twitter
    Tamil»Movies»REMO»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தமிழ் சினிமா என்றல்ல.. எந்த மொழிப் படமாக இருந்தாலும் கதைகள் பழசுதான். அந்தக் கதைகளுக்கு திரைக்கதை என்ற பெயரில் போடப்படும் 'பாலீஷ்'தான் படங்களை ஓட வைக்கின்றன, பார்க்க வைக்கின்றன.

      அப்படி பாலீஷ் பண்ணப்பட்ட சில பழைய கதைகளின் 'மிக்சர்'தான் இந்த ரெமோ.

      படத்தில் புதிதாக ஒன்றுமில்லை, பெண் வேடம் போட்ட சிவகார்த்திகேயனைத் தவிர. ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். பெண் வேடம் போடுவது அத்தனை சாதாரண விஷயமா...

      குறிப்பாக 'நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணை திட்டமிட்டு, மனசு மாற்றி, விரட்டி விரட்டிக் காதலிப்பது' என்ற கதைக் கருவை மாற்றியிருக்கலாம். சமூக உளவியலில் இதுபோன்ற படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் ஆபத்தானதும் கூட.

      ரெமோ வேடத்தில் வரும் சிவகார்த்திகேயன் கீர்த்திக்கு மொட்டை மாடியில் வைத்து வாணவேடிக்கை காட்டிவிட்டு, அடுத்த 5வது நிமிடத்தில் எஸ்கே வாக மாறி பூங்கொத்து கொடுப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் க்ளைமாக்ஸ் பைட்டுக்கு முன் கீர்த்தி போன் பண்ணதும், நர்ஸ் கெட்டப்பிலேயே வந்து நிற்கிறாரே அதைத்தான்... ஷ்ஷப்பா!

      9வது படத்திலேயே ஆல் க்ளாஸ் ஆடியன்ஸும் கொண்டாடும் நாயகனாகிவிட்ட சிவகார்த்திகேயன், ரெமோ, எஸ்கே என இரு கெட்டப்புகளிலுமே மாஸ் காட்டுகிறார். மக்கள் அப்படி ரசிக்கிறார்கள். நிச்சயம் இது சாதாரண விஷயமல்ல.

      கீர்த்தி சுரேஷ் கொள்ளை அழகு. நடிப்பிலும் குறை வைக்கவில்லை. நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கும் நிச்சயமாகாத காதலுக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் தேர்ந்த முக பாவங்கள்.

      சதீஷ், யோகி பாபு, ராஜேந்திரன் மூவரும் பிரதான காமெடியன் இல்லாத குறையே தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக யோகி பாபு பஸ் பஸ்ஸாக ரெமோவைத் தேடும் காட்சி.

      பார்த்துப் பழகிய கதையை நர்ஸ் கெட்டப் சிவகார்த்திகேயன் மூலம் வித்தியாசப்படுத்திக் காட்ட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் முயன்றிருக்கிறார். ஆனால் திரைக்கதையை இன்னும் செதுக்கியிருக்கலாம்.