twitter
    Tamil»Movies»Oru Naal Koothu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு நாள் கூத்து... இந்தப் படம் எப்படி இருக்கும்? என்ற எந்த வித யோசனையும் இல்லாமல் போய் உட்கார்ந்தால்... உள்ளே ஏகப்பட்ட 'இறைவிகள்'!

      மூன்று இளம் பெண்கள்... அவர்களின் திருமணங்கள்... இதுதான் களம். அதை சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து உயிரோட்டமுள்ள ஒரு படமாக்கியிருக்கிறார் புது இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். வெல்கம் நெல்சன்!

      கடைசியில் யாரோடு யாருக்கு முடிச்சு என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.

      பெரும்பாலும் சினிமா கதைகளில் பெரிதாக வித்தியாசமும் இருப்பதில்லை. சொல்லப்பட்ட கதைகள்தான். ஆனால் சொல்லப்படும் விதத்தில்தான் ஒரு படம் வேறுபட்டு நிற்கிறது. ஒரு நாள் கூத்து அந்த லிஸ்டில் இடம்பெறுகிறது.

      மூன்று நான்கு கதைகளைச் சொல்லிக் கொண்டே வந்து அதை ஒரு கோட்டில் இணைப்பது கிட்டத்த சர்க்கஸ் சாகஸம். அதை செவ்வனே செய்திருக்கிறார் நெல்சன். அவருக்கு ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் பக்க பலமாய் இருந்திருக்கிறார்கள்.

      'இவ்வளவுதானா... நல்லாதானே இருக்கு.. இதுக்கா இவ்வளவு கெஞ்சல்' என்று ரமேஷ் திலக்குடன் படுக்கையில் ரித்விகா சொல்லும் காட்சி 'போல்ட்'தான் என்றாலும், இன்றைய சூழலில் ரொம்பவே ஆபத்துப்பா!

      இவர்தான் ஹீரோ என்று யாரையும் சொல்ல முடியாது. எல்லோருக்குமே முக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குநர்.

      ஒரு பக்கா காதல் படம் எடுத்தால் அதில் முழு நாயகியாக நிவேதாவைப் பரிந்துரைக்கலாம். அபாரம். நமக்கு இப்படி ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என ஏங்குவார்கள் படம் பார்க்கும், 'கமிட்' ஆகாத பையன்கள்!

      மியா ஜார்ஜ்.. இப்படியும் கூட பெண்கள், அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்தக் காலத்தில். அந்த கடைசி மாப்பிள்ளை வீட்டுக்கு வந்ததுமே, 'அப்பாடி.. இந்தப் பெண்ணுக்கு இவனையே கட்டி வைத்துத் தொலய்யா..' என்று நமக்குள்ளேயே சத்தமாகச் சொல்லிக் கொள்வதை உணர்கிறோம்.

      நான்கு காட்சிகள்தான் என்றாலும் கருணாகரனின் பண்பட்ட நடிப்பு பாராட்ட வைக்கிறது. ஐம்பதுகளைக் கடந்த பேச்சுலர் சார்லி, நிவேதாவின் தந்தையாக வரும் ராஜா செந்தில், மியாவின் தந்தை நாகிநீடு, பாலசரவணன் என யாரும் குறை வைக்கவில்லை நடிப்பில்.

      கே பாலச்சந்தரின் அந்தக் கால கதை ஒன்றிற்கு மாடர்னாக ஒரு திரைக்கதை எழுதினால் எப்படி இருக்கும்... அதுதான் இந்த ஒரு நாள் கூத்து!