twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ 85 லட்சம் மோசடி... பவர் ஸ்டார் சீனிவாசன் கைது... புழல் சிறையில் அடைப்பு!

    By Shankar
    |

    Powerstar Srinivasan
    சென்னை: பவர் ஸ்டார் எனும் நடிகர் சீனிவாசன், ரூ 65 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்றக் காவலில் புழலில் அடைக்கப்பட்டார்.

    பவர் ஸ்டார் சீனிவாசன், லத்திகா பிலிம்ஸ் (பி) லிட் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் லத்திகா என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் அவரே நடிக்கவும் செய்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். மேலும் இந்த படத்தின் மூலம் அவர் பவர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார்.

    பவர் ஸ்டார் சீனிவாசன், கடந்த 6 மாதத்திற்கு முன் குரோம்பேட்டை கணபதிபுரம், கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டார். இவர் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    ரூ.65 லட்சம் கமிஷன்

    பாலசுப்பிரமணியத்திற்கு வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக பிரபல அரசு வங்கி ஒன்றில் 10 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக நடிகர் சீனிவாசன் கூறினார். அதற்காக அவரிடம் இருந்து ரூ.65 லட்சம் கமிஷனாக பெற்றார்.

    அதன் பிறகு 2 மாதமாகியும் கடனும் வாங்கி கொடுக்க வில்லை, கமிஷன் தொகையும் திருப்பி கொடுக்க வில்லை. பின்னர் 2 தடவையாக ரூ.15 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க வில்லை.

    இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் கடந்த ஜுலை மாதம் 11-ந் தேதி சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகார் பற்றி விசாரிக்குமாறு கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு ஆணையிடப்பட்டது.

    மேலும் 2 புகார்கள்

    அந்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கோவாவை சேர்ந்த வில்சனிடம் ரூ.3 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.15 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாகவும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகவும் மேலும் 2 புகார்கள் நடிகர் சீனிவாசன் மீது தெரிவிக்கப்பட்டன.

    நடிகர் சீனிவாசன் கைது

    இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோ.சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் நடிகர் சீனிவாசனை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

    அவரது காரை போலீசார் அமைந்தகரை பகுதியில் மடக்கி பிடித்து நடிகர் சீனிவாசனை கைது செய்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    15 நாள் நீதிமன்ற காவல்

    விசாரணையின் போது மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும், 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் நடிகர் சீனிவாசன் கூறினார். ஆனால் புகார் கொடுத்தவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

    பின்னர் கீழ்ப்பாக்கம் போலீசார், அவரை எழும்பூரில் உள்ள 13-வது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி நடிகர் சீனிவாசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். உடனடியாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் வழக்கு

    ரூ.85 லட்சம் மோசடி வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சீனிவாசன் மீது, 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி போன்ற சட்டப்பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் விசாரணையில் தன்னிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்று நடிகர் சீனிவாசன் மறுத்தார்.

    English summary
    Dr Srinivasan, an actor called in the name of power star has been arrested by the City police on Friday in a cheating case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X