twitter
    Tamil»Movies»Sketch»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • யூகிக்க முடியாத க்ளைமாக்ஸுடன் ஒரு மெசேஜையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மெசேஜ் சொல்றதுக்காக அப்படி வெச்சாரா, இல்லை கதையை அப்படி வெச்சுட்டுத்தான் மெசேஜ் சொல்லலாம்னு டைரக்டருக்கு ஐடியா வந்துச்சானு தெரியலை.

      விக்ரம், எந்த கேரக்டர் என்றாலும் அதற்காக எந்த அளவுக்கும் இறங்கி நடிக்கக்கூடிய நடிகர் என்பது தெரிந்த விஷயமே. இப்படத்தில் ஒரு மாஸான ரௌடியாக ஸ்டைலிஷ் லுக் காட்டியிருக்கிறார். 'ஜெமினி' படத்தின் 'ஓ போடு' போல இதில் விக்ரமின் 'ஸ்கெட்ச் போடு'. வயதாவதே தெரியாமல் அத்தனை எனர்ஜியோடு அசத்தியிருக்கிறார் சீயான். கையால் ஸ்கெட்ச் போடுவது, கார் சேஸிங், சென்டிமென்ட் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். தமன்னாவுக்கு நடிப்பதற்கு பெரிய ரோல் இல்லையென்றாலும் அழகிலும், நடிப்பிலும் ஆளை மயக்குகிறார்.

      விக்ரமின் நண்பர்களாக வரும் ஶ்ரீமன், விஷ்வந்த், வினோத் ஆகியோர் காமெடி காட்சிகளிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சூரிக்கு காமெடியனாக இல்லாமல் சிறிய வேடம் ஒன்று. மிரட்டல் ரௌடிகளாக அருள்தாஸும், ஆர்.கே.சுரேஷும் கவனம் ஈர்க்கிறார்கள். தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் இந்தப் படத்தில் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கிறார். எம்.எல்.ஏ-வுக்கு உண்டான வேலையையே மறந்துவிட்டு ரௌடிக்கும், போதைப்பொருள் விற்பவர்களுக்கும் புரோக்கராகத்தான் படம் முழுவதும் வருகிறார்.

      தமனின் இசையில் 'கனவே கனவே' பாடலும், 'தாடிக்காரா' பாடகும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சில பாடல்கள் படத்தின் ஓட்டத்துக்கு வேகத் தடையாகவே செயல்படுகின்றன. பின்னணி இசை விக்ரமுக்கு கெத்து கூட்டுகிறது. சுகுமாரின் ஒளிப்பதிவில் விக்ரமையும், தமன்னாவையும் அழகாகக் காட்டியதைத் தவிர சிறப்பாக ஒன்றுமில்லை. ரூபனின் படத்தொகுப்பு ஓகே ரகம். படம் அவ்வப்போது நிமிர்ந்து உட்காரச் செய்து பின்னர் சறுக்குகிறது. யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுகாக பாராட்டலாம். வழக்கமான மசாலா கதையில், பெயருக்கு மெசேஜையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார்கள். விக்ரமின் ஸ்டைல், ஸ்கிரீன் பிரசன்ஸுக்காக இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். மொத்தத்தில் 'ஸ்கெட்ச்' - ஆட்டத்தில் இருக்கு!