twitter

    விமர்சகர்கள் கருத்து

    • ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா எடுக்கறோம்... ஆனா நீங்கள்லாம் கேக்கறதப் பார்த்தா ஏன்டா எடுத்தோம்னு கஷ்டமா இருக்கு' என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் கவுதம் மேனன் பேசியிருந்தார்.

      சரியான திட்டமிடல், பக்காவான திரைக்கதை, பொருத்தமான நட்சத்திரங்கள் என அனைத்தையும் ஒருமுகப்படுத்தி படம் எடுத்து, சரியான காலத்தில் வெளியிடுவது இன்றைக்கு யாருக்குமே பெரும் சவால்தான்.

      ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் சொதப்புவதைத்தான் பொறுக்க முடிவதில்லை. அச்சம் என்பது மடமையடா படம் அப்படியான சொதப்பல்களில் ஒன்று.

      கதை விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்டைலில்தான் ஆரம்பிக்கிறது. மெல்ல மெல்ல அது மகாராஷ்ட்ரா பார்டர் வரை போய், தாதாக்கள், போலீஸ் வில்லன்கள், துப்பாக்கிச் சண்டை, சிம்புவின் இரண்டரை வருட தலைமறைவு வாழ்க்கை, மொத்த க்ளைமாக்ஸையும் சிம்புவின் வாய்ஸ் ஓவரிலேயே முடித்துவிட்டிருக்கிறார் கவுதம் மேனன். சிம்புவிடம் கால்ஷீட் பெறுவதில் அவர் பட்ட கஷ்டம் புரிகிறது. கவுதம் மேனன் படங்களிலேயே இப்படியொரு மொக்கையான க்ளைமாக்ஸைப் பார்த்ததே இல்லை.

      சிம்புவை கொஞ்சம் அல்ல, ரொம்பவே அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் கவுதம். அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். மற்ற படங்களை விட இதில் அவர் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் அவரது சைஸ் மாறிக் கொண்டே இருப்பதுதான் பெரும் உறுத்தல்.

      மஞ்சிமா மோகன், கொஞ்சம் அனுஷ்கா சர்மாவின் சாயல். காற்றில் கூந்தல் அலைய சிரித்துக் கொண்டே இருக்கிறார் ஆரம்பத்தில். பின்னர் முகத்தில் ரத்தத் தீற்றல்களுடன் செயற்கையான பயத்தைக் காட்டுகிறார். அது நடிப்பு என்பது எளிதாகத் தெரிந்துவிடுகிறது.

      ஒரு காட்சியில் மருத்துவமனையிலிருந்து சாதாரண சுடிதாரில் வெளியில் வருவார் மஞ்சிமா. அதற்கு பார்வையாளர்களின் கமெண்ட்... 'இவ ஹீரோயினா... ஆஸ்பத்திரி ஆயாவா...' கவுண்டரை விட ஆபத்தான 'கமெண்டர்கள்' இந்த ரசிகர்கள்!

      ஹீரோ ஹீரோயின் தவிர்த்து வேறு யாரும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. வேண்டுமானால் அந்த கோலாப்பூர் ஏரியா டாக்டரின் தவிப்பான நடிப்பைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். மொட்டைத் தலை வில்லன் (பாபா செகல்), எத்தனை முறை சுட்டாலும் எழுந்து வந்து கொண்டேருக்கும் டேனியல், நண்பனுக்காக உயிரை விட அந்த நண்பன்... யாரும் மனசில் நிற்கவில்லை. இன்னும் நன்றாக காட்சிகளைச் சிந்தித்திருக்கலாம்.

      ஆரம்பத்தில் அந்த பைக் ரோட் ட்ரிப் காட்சிகளில் கொஞ்சம் கவிதையும் காதலும் வழிகின்றன. அதில் ஏ ஆர் ரஹ்மானுக்கும் பங்குண்டு. ஆனால் பிந்தைய காட்சிகளில் ரஹ்மானும் அம்பேல்!

      ரஹ்மானின் இசையில் அவளும் நானும், தள்ளிப் போகாதே பாடல்கள் கேட்க வைக்கின்றன. அவளும் நானும் பார்க்கவும் வைக்கிறது!