twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2014... அதிக வசூல் குவித்த டாப் 5 படங்கள்

    By Shankar
    |

    கடந்த 2014-ம் ஆண்டில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்கள் குறித்த ஒரு அலசல் இது.

    இங்கே நாம் சொல்லும் தகவல்கள் திரைத்துறையைச் சேர்ந்த பலரிடமும் தீர விசாரிக்கப்பட்ட பிறகே வெளியிடப்படுகின்றன. படங்களின் வெற்றி தோல்விகளைத் தாண்டி, அவை வசூலித்த தொகையின் அடிப்படையிலேயே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இங்கு வெளியிடப்பட்டுள்ள வசூல் புள்ளி விவரங்கள் அதிகபட்சம் நம்பகமானவை. சில விவரங்கள் உத்தேசமானவை. காரணம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்தப் படத்துக்கும் அதிகாரப்பூர்வமாக வசூல் விவரங்களை எந்தத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் தந்ததே இல்லை.

    இங்கே திரையரங்குகள் தரும் கணக்குகளும் கூட நம்பகத்தன்மையை இழந்துவிட்டன. காரணம், டிசிஆர் எனப்படும் தினசரி வசூல் அறிக்கையையே போலியாகத் தயாரிப்பது பெங்களூரில் அம்பலமாகியுள்ளது. பெரு நகர நிலையே இப்படி என்றால் வெளியூர் திரையரங்குகளில் எப்படி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

    இந்த ஆண்டில் அதிகப் படங்கள் வெளியாகி சாதனைப் படைக்கப்பட்டிருந்தாலும், போட்ட பட்ஜெட்டைவிட அதிக வசூலைக் குவித்த படங்கள் என்று பார்த்தால் அவை மிகச் சில படங்கள்தான்.

    2014-ம் ஆண்டில் அதிகம் வசூலித்தவை...

    1. லிங்கா

    1. லிங்கா

    இந்தப் படம் குறித்த சர்ச்சைகள், படம் வெளியான பிறகும் ஓய்ந்தபாடில்லை. இன்னும் 300 அரங்குகளுக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சில மீடியேட்டர்கள் கூறி வருகின்றனர்.

    தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், படத்தை மொத்தமாக வாங்கிய ஈராஸ், அவரிடமிருந்து வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் வேந்தர் மூவீஸ் என மூன்று தரப்புமே கனத்த அமைதி காக்கின்றனர்.

    தனிப்பட்ட முறையில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்தப் படம் இதுவரை ரூ 170 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ 69 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது (இவை தோராயமானவைதான். உண்மையான கணக்கு விவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்கிறார்கள் ஈராஸ் தரப்பில்).

    கடந்த வெள்ளிக்கிழமை.. அதாவது படம் வெளியான நான்காவது வெள்ளிக் கிழமை லிங்காவின் வசூல் ரூ 3.20 கோடி என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த நான்கு வெள்ளிக் கிழமைக்குள் 4 புதிய படங்கள் வந்துவிட்டன. அவற்றின் ஒரு வார வசூலாவது இந்த அளவுக்கு வருமா என்பது சந்தேகம்தான்.

    ஆந்திராவில் ரூ 28 கோடியையும், கேரளாவில் ரூ 9.5 கோடியையும், கர்நாடகத்தில் ரூ 13 கோடியையும், இந்தியாவின் பிற பகுதிகளில் வெளியான தமிழ் - தெலுங்கு பதிப்புகள் மூலம் ரூ 10 கோடியையும் லிங்கா வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    உலக அளவில் நான்கு வாரங்களில் மொத்தம் ரூ 43 கோடிகளை இந்தப் படம் வசூலித்துள்ளது. அதிகபட்சமாக மலேஷியாவில் ரூ 13 கோடிகள் வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் 11 கோடிகள் வசூலாகியுள்ளது.

    லிங்காதான் கடந்த 2014- ம் ஆண்டில் அதிக வசூல் குவித்த படம் என்பது சந்தேகத்துக்கிடமில்லாதது. ஆனால் அந்தப் படம் விற்கப்பட்ட விலையோடு ஒப்பிடுகையில் இன்னும் கூடுதலாக வசூலித்திருக்க வேண்டும் என்பது சென்னை தவிர்த்த பிற பகுதியில் வெளியிட்டவர்களின் கருத்து. பொங்கல் வரை இதே அளவு அரங்குகளில் இந்தப் படம் ஓடும் என்பதால், நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    சென்னை மாநகரைப் பொறுத்தவரை இந்தப் படம் பிளாக்பஸ்டர் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். சில அரங்குகள் மற்றும் மால்கள், படத்துக்குக் கொடுத்த விலையை விட மூன்று மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அபிராமி போன்ற மால்களில், கிறிஸ்துமஸ் படங்களுக்கு கொடுத்த காட்சிகளை மீண்டும் லிங்காவுக்கே தந்துள்ளனர். சத்யம், லக்ஸ் போன்ற மால்களில் 90 சதவீத பார்வையாளர்களுடன் காட்சிகள் தொடர்கின்றன.

    2. கத்தி

    2. கத்தி

    இந்த 2014-ம் ஆண்டு விஜய் நடித்த ஜில்லா, கத்தி படங்கள் வெளியாகின. இவற்றில் கத்தி படம் விஜய்யின் கேரியரிலேயே இல்லாத அளவுக்கு அதிக வசூல் குவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் ரூ 100 கோடியை வசூலித்ததாகவும் சொல்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் ரூ 60 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளது.

    ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் சரி, விநியோகஸ்தரும் சரி... வசூல் குறித்து இதுவரை எதுவுமே அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தின் வசூல் குறித்தும் சர்ச்சை இல்லாமல் இல்லை. விநியோகஸ்தர்களுக்கு இந்தப் படம் சில கோடிகள் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால் அடுத்த படத்தில் அதை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்று கூறி சமாதானப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.

    இந்த சர்ச்சையைத் தாண்டி, 2014-ம் ஆண்டில் அதிக வசூல் குவித்த படங்களில் இரண்டாம் இடத்தை கத்தி பிடித்துள்ளது. அதே போல, லைக்கா பிரச்சினை, கதைப் பிரச்சினை என பிரச்சினைகளை அதிகம் எதிர்கொண்டதும் இந்தப் படம் மட்டுமே.

    3. வேலையில்லா பட்டதாரி

    3. வேலையில்லா பட்டதாரி

    கடந்த ஆண்டு இந்தியில் அம்பிகாபதி என்ற மெகா ஹிட் படத்தில் நடித்தாலும், தமிழில் அடுத்தடுத்த தோல்விகளில் திக்குமுக்காடிய தனுஷுக்கு பெரிய ஆறுதலாக அமைந்தது வேலையில்லா பட்டதாரி. வெளியான மூன்று வாரங்கள் கழித்து கூட இந்தப் படம் பல அரங்குகளில் நிறைந்த கூட்டத்துடன் ஓடியது.

    இந்தப் படம் தனுஷின் சொந்தத் தயாரிப்பு. மிகவும் சிக்கனமாக தயாரித்தனர். விளம்பர செலவுகள் அனைத்தையும் சேர்த்தால் கூட ரூ 10 கோடியைத் தாண்டாது பட்ஜெட். ஆனால் ரூ 50 கோடிக்கு மேல் வசூல் பார்த்தனர். எனவே இந்தப் படம் ப்ளாக்பஸ்டராகிவிட்டது.

    4. கோச்சடையான்

    4. கோச்சடையான்

    ரஜினியை வைத்து மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் தயாரித்த படம் கோச்சடையான். தமிழில் இந்தப் படத்தைப் போல எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய படம் வேறு எதுவும் இல்லை. படம் எப்படி இருக்குமோ.. இந்தத் தொழில்நுட்பத்தில் முழுப்படமும் சாத்தியமா.. அதுவும் தமிழில்? என்ற கேள்விகளோடு காத்திருந்தனர். ஆறு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டனர்.

    படம் தமிழில் அபார வரவேற்புடன் ஓடியது. விமர்சனங்களும் சாதகமாகவே அமைந்தன. கேரளா, கர்நாடகாவில் படத்துக்கு அருமையான ஓபனிங் கிடைத்தது. தெலுங்கிலும் முதல் வாரம் நல்ல வரவேற்பு. ஆனால் இந்தியாவின் பிற பகுதிகளில் படத்துக்கு வரவேற்பில்லை. ரிலீஸ் தேதியை மாற்றி மாற்றி அறிவித்துக் கொண்டிருந்ததில், படம் வெளியானதே வட மாநிலங்களில் தெரியவில்லை. மராத்தி, பஞ்சாபி, இந்தி, போஜ்புரி மொழிகளில் டப் செய்யப்பட்டும் படம் அங்கே ஓடவில்லை.

    ஆனால் முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் திரையரங்குகளில் மட்டும் ரூ 43 கோடியை வசூலித்ததாக ஈராஸ் அறிவித்தது. முதல் வார முடிவில் ரூ 100 கோடி வசூலானதாக அதே ஈராஸ் அறிக்கை வெளியிட்டது. ஆனால் முழுமையான வசூல் கணக்கை தரவில்லை.

    அமெரிக்காவில் 635,000 டாலர்களை வசூலித்து, இந்த ஆண்டில் அதிக வசூல் குவித்த படங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது கோச்சடையான். பிரிட்டன் பாக்ஸ் ஆபீஸில் 157,033 பவுண்டுகளை வசூலித்து நான்காம் இடத்தில் உள்ளது. மலேசியாவில் ரூ 2 கோடிகளை வசூலித்தது, 'பொம்மைப் படம்' என்று கிண்டலடிக்கப்பட்ட கோச்சடையான்!

    5. வீரம்

    5. வீரம்

    கடந்த 2014-ல் அஜீத் நடித்து வந்த ஒரே படம் வீரம். முரட்டுக்காளை பாணியில் வந்த, குறிப்பாக பொங்கல் சமயத்தில் வந்த கிராமியப் படம் என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு குவிந்தனர். பத்து நாட்கள் தொடர்ந்து நல்ல கூட்டம்.

    உலகெங்கும் ரூ 41 கோடிக்கு இந்தப் படம் விற்கப்பட்டது. ரூ 46 கோடியை வசூலித்தது. அதாவது திரையரங்குகள் மூலம் கிடைத்த வசூல் இது. இது தவிர தொலைக்காட்சி உரிமை கணிசமான விலைக்கு விற்கப்பட்டது.

    அஜீத் படங்களில் சராசரிக்கு சற்று கூடுதலான வெற்றியைப் பெற்ற படம் இது. அஜீத் படங்களிலேயே அமெரிக்காவில் அதிக வசூல் பெற்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. வசூலான தொகை 243,955 டாலர்கள்.

    English summary
    Here is the list of top 5 Tamil movies that grossing big collection in Tamil Nadu and worldwide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X