twitter

    விமர்சகர்கள் கருத்து

    • எந்த வகைக் கதையாக இருந்தாலும் ரசிகனை இறுக்கையோடு கட்டிப்போடுகிற திரைக்கதைதான் வெற்றிக்கான சூத்திரம். அந்த சூத்திரத்தை முதல் படத்திலேயே கைவரப் பெற்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

      இந்த இருபது வயது இளைஞன் துருவங்கள் பதினாறு படத்தைக் கையாண்டிருக்கும் விதம் ஒரு ஆச்சர்யம்தான்.

      இந்தக் கதையில் சம்பந்தப்பட்ட அத்தனைப் பேரும் அவரவர் பார்வையில் ஒரு ட்விஸ்ட்டைக் கொடுத்தாலும், பார்ப்பவருக்கு எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக, விறுவிறுவென பயணிக்கும் திரைக்கதைதான் படத்தின் நாயகன்.

      தேர்ந்த எடிட்டிங் படத்தின் இன்னொரு பலம். ஒரு மணி 45 நிமிடங்களில் நச்சென்று படத்தை முடித்திருக்கிறார். சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜாயின் இசை இரண்டுமே திரைக்கதையை மீறாமல் பயணித்திருக்கின்றன.

      ரகுமானுக்கு இது நல்ல வாய்ப்பு. அவரும் அலட்டிக் கொள்ளாமல், ஓவர் ஆக்ட் பண்ணாமல் நடித்திருக்கிறார். அவருடன் கான்ஸ்டபிளாக வரும் கவுதம், ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கவனம் கவரும் டெல்லி கணேஷ், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவின், யாஷிகா, பாலா ஹாசன் என அனைவரையும் சரியாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.

      காட்சிகளில் லாஜிக் மீறலைக் கண்டுபிடிக்க ஒரு போட்டியே வைக்கலாம். அந்த அளவு நேர்த்தி. கடைசிவரை சஸ்பென்ஸிலேயே காத்திருக்கும் பார்வையாளர்கள் படம் முடிந்ததும் ஒரு ஆச்சர்ய உணர்வுடன் வெளியேறுவதைப் பார்க்க முடிகிறது.

      ரசிகர்கள் மட்டுமல்ல, போலீசாரும் கூட இந்தப் படத்தை ஒரு முறைப் பார்க்கலாம். அவர்களுக்கும் விஷயமிருக்கிறது இந்தப் படத்தில்

      ஆண்டு இறுதியில் வந்தாலும், தமிழ் சினிமாவுக்கு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது துருவங்கள் பதினாறு.