» 

'எடுக்கிறது வெட்டறது ஒட்டறதுதாதன் டைரக்ஷன்..' - விஜயகாந்தின் விளக்கம்

சினிமாவில் டைரக்ஷன் என்பது எடுக்கிறது வெட்டறது ஒட்டறதுதான் என்றார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த்.

மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் கோரிப்பாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய்காந்த் பேசியது:

பொதுவாக சினிமா விழாக்களில் நான் பங்கேற்பதில்லை. அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா செய்திகளைக் கூட பத்திரிகைகளில் படிப்பதில்லை. யார் நடிக்கிறார்கள், யார் புதிய டெக்னீஷியன்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. இந்த கோரிப்பாளையம் படத்தை தயாரிக்கிற மைக்கேல் ராயப்பன் என் கட்சிக்காரர் என்பதால் வந்தேன்.

சினிமா விழாக்களுக்கு வருவதால் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. பாவம் உங்களுக்குத்தான் பிரச்சினை. தேவையில்லாத தொந்தரவுகள் வரக்கூடும். அதனால்தான் விலகியிருக்கிறேன்.

இந்தப் படம் கோரிப்பாளையம் பேரைக் கேட்டதும் எனக்கு பழைய நினைவுகள் வந்துடுச்சி. நான் மதுரைக்காரன். அந்த மண்ணுலயே பிறந்து வளர்ந்தவன். கோரிப்பாளையம் எப்பேர்ப்பட்ட இடம்னு மதுரைக்காரங்களுக்குத் தெரியும்.

இன்னிக்கு எந்தப் படமா இருந்தாலும் அது மதுரைக்காரங்க படமா இருக்கு. மதுரையில் ஷூட்டிங் பண்ணிட்டுதான் வராங்க. நான் 153 படம் பண்ணிட்டேன். அகல் விளக்கு, தாயகம்னு ரொம்ப குறைவான படங்கள்தான் மதுரையில வச்சி எடுத்தோம். ஆனா இன்னிக்கு யார் யாரோ மதுரையில எடுக்கறாங்க. நான்தான் எடுக்காம இருக்கேன்...

இங்கே விநியோகஸ்தர்கள் சிரிச்சாதான் அந்தப் படம் வெற்றிப் படம் என்று சொன்னார்கள். அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஜனங்க நல்லாருக்குன்னு சொல்லணும். ஜனங்க சிரிக்கனும்.. சந்தோஷமா இருக்கணும். அதுதான் நல்ல படம். நமக்காகவே படம் எடுத்தா எப்பிடி.. ஜனங்களுக்காக எடுக்கணும். இன்னொன்னு சிக்கனமா எடுக்கணும். சும்மா 200 ரோல் 300 ரோலுக்கு சினிமா எடுத்து வெட்டி வீசிக்கிட்டிருக்கக் கூடாது. என்ன எடுக்கறோம்னு திட்டம் போட்டு எடுத்தா சிக்கனமாகவும் எடுக்கலாம் சீக்கிரமாவும் எடுக்கலாம், லாபமும் பார்க்கலாம்.

அடுத்து நான் இயக்குநராக மாறியிருப்பதற்கு வாழ்த்துச் சொன்னார்கள். நான் எப்பவுமே சீக்கிரமா எடுக்கணும்னு சொல்ற ஆளு. நான் 5 வாரத்துக்குள்ள எடுத்துக் கொடுத்துடக் கூடிய ஆளு. எங்க டைரக்டர் ராம நாராயணன் மூன்றே வாரங்கள்ல எடுத்துக் கொடுத்துடுவார். ஆனா வெற்றிப் படமாத்தான் கொடுப்போம்.

டைரக்ஷன்னா என்னங்க... எனக்குத் தெரிஞ்ச டைரக்ஷன் எடுக்கறது வெட்டறது ஒட்டறதுதான். அதை சரியா பண்ணனும்... ஜனங்களுக்குப் பிடிச்சது எதுன்னு தெரிஞ்சுக்கிட்டு எடுக்கணும்...

இங்கே சேரனும் லாரன்ஸும் டிவி விஷயத்தில் மோதிக்கிட்டாங்க. இப்ப நான் அதைப் பத்திப் பேசினா தேவையில்லாம பிரச்சினை வரும். அதை வேறு மேடையில் நான் பேசுவேன்..." என்றார் விஜய்காந்த்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், இயக்குநர்கள் ராஜ்கபூர், ராசு மதுரவன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். மக்கள் தொடர்பாளரும் படத்தின் வர்த்தகப் பொறுப்பாளருமான பி டி செல்வகுமார் வரவேற்றுப் பேசினார்.

Read more about: audio launch, ஆடியோ வெளியீடு, கோரிப்பாளையம், டைரக்ஷன், விஜயகாந்த், goripalayam, vijayakanth
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos