twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்.வி.சேகரின் வேகம்!

    By Staff
    |

    எனது மகன் அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் வேகம், வித்தியாசமான படமாக இருக்கும். தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய பாணியை உருவாக்கும் என்று பெருமையுடன் கூறுகிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

    சினிமாவிலும், நாடகங்களிலும் தனக்கெனி தனி முத்திரை பதித்தவர் எஸ்.வி.சேகர். நாடக உலகில் இவர் படைத்த சாதனைகள் பல.

    தற்போது எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் நாயகனாக அறிமுகமாகிறார். தனது மகனை ஹீரோவாக்கி சேகர் தயாரித்துள்ள படம்தான் வேகம்.

    ஆக்ஷனும், குடும்பப் பாங்கான கதையும் கலந்ததாக வேகம் அமைந்துள்ளதாக சந்தோஷத்துடன் கூறுகிறார் சேகர். செப்டம்பர் முதல் வாரத்தில் படம் திரைக்கு வருகிறது.

    தட்ஸ்தமிழ் வாசகர்களுக்காக எஸ்.வி.சேகர் கொடுத்த சிறப்புப் பேட்டி...

    வேகம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படமாக இருக்கும். படத்தின் டைட்டிலில் தொடங்கி முடிவு வரை படம் நல்ல வேகத்தில் செல்லும். படத்தின் ஷூட்டிங்கையும் கூட மூன்றே மாதங்களில் முடித்து விட்டோம். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக உள்ளோம்.

    மலேசியாவில் ஒரு பெண் கடத்தப்படுகிறார். அவரை 12 மணி நேரங்களில் அடையாளம் தெரியாத ஒரு இளைஞன் மீட்கிறான். எப்படி அவன் மீட்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

    காலையில் ஆரம்பித்து மாலையில் முடிவது போல படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளோம். படத்தின் வேகம் குறித்து இப்போது நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

    மலேசியாவைச் சேர்ந்தவராக குஷ்பு நடிக்கிறார். கடமை தவறாத காவல்துறை அதிகாரி வேடத்தில் பிரபு நடித்துள்ளார். இருவரும் இப்படத்தில் ஜோடியாக நடிக்கவில்லை.

    அஸ்வினைப் பொருத்தவரை சிறப்பாக நடித்துள்ளார். ஆர்வத்துடன் நடித்துள்ளார். பல காட்சிகளில், அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல நடித்துள்ளார். அவர் நடித்த காட்சிகளில் முக்கால்வாசியை முதல் டேக்கிலேயே இயக்குநர் ஓ.கே. சொல்லி விட்டார்.

    இப்படியெல்லாம் நடிக்க கடந்த இரு வருடங்களாக அஸ்வின் நிறைய ஹோம் ஒர்க் செய்து தயாராக இருந்ததுதான் காரணம்.

    செப்டம்பரில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம். ஆகஸ்ட் 14ம் தேதி ஆடியோ ரிலீஸ் செய்யப்படும். இப்படம் வெளியானதும், அஸ்வினை வைத்து நான் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். இயக்கத்தில் இதுதான் எனது முதல் படம்.

    இதுதவிர மேலும் சில இயக்குநர்கள் அஸ்வினை வைத்து இயக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். வெளி இயக்குநர்களின் கதை சிறப்பாக இருந்தால் எனது இயக்கத்தில் அஸ்வின் நடிக்கும் படத்தை சற்றே ஒத்திவைக்கத் திட்டமிட்டுள்ளேன்.

    இதெல்லாம் எனது மகன் சிறந்த நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறேன்.

    மலேசியாவில் நடந்த ஷூட்டிங் சற்றே எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. அங்குள்ள அரசு, எங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தரவில்லை. அது எனக்கு திருப்தியைத் தரவில்லை.

    இதை நான் புகாராக சொல்லவில்லை. மலேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, மலேசியாவுக்கு வந்து ஷூட்டிங் வையுங்கள் என்று நமது திரைத் துறையினருக்கு அழைப்பு விடுத்தார்.

    ஆனால் வேகம் படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடந்தபோது நாங்கள் பல அசவுகரியங்களை சந்தித்தோம். அந்த சுற்றுலாத்துறை அமைச்சரைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இந் நிலையில் அந்த நாட்டு அரசு 2007ம் ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவித்துள்ளது. அதற்காகவாவது, சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளையும், திருப்தி தரும் வகையிலான ஏற்பாடுகளையும் மலேசிய அரசு செய்து தர முன்வர வேண்டும் என்றார் எஸ்.வி.சேகர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X