twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாக்காரன் சாலை- 5 ‘பட்டு வேஷ்டியிலிருந்து பழைய கோவணத்துக்கு…'

    By Shankar
    |

    -முத்துராமலிங்கன்

    கடந்த கட்டுரைக்கு வந்தவைகளில் ‘இப்படி வாரா வாரம் ஒரு கிறுக்கன் எழுதி நம்மள கொல்றானே' என்ற ராஜியின் கமெண்ட்தான் நான் மிகவும் ரசித்தது.

    ஒரு திருத்தம். வாரா வாரம் இல்லை. வாரத்துக்கு ரெண்டு வாட்டி இந்த கொலைகார சம்பவம் நடக்கும். இதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனாலோ அல்லது ஆலமரத்தடி பஞ்சாயத்துகளுக்கு அழைத்தாலோ நான் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்.

    முதல் படம் எடுக்க வருபவர்கள் தயாரிப்பாளர் கவுன்சில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியதில்லை' என்று சொன்னேனே அந்த தகவலை கேள்விப்பட்டால் மெம்பர்களில் பாதிப் பேராவது அறச்சீற்றம் கொள்வார்கள். மீதிப் பேர் 'சர்தாண்டா ராசா, மேல பாடு' என்று மனசார வாழ்த்துவார்கள்.

    Muthuramalingan's Cinemakkaran Saalai -5

    புதுப் படம் எடுக்கும் புண்ணியவான்கள் சில நூறு கோடிகளைத் தொடர்ந்து இழந்து வருந்துவது குறித்து கடந்த பதிவில் எழுதியிருந்தேன். அதில் 'உண்ணாம திண்ணாம அண்ணாமலைக்கு அரோகரா' என்பார்களே அப்படிப்பட்ட ‘வெட்டிச் செலவு' என்பது கண்டிப்பாக பாதிக்கு மேல் இருக்கும்.

    படம் முடிந்து, கதை முடிந்து, வேலவெட்டி எதுவுமில்லாமல் ஆபிஸில் மோட்டுவளையத்தை வெறித்துக் கொண்டிருப்போமே, அந்தப் பார்வையை கொஞ்சம் டவுன் பண்ணி, அதற்குப் பதில் படத்திற்காக, என்னவெல்லாம் செலவழித்தோம் என்று கணக்குப் பாருங்கள் அப்போது தெரியும், எவ்வளவு வெட்டிச் செலவுகள் நடந்து முடிந்தன என்று. கேரவனுக்கு செலவழித்த எட்டு லட்சத்தை வேறெவனோ சாப்பிட்டிருப்பான். ஸ்டார் ஹோட்டல்களுக்கு செலுத்திய பில் அமவுண்டுக்கு சொந்த ஊரில் ஹோட்டல் கட்டியிருக்கலாம். இப்படி எத்தனையோ.

    நானும் கூட, இன்றுவரை பேட்டா வாங்குகிற தொழிலாளிதான் என்றாலும், நீண்ட நெடுங்கால பிரச்சினையான இதைப்பேசித்தான் ஆகவேண்டும். பெப்ஸி மெம்பர்களுக்கு, ஸ்லீப்பிங் பேட்டா, ட்ராவல்லிங் பேட்டா, டபுள் பேட்டா, ட்ரிபிள் பேட்டா, சிறு பிரச்சினையானாலும் ஷூட்டிங்கை நிப்பாட்டட்டா' என்று விதவிதமான பேட்டா கொடுத்தே படம் ரிலீஸானவுடன் சொந்தமாக ஒரு பேட்டா செருப்பு கூட இல்லாமல் வீதியில் அலையும் முன்னாள் தயாரிப்பாளர்கள் இங்கே பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்.

    உதாரணத்திற்கு 70 கோடி செலவில் எடுக்கப்படும் அஜீத் படத்துக்கு, சாப்பாடு பரிமாறும் புரடக்‌ஷன் ஆட்கள் ஒரு நாளைக்கு 4 பேருக்கு பத்தாயிரம் ரூபாய் பேட்டா எழுதுவார்கள் என்றால், 60 லட்ச ரூபாய்க்கு தயாரிக்கப்படும் படத்துக்கும் அதே 4 பேர் வந்து அதே பத்தாயிரம் ரூபாய் பேட்டா எழுதுவார்கள். 4 பேருக்குப் பதில் மூன்று பேர் போதும் என்றால் யூனியன் ஒத்துக்கொள்ளாது. ஷூட்டிங்கை நிறுத்துவார்கள். ஆர்ட் டிபார்ட்மெண்டிலும் இதே பஞ்சாயத்துதான். ‘இன்னைக்கு ஆர்ட் டிபார்ட்மெண்டுக்கு வேலையே இல்லை. பறவைகள் ஆகாயத்துல பறக்குற ஷாட்ஸ் மட்டுமே எடுக்கப்போகிறோம்' என்றாலும் பறந்து வந்து 2 செட் அசிஸ்டெண்ட், 2 ஆர்ட் அசிஸ்டெண்ட் என்று 4 பேர் வந்து சும்மா உட்கார்ந்திருந்து மத்தியானம் லஞ்ச் முடிந்தவுடன் பேட்டா நோட்டை எடுத்து தயாரிப்பாளரின் கணக்கை முடிப்பார்கள். ஸ்டண்ட் யூனியனும், டான்ஸர் யூனியனும் எல்லா நாளும் நான்வெஜ் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள்.

    இந்த சட்டதிட்டங்களை சின்னப் படம், பெரிய படம் என்று பிரிக்க நினைக்கும் போதெல்லாம் அந்த முயற்சிகள் படுதோல்வியில் தான் முடிந்திருக்கின்றன.

    Muthuramalingan's Cinemakkaran Saalai -5

    அதனால் இப்படி வீணாகும் பெரும் பணத்தை சிக்கனம் செய்ய, இனி புதிதாய் படம் எடுக்க விரும்புபவர்களுக்கு ஒரு சின்ன யோசனை. இதை புத்திக் கொள்முதல் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு ‘சு'தந்திர சினிமா என்று இப்போதைக்கு டம்மியாய் ஒரு பெயர் வைத்துக்கொள்வோம்.

    ஊர்ப் பக்கம் எடுப்பவர்கள் என்றில்லாமல், ரெகுலர் சினிமாவில் இருப்பவர்களில் ஒரு சிலரும் கூட, டிஜிடல் என்று ஆனபிறகு பெப்ஸியின் கெடுபிடி சட்டதிட்டங்கள் எதையும் பின்பற்றாமல் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக படங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குறும்பட போர்வையில் பெரும்படம் எடுக்கும் தந்திரங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

    தகவல் தெரியாமல் இருப்பதாலும், படங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் வேலை பிஸியாக இருப்பதாலும் பெப்ஸியின் பார்வையில் படாமல் இப்படி சில படங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ரெகுலர் சினிமா எடுக்க விரும்புபவர்கள், தங்களது முதல் முயற்சியை இப்படி சிக்கனமாக அமைத்துக்கொண்டால் பட்டுச் சட்டையும் வேஷ்டியுமாய் படமெடுக்க வந்துவிட்டு பழைய கோவணத்தோடு திரும்பும் அவலத்தை தவிர்க்கலாம்.

    ஹோட்டல்களில் ரூம் போடாமல் ஊரில் சொந்த இடங்களில் இருந்துகொண்டே கதையைத் தயார் செய்யுங்கள். அது நல்ல கதையாக மாற ஏழெட்டு மாதங்கள் ஆனாலும் தப்பில்லை. பணம் பிடுங்கும் நடிகர்கள் வேண்டாம். அவர்களை விட எவ்வளவோ திறமையான நடிகர்கள் உங்கள் ஊரிலேயே இருக்கிறார்கள். லொகேஷன்களும் உங்க ஊர், பக்கத்து ஊர், நண்பர்களின் வீடு என்று இருக்கட்டும். இப்படியே பல விஷயங்களைச் சும்மாவே சாதித்துக் கொள்ளமுடியும். அதன் பின்னரே படப்பிடிப்புக்கு கிளம்புவது பற்றி யோசிக்கலாம். படப்பிடிப்பு என்றால் ஒரு பெருங்கூட்டம் இருந்துதான் ஆகவேண்டுமென்ற அவசியம் இல்லை.

    Muthuramalingan's Cinemakkaran Saalai -5

    இன்றைக்கு இருக்கிற டிஜிடல் சவுர்யங்களால் சுமார் இருபது முதல் நாற்பது லட்ச ரூபாய்க்குள் ‘களவாணி', 'கோலிசோடா' ‘மூடர்கூடம்' மாதிரியான படங்களை எடுத்துவிட முடியும்.

    படம் எப்படி இருக்கிறது என்று சரியாக விமர்சிக்கும் நண்பர்கள் பத்துப் பேருக்கு படம் ஓட்டிக் காட்டுங்கள். அவர்கள் ‘ஓகே' சொன்னால், அடுத்து வேட்டிய மடிச்சிக்கட்டி முழுமூச்சாக சினிமா செய்ய இறங்கலாம்.

    'ஓடுகிற சினிமா எடுக்க இப்படி காத்திருந்து வருவதுதான் நல்லது... அதற்குள் சினிமா எங்கும் ஓடிவிடாது!

    (தொடர்வேன்..)

    தொடர்புக்கு: [email protected]

    English summary
    The 5th part of Muthuramalingan's Cinemakkaran Saalai gives some tips to new film makers how to make a good cinema in minimum budget.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X