twitter

    விமர்சகர்கள் கருத்து

    • படத்தில் வரும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. கார்ப்ரேட் வாழ்க்கை பற்றி அறியாத அந்த எளிய மனிதர்களுக்கு பின்னால் நடக்கும் அரசியலை பற்றியும் படம் பேசுகிறது. விறுவிறு திரைக்கதை, ஆக்ஷன், டிவிஸ்ட், பாரின் சாங் என எவ்வித சினிமாதனமும் இல்லாமல், போகிற போக்கில் நாட்டுப்புறப் பாடலை போல கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

      இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று யோசித்ததற்காகவே இயக்குனர் லெனின் பாரதிக்கும், படத்தை தயாரித்த விஜய் சேதுபதிக்கும் பெரிய அப்ளாஸ். அதிலும் அந்த மலைமக்களையே நாயகர்களாக உலவவிட்டிருப்பதற்கு மீண்டும் ஒரு கைதட்டல். ஒரு தொழிலாளியின் வாழ்க்கை வழியாக, மேற்கு தொடர்ச்சி மலைக்கு பார்வையாளர்களை டிரக்கிங் அழைத்து செல்கிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்.

      எங்கிருந்தோ வந்து இங்கு குடியேருபவர்கள், நம்மையே எப்படி ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதை உரக்கடைக்காரர் கதாபாத்திரம் சைலண்டாக கடத்திப்போகிறது. உலகமயமாக்களின் தாக்கத்தால், கிராமங்களைவிட்டு விரட்டப்படும் மக்கள், நிலமற்றவர்களாக எப்படி மாறுகிறார்கள் என்பதையும் அழுத்தமாக சொல்கிறது படம்.

      படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜாவின் இசை. அவரது பாடல்களும், பின்னணி இசையும் எப்படி இருக்கும் என புதிதாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. 'கேட்காத பாட்டு ஒண்ணு கேட்குது ஊரான ஊருக்குள்ள' பாட்டுக்கு தியேட்டரே தாளம் போடுகிறது. 'அந்தரத்தில் தொங்குதம்மா' பாடல் படத்தில் உயிர் நாடி. மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலாய் மனதுக்கு இதமளிக்கிறது இசைஞானியின் இசை.

      உலகமெங்கும் விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு இந்த படத்தை சமர்பனம் செய்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. காடு, மலை, மேடு, எலக்காய் தோட்டம், யதார்த்த மனிதர்கள் என இயற்கையின் அழகை வெள்ளித்திரையில் காண போய்வாருங்கள் மேற்கு தொடர்ச்சி மலைக்கு. டிரக்கிங் அனுபவம் நிச்சயம்.