twitter

    ஆஹா கல்யாணம் கதை

    ஆஹா கல்யாணம் என்பது 2014ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது இந்தியில் வந்த பேண்ட் பஜா பாராத் என்ற படத்தின் மறு உருவாக்கமாகும். இதில் நான் ஈ புகழ் நானி, வாணி கபூர், சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். இதை விஷ்ணுவர்த்தன் உதவியாளர் கோகுல கிருஷ்ணன் இயக்கி உள்ளார். புகழ் பெற்ற இந்திப் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    கதை 

    சுருதி கல்லூரி இறுதியாண்டு மாணவி. பகுதி நேரமாக திருமண ஒப்பந்த நிறுவனத்தில் வேலைசெய்கிறார். அந்தத் தொழிலில் பெரிய ஆளாக வேண்டும் என்பது அவரது கனவாக இருக்கிறது. திருமணத்தில் சுருதியை பார்க்கும் சக்திவேலுக்கு சுருதி மீது காதல் வருகிறது. சுருதியின் நட்பைப் பெற வேண்டும் என்பதற்காக அவருடன் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டுகிறார். முதலில் எதிர்த்தாலும், பின்பு சேர்த்துக்கொள்கிறார்.

    இருவரும் இணைந்து அந்தத் தொழில் மிகப் புகழ் பெற்ற சந்திரலேகாவிடம் வேலைக்குச் சேர்ந்து தொழில் கற்றுக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கும் சந்திரலேகாவுக்கும் இடையே தொழில் ரீதியாக முரண்பாடு ஏற்பட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாகத் தங்கள் கெட்டி மேளம் என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள். குறைந்த செலவில் நன்றாக திருமணத்தை நடத்துவதால் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருகிறார்கள். லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறார்கள்.

    ஒரு வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு இரவு தனியாக இருக்க நேரிடும்போது இருவருக்கும் இடையிலான உறவு உடல்ரீதியானதாக மாறிவிடுகிறது. இந்த இடத்தில் சுருதிக்கு, சக்தி மீது காதல் வந்துவிடுகிறது. ஆனால் இப்போது சக்தி ஏனோ தடுமாறுகிறான். இதனால் இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் உண்டாகிறது. இருவரும் தனித்தனியே பிரிந்து தொழில் போட்டி செய்யும் அளவுக்கு அந்த விரிசல் வளர்ந்துவிடுகிறது. ஆனால் இருவருக்குமே தொழில் நன்றாக போகாததால் நஷ்டம் ஏற்படுகிறது. கடன் ஏற்படுகிறது.

    இந்தச் சமயத்தில் ஒரு பெரிய பணக்காரர் கெட்டி மேளத்தின் மூலம் திருமணம் செய்ய முன்வருகிறார். ஆனால் சுருதி, சக்தி இணைந்து செயல்பட்டால்தான் தருவேன் என ஒரு நிபந்தனை வைக்கிறார். நண்பர்கள் வற்புறுத்தல் காரணமாகவும், பணத்திற்காகவும் இருவரும் இணைந்து வேலைசெய்ய சம்மதிக்கிறார்கள். ஆனால் இதற்கிடையிலேயே சுருதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தமும் முடிந்துவிடுகிறது. அவர்களைக் கடனில் இருந்து மீட்க இந்தக் திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது முக்கியத் தேவையாக இருக்கின்றது. இந்தத் தடங்கலை முறியடித்தார்களா? இருவருக்குமான காதல் என்ன ஆனது? என்பதுதான் மீதிக் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆஹா கல்யாணம் with us? Please send it to us ([email protected]).