twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முடிந்தால் எழுந்து வாருங்கள் அய்யா...! - கே பாலச்சந்தருடன் பேசிய கமல் ஹாஸன்!

    By Shankar
    |

    பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவால் நேற்று மயிலாப்பூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரை, ரஜினிகாந்த், குஷ்பு, மனோபாலா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவர் நலமுடன் இருப்பதாகவும், சீக்கிரம் எழுந்து வருவார் என்றும் அவரை நலம் விசாரித்தவர்கள் கூறினர்.

    Kamal Hassan's speeks on his phone conversation with K Balachander

    இந்நிலையில், உத்தமவில்லன் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமலுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் வீடியோ பதிவொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

    அதில், கமல் பேசியிருப்பதாவது:

    கமல்.. சீக்கிரம் படத்தை முடித்துக் காட்டு, பார்த்துவிட்டுப் போகிறேன் என்று இரட்டை அர்த்தம் எதுவுமில்லாமல் ஒரே அர்த்தத்தில் சொன்னார் கே.பி. அவர் உத்தமவில்லன் படம் பார்க்கத் துடித்ததின் வேகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

    இங்கே, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படத்தின் முக்கிய இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, கே.பாலச்சந்தர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி என்னை வந்து அடைந்தது.

    அவருடைய உதவியாளர் மோகனிடம் விசாரிக்கத்தான் கூப்பிட்டேன். அவர், ஆமாம் சார்... கிரிட்டிக்கல்னு சொல்றாங்க. நினைவிருக்கிறது, ஆனால் 3 நாட்களாக யாரிடமும் அவர் பேசவில்லை. நீங்கள் வேண்டுமானால் பேசிப் பார்க்கிறீர்களா? என்று முன்னெச்சரிக்கை எதுவுமில்லாமல் கைப்பேசியை கே.பாலச்சந்தரிடம் கொடுத்துவிட்டார் மோகன்.

    ஹலோ என்று அவரது குரல் மெலிதாக வந்தது. கிட்டத்தட்ட 43 வருடங்களாக கேட்டுப் பழகிய குரல். எத்தனை பழுதுபட்டாலும் அடையாளம் புரிந்தது எனக்கு. சார் படவேலை நடந்துக்கிட்டிருக்கு. முடிச்சுட்டு வந்துடறேன். பார்த்துக்கங்க என்றேன்.

    அதற்கு பிறகு நீண்டநேரம், கிட்டத்தட்ட ஒன்றரை நிமிடம், அவர் இருந்த நிலையில் அது நீண்ட நேரம்தானே. அவர் பேசியது எதுவுமே எனக்குப் புரியவில்லை. ஆனால், புரிந்ததுபோல் அவர் பேச்சுக்கிடையில் சரியான தருணம் பார்த்து இடைவேளையில் சரி, ஆகட்டும் சார், என்று தோராயமாக சொல்லி வைத்தேன். சற்று நேரத்தில் தவறான இடங்களில் ஆமோதிக்கிறேன் என்று இருவருக்குமே விளங்கியபோது மெலிதாகச் சிரித்தார். எனினும், தொடர்ந்து கொஞ்சம் பேசிவிட்டு செல்போனை உதவியாளரிடம் கொடுத்தார்.

    மோகன், ஆச்சர்யமாக இருந்தது சார், பேசிவிட்டார் சார். நாளைக்கும் கூப்பிடுங்கள் சார், இன்னும் தெளிவாக பேசினாலும் பேசுவார் என்றார் குரல் தழுதழுத்தபடி.

    அடுத்தநாள் பேசக் கூப்பிட்டபோது கே.பி.யின் மகன் பிரசன்னா பேசினார். "நான் பிரசன்னா பேசுறேன்" என்றார். உன் பாத்திரத்தின் பெயர் பிரசன்னா, என்று 40 வருடத்துக்கு முன்னால் ஒரு புன்னகையுடன் கே.பி., அபூர்வ ராகங்கள் படத்தின் பாத்திரத்தை எனக்கு விளக்கிய காட்சி மின்னி மறைந்தது.

    இரண்டு சகோதரர்கள் தங்களது தந்தையார் கவலைக்கிடமாக கிடக்கையில் என்னென்ன பேசுவார்களோ, அனைத்தையும் பேசினோம். உடனே சென்னை புறப்பட பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார் கவுதமி. என் மூத்தவர் சந்திரஹாசனிடம் பேசினேன்.

    நான் வந்து சாதிக்கக்கூடியது ஒன்றும் இல்லை. எனக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் இத்தருணத்தில் உதவாது. சரியாகச் சொன்னால், படிக்காமல் வாங்கிய எந்த பட்டமும் எத்தருணத்திலும் உதவாது. வேலையை முடிக்காமல் வருவதை நான் மட்டுமல்ல, நான் தொழில் கற்க உதவிய கே.பி.யும் விரும்ப மாட்டார். எனது ஆர்வமெல்லாம் முடிந்தால் முதலில் படத்தை அவருக்கு போட்டுக் காட்டவேண்டும்.

    இரண்டாவது, அது முதலாவதை விட முக்கியமானது. தொலைபேசியில் அந்த ஒன்றரை நிமிடம் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை நான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒருவேளை இவ்விரண்டும் இயலாமல் போனால் அவர் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று என்னால் யூகிக்க முடியும். அந்த புரிதலை அவருடன் நான் பழகிய 43 வருடங்கள் எனக்கு வழங்கியிருக்கிறது.

    இன்னும் பல ஆண்டுகள் கே.பி. அவர்கள் மக்கள் மனதில் தெளிவாக நினைவிருக்கும்படி செய்யும் மற்றுமொரு படம் உத்தமவில்லன். எங்கள் நேசத்தின் மற்றுமொரு பாசக் கடிதம் ‘உத்தமவில்லன்'. 36 வருடங்களில் அவரிடம் பெற்ற அனுபவம் இன்னும் பல வருடங்கள் கைகொடுக்கும் எனக்கு.

    இந்த எழுத்துகூட வேலைக்கு நடுவில்தான் நடக்கிறது. எனக்கு நான் விரும்பும் கலையில் நல்ல இடத்தை தேடித்தந்த என் ஆசானுக்கு வணக்கங்கள் என்றும்போல். முடிந்தால் மீண்டும் எழுந்து வாருங்கள் அய்யா. உங்கள் கமல்."

    English summary
    Here is the script of Kamal Hassan's full video speech on his phone conversation with K Balachander who is in serious condition.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X