twitter
    Tamil»Movies»Iraivi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தனது ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இம்மியளவு கூடத் தொடர்பே இருக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். யாரும் தொடத் தயங்கும் கதையை, பிரமாதமான நடிகர்களைக் கொண்டு வித்தியாசமாகத் தர முயன்றிருக்கிறார், இறைவியாக.

      ஆண்களுக்கு என்றல்ல... மனித சமூகத்துக்கே ஆதாரம் பெண்தான். அந்தப் பெண்ணை ஆண்கள் அலைக்கழிப்பதும், அழ வைப்பதும், அனாதரவாகத் தவிக்கவிடுவதும் படிக்காத, படித்த, ஏழை பணக்கார வித்தியாசமின்றி இன்னமும் தொடர்கிறது.

      இப்படி ஆண்களால் அலைக்கழிக்கப்படும் சில பெண்களின் கதை(கள்)தான் இறைவி.

      கோடம்பாக்கமே பேய் மோகத்திலும், அரைவேக்காட்டு நகைச்சுவை வியாபாரத்திலும் விழுந்து கிடக்க, என்வழி தனிவழி என புதிய முயற்சியைத் தொடர்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

      திரைக்கதைக்கான பிள்ளையார் சுழி போடும்போதே இந்த சினிமா டைரக்டர் வேடம் எஸ் ஜே சூர்யாவுக்குத்தான் என முடிவு செய்துவிட்டு எழுதியிருக்கிறார் கார்த்திக். அந்த நம்பிக்கையை அப்படிக் காப்பாற்றியிருக்கிறார் சூர்யா. எப்பேர்ப்பட்ட நடிகன்... தன் பலம் தனக்கே தெரியாமல் கண்டபடி நடித்து வந்திருக்கிறார் இந்த மனிதர்!

      சந்தோஷ் நாராயணன் இசையில் அவரே பாடும் ஒரு பாடல் உள்பட இரண்டு பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை வசனங்களைக் கேட்க முடியாமல் படுத்துகிறது.

      ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து உருவாக்கிய கார்த்திக் சுப்பராஜ், அதை கச்சிதமாகக் கோர்ப்பதில் தடுமாறியிருக்கிறார். ஒரு காட்சி கச்சிதமாக முடியும்போது, அடுத்த காட்சி அந்த வேகத்தை எடுத்துச் செல்ல முடியாமல் நொண்டுவதுதான் இந்தப் படத்தின் மைனஸ். திணிக்கப்பட்ட க்ளைமாக்ஸ் மாதிரி ஒரு உணர்வு வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும். வசனங்களில் ஏன் இத்தனை ஆபாசம்.. வன்முறை.. தவிர்த்திருக்கலாம்!

      ஆனால் ஒரு படைப்பாளியாக கார்த்திக் சுப்பராஜின் முயற்சியில் பாசாங்கில்லை. நிச்சயம் ஒரு வேறுபட்ட படைப்பைத் தரவேண்டும் என்ற முனைப்பு படம் முழுக்கவே. அந்த சின்சியர் முனைப்புக்காகவே ஒரு முறை பார்க்க வேண்டிய படைப்பு இறைவி!