவிஞர் தாமரை, அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால், இன்றோடு ‘தெருவுக்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது.

    அவர் போராட இறங்கிய முதல் நாள் தொடங்கி நேற்றுவரை, இது குறித்து, ஒரு பத்து வரி எழுத ஆரம்பிப்பதும், பின்னர் தயங்கி, அதை அழித்து விடுவதுமாகவே இருந்தேன். ஒரு கம்பீரமான தமிழ் தேசியவாதியான தியாகு, தாமரையின் பின்னால் எப்போதும் ஒரு பவ்யமான பூனைக்குட்டி போல் திரிந்த காட்சிகளை பல தருணங்களில் காண நேர்ந்ததால் ஏற்பட்ட தயக்கம் அது. ‘சற்றென்று மாறிய வானிலை'யை பாட்டாக கேட்டு மட்டுமே ரசிக்க முடிகிறது. உண்மை நிலையோ ஜீரணிக்க முடியாத அளவில் இருக்கிறது.

    நாலு சுவருக்குள் அவர்கள் இருவர் மட்டுமே அமர்ந்து பேசித் தீர்த்திருக்க வேண்டிய சித்திரம் இது. யாரால் அது சாத்தியப்படாமல் போனது என்பது புரியவில்லை.

    Muthuramalingan's Cinemakkaran Saalai -11

    ஆனால் இன்று இணையத்தில் தாமரையின் போராட்டம் குறித்து ஆயிரக்கணக்கான பதிவுகளும் லட்சக்கணக்கில் கமெண்டுகளும் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டன.

    தாமரை தன் குடும்ப பிரச்சினைக்காக, தனது சின்னஞ்சிறு பாலகனுடன் தெருவில் இறங்கிப் போராடுவதை பெரும்பாலானோர் ஏற்கவில்லை என்பதை அந்தப் பதிவுகளிலும் கமெண்டுகளிலும் புரிந்துகொள்ள முடிகிறது.

    அதுவும் குறிப்பாக அவரது ‘தமிழை நேசித்தேன். தெருவுக்கு வந்துவிட்டேன்' பேனர் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. தமிழை நேசித்ததற்கும் தெருவுக்கு வந்ததற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஒருவேளை தியாகுவிற்கு தமிழ் என்றொரு பெயரும் இருக்குமானால் அதையாவது தாமரை பொதுவெளியில் சொல்லியிருக்க வேண்டும்.

    'இல்லையில்லை தமிழ் மொழியைத்தான்' என்றால் தாமரை தமிழுக்கு செய்த சேவை என்பது சினிமாவுக்கு பாடல்கள் எழுதியது என்பது மட்டுமே.தமிழ் 'ஒருநாள் சிரித்தேன்... மறுநாள் வெறுத்தேன்...உனைக் கொல்லாமல் கொன்று குவித்தேன்..' என்று சினிமா நாயகனும் நாயகியும் உருகி உருகி காதல் வளர்த்துக் கொண்ட பாடல்கள்.

    Muthuramalingan's Cinemakkaran Saalai -11

    மற்றவர்கள் போல் இல்லாமல் ஆங்கில வார்த்தைகள் கலப்பின்றி பாடல் எழுதியதென்பது எப்படி தமிழுக்கு செய்த சேவையாகும்? இவர் பாடல்கள் தமிழ் மொழிக்கு சேவை என்கிற தரத்தில் இருந்தது என்று அவர் நம்புவாரானால் உலகின் ஆகச் சிறந்த காவியங்கள் கொண்ட தமிழ் மொழியை இதைவிட யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது.

    இன்னும் சொல்லப் போனால், 1999-ல் சீமானால் ‘இனியவளே' படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டு கவுதமின் ‘மின்னலே' படம் மூலம் புகழ்பெற்று கடந்த 16 ஆண்டுகளாக சுமார் ஐநூறு பாடல்களுக்கும் மேலாக எழுதி ஒரு பாடலுக்கு ஐந்தாயிரம் முதல் ஐம்பதினாயிரம் வரை வாங்கி பல லட்சங்கள் சம்பாதித்து தமிழால் உண்டு சொகுசாக வாழ்ந்தவர் தாமரை.

    எனவே சொந்த வாழ்க்கைப் பிரச்சினைக்காக தமிழைக் 'கையைப் புடிச்சி இழுத்து' தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்துவதை தாமரை உடனே நிறுத்த வேண்டும். இந்த பலவீனமான யுக்தி அவருக்கு, அவர் போராட்டத்துக்கு வலு சேர்க்காது என்பது மட்டுமின்றி, அவரை எள்ளி நகையாடவே உதவும்.

    Muthuramalingan's Cinemakkaran Saalai -11

    இனி பிரச்சினைக்கு வரலாம். சமூகப்போராளி, புரட்சியாளர், தமிழ் தேசியவாதி என்று சொல்லிக் கொள்ளும் தன் கணவர் தியாகு தனக்கும், தன் குழந்தை சமரனுக்கும் துரோகம் செய்துவிட்டு தலைமறைவாக வாழ்கிறார். அவரைத் தேடி கண்டு பிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார் தாமரை. இது முதல் கோரிக்கை. இரண்டாவது தியாகுவின் கடந்த இருபது ஆண்டுகால பொது வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது.

    முதல் நாள் தியாகுவின் அலுவலகத்தில் துவங்கிய போராட்டத்தை அடுத்த நாள் தியாகுவின் இருப்பிடம் தெரிந்து கொண்டு வேளச்சேரிக்கு மாற்றுகிறார். அடுத்த நாள் தியாகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக அறிக்கை வெளியிட்டு விட்டு வள்ளுவர் கோட்டத்துக்கு மாற்றுகிறார்.]

    இடையில் தியாகு ஒரு சில ஊடகங்களுக்கு பேட்டியில், ''சேர்ந்து வாழும் சாத்தியம் துளியும் இல்லை. நான் மரணத்தின் விளிம்பில் இருக்கிறேன். என்னை விட்டு விடு'' என்று அளிக்கும் பதிலை தாமரை பொருட்படுத்துவதாயில்லை. குற்றவாளி கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

    தியாகு தப்பி ஓடுவதும் தாமரை அவரை விடாமல் துரத்திக் கொண்டு அலைவதுமான அவர்களது விளையாட்டில், இருவருமே வெளியில் பகிர்ந்து கொள்ளாத ஏதோ ஒரு உள்ளடி சமாச்சாரம் இருப்பதாகவே தோன்றுகிறது. அதைப்பற்றி நமக்கு அக்கறை இல்லை.

    ஆனால் சந்திக்கவே அஞ்சி ஓடும் ஒருவரை சேர்ந்து வாழ வேண்டும் என்று நிர்பந்தப்படுவது என்ன வகை மனோபாவம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை?

    எனக்குத் தெரிந்து கடந்த மூன்றாண்டு காலமாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவ ஆரம்பித்துவிட்டது. அப்போதிருந்தே தியாகு வேறு சில பெண்களுடன் 'தொடர்பில்' இருப்பதாகவும், சில பெண்களுக்கு மீடியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி தரக் குறைவாக நடக்க முயன்றதாகவும் தாமரை ஆதரவாளர்கள் இணையங்களில் வெளியிட்ட சில வீடியோக்கள் நடமாடின.

    அவற்றிற்கு தியாகு அளித்த விளக்கங்கள் எடுபடவில்லை என்பதும் உண்மை.

    இப்போது தியாகுவின் கடந்த இருபதாண்டு கால பொது வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற தாமரையின் கோரிக்கை இதை ஒட்டியதுதான் என்றால் மீதி பதினேழு ஆண்டுகால சாட்சியாக தாமரையேதானே இருந்தார்? அதை வெளியிடாமல் எதற்காக காத்திருக்கிறார்?

    'என்னை அவலத்தில் தள்ளி விட்டுவிட்டு நீ மட்டும் எப்படி நிம்மதியாக இருக்கலாம்?' என்று தியாகுவைத் துரத்தும் தாமரையின் தியரியை ஒரு மாதிரி புரிந்து கொண்டாலும், ஒன்றும் அறியாத சிறுவன் சமரனை வீதியில் அமர்த்தி வேடிக்கைப் பொருளாக்கும் மனநிலையை எவ்விதமாக யோசித்தாலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

    இதில் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்துக் கொள்ளத் தெரியாமல் பயந்து ஓடும் தந்தை தியாகுவை விட, தாய் தாமரை பரிதாபத்துக்குரியவராகவே தெரிகிறார்.

    சுயநலவாதிகள் தியாகு, தாமரை இருவரிடமிருந்தும் சமரனுக்கு ஒரு விடுதலையை ஏற்படுத்திக் கொடுக்க தமிழ் ஆர்வலர்கள் யாராவது முன்வந்தால் அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டு!

    (தொடர்வேன்... )

    English summary
    The 11th episode of Muthuramalingan's Cinemakkaran Saalai critically analysed the issue of Lyricist Thamarai - Thiagu relationship and protests.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X