»   »  முத்து... சேது... குத்துப்பாட்டு ஜோதிலட்சுமியை மறக்கமுடியுமா?

முத்து... சேது... குத்துப்பாட்டு ஜோதிலட்சுமியை மறக்கமுடியுமா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி நடித்த முத்து கொக்கு சைவ கொக்கு... என்று கவர்ச்சி நடனம் ஆடியவர் நடிகை ஜோதிலட்சுமி. கானக்கருங்குயிலே..... கச்சேரிக்கு வர்றீயா... வர்றீயா... என்று சேதுவில் கூப்பிட்டு குத்தாட்டம் போட்டு கலக்கிய நடிகை ஜோதிலட்சுமி இப்போது நம்மிடையே இல்லை.

வயசானாலும் அழகும் கவர்ச்சியும் மாறவேயில்லை என்ற வார்த்தைக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார் ஜோதிலட்சுமி. அழகான புடவைகள்... அதற்கேற்ப மேட்ச் ஆன அலங்கார அணிகலன்கள் அணிவதில் அவருக்கு நிகர் அவர்தான்.

பழம் பெரும் நடிகை ஜோதிலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அந்தக்கட்டத்தில் வெளிவந்த எல்லாப்படங்களிலும் ஒரு கேபரேடான்ஸ் வைக்கவேண்டுமென்பது தமிழ்சினிமாவின் எழுதப்படாத விதியாக இருந்தது.

எம்.ஜி.ஆர் படத்தில் அறிமுகம்

1963-ல் எம்.ஜி.ஆர். நடித்த பெரிய இடத்து பெண் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். பூவும் பொட்டும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

காலத்தை வென்றவன் நீ

எம்.ஜி.ஆரின் ரிக்ஷாகாரன் படத்தில், ‘பம்பை உடுக்கை கட்டி...' என்ற பாடலுக்கும், அடிமைப்பெண் படத்தில் ‘காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ...' என்ற பாடலுக்கும் நடனம் ஆடி பிரபலம் ஆனார்.

நீரும் நெருப்பும்

மேலும் எம்.ஜி.ஆருடன் நீரும் நெருப்பும், தேடிவந்த மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன் ஆகியோருடன் கறுப்பு வெள்ளை படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

ரஜினியின் கொக்கு சைவக் கொக்கு

மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி மீனாவிற்கு வாய்ப்பு கேட்கப் போன ஜோதிலட்சுமிக்கு ரஜினி நடித்த முத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கொக்கு சைவக் கொக்கு பாடலுக்கு நடனமாடினார் ஜோதிலட்சுமி.

சேதுவின் கானக்கருங்குயிலே

விக்ரம் நடித்த சேது படத்தில் கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்றீயா...என்று கேட்டு நடனமாடி கலங்கடித்தார் ஜோதிலட்சுமி. பல திரைப்படங்களில் வயதான கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார்.

உடல் நலக்குறைவு

ஜோதிலட்சுமிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த புற்று நோயால் அவதிப்பட்டார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 68 வயதாகும் ஜோதிலட்சுமி நேற்று இரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இன்று இறுதிச் சடங்கு

ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

English summary
Item dancer and supporting actress Jyothilakshmi passed away today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos