twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பா ராஜ்கிரண் அவர்களுக்கு.... - ஒரு தயாரிப்பாளரின் நெகிழ்ச்சிக் கடிதம்

    By Shankar
    |

    அப்பா ராஜ்கிரண் அவர்களுக்கு,

    பவர் பாண்டி பார்த்தபிறகு அப்படித்தான் கூப்பிடத் தோணுது.

    இன்றைக்கு முதுமைக்குள் காலடி எடுத்து வைக்கும் எல்லோருக்கும் ஏற்படும் சிறு சிறு மனச் சிக்கல்கள் அவர்களை மீண்டும் குழந்தைப் பருவத்திற்கே தள்ளி விடுகிறது.

    A Producers letter to Rajkiran

    தான் அடக்கி அதட்டி வளர்த்த பிள்ளை தன்னை மீறி நின்று பார்க்கும் அந்த காலமாற்றம், தன் எண்ணங்கள் முழுமையாக சுற்றியிருப்பவர்களால் அங்கீகரிக்கப்படாதபோது தான் மரியாதையற்றுப் போகிறோமோ என பரவும் வலி ..
    உலகை தான் நின்று பார்ப்பதும், தன்னை உலகம், வீடு எப்படி பார்க்கிறது? போன்ற இத்தகைய குழப்பங்களே முதுமையை முதலில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விதைக்கிறது.

    இந்த மனச்சிதைவை முதல் பாதி முழுக்க பிரதிபலிக்க வேண்டும்... அதிலும் அது வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாக ஆகிவிடக்கூடாது...

    அத்தனையையும் பிரதிபலிக்க இருக்கவே இருக்கு உங்கள் உருவமும், முகபாவமும்! இயல்பாக வெளிப்படுத்தி இடைவேளையை கடந்து வரச் செய்துவிடுகிறீர்கள்.

    வயதின் முதிர்வையும் பேரக்குழந்தைகளின் அன்பின் அனுபவித்தலுக்கு அடங்குதலையும் அழகாக கண்முன் நிறுத்திவிடுகிறீர்கள்.

    ஆனால் இரண்டாவது பாதியில் உங்கள் இயல்பைக் களைத்துவிட்டு இன்னொரு களத்தை வாரிச்சுருட்டி அழகுபடுத்தியிருக்கிறீர்கள் பாருங்கள்.
    நிஜமாகவே கொள்ளை அழகு!

    ஒரு அப்பன், இரண்டு பேரப்பிள்ளைகளுக்கு தாத்தன் பைக்கை எடுத்துக்கொண்டு தொலைந்து போன பழைய காதலைத் தோண்டியெடுக்க கிளம்பும்போது அடி மனசு பரபரக்கிறது. ரெக்கை கட்டி பறபறக்கவும் செய்கிறது.

    இதுவரை நீங்கள் ஆடாத களம். தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு ஆகாயத்தில் கைகள் வீசி சாகசம் புரிபவனைப்போல அதகளம் செய்திருக்கிறீர்கள்.
    உங்கள் இயக்கத்தில் ராஜனின் இசையோடு ஒன்றும் உங்கள் ஆத்மார்த்தத்தைப் போல... இங்கு தனுஷின் திரைக்கதையில் உங்கள் ஆத்மார்த்தம் பிரதிபலித்திருப்பதை உண்மையாகவே உணர்ந்துகொள்ள முடிகிறது.

    காதல் காட்சிகளில் ஒரு இளைஞனை துள்ளி விளையாட விடுகிறீர்கள். ஒரு நூல் மிஞ்சினாலும் ச்சீ என்ற பார்வையைத் தொட்டுவிடும் அந்த கயிறு மீது நடக்கும் வித்தையை நேர்த்தியாக செய்திருக்கிறீர்கள்.

    எனது சுதந்திரம் எனது மூச்சுக்காற்று எனக்கான வாழ்க்கை எதுவென்ற தேடல் எல்லாவற்றையும் பொறுப்புணர்வு கலந்தே செய்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் இழையோடும் ஒரு புன்னகையோடு ரசிக்கமுடிகிறது.

    படம் முடியும்போது பவர்பாண்டியை இன்னும் கொஞ்ச நீளச் செய்யக்கூடாதா என்ற ஏக்கத்தை எழ வைத்துவிடுகிறீர்கள்.

    பவர் பாண்டி என்ற மொத்த உருவத்தை கண்முன் நிறுத்தியது உங்கள் உயிரோட்டமான நடிப்பு.. தவறவிட்ட ஒரு அப்பனின் வாழ்க்கையை திரையில் பார்த்த மகிழ்வு அன்று இரவு முழுக்க இருந்தது அப்பா!

    பிற்கால சந்ததிகளுக்கு குடும்ப உறவுகளின் மேன்மையை நீங்கள் நடித்த படங்கள்தான் சொல்லும்போல!

    இன்னும் இதுபோன்ற பெருமதிப்பிற்குரிய பாத்திரங்களில் எதிர்பார்த்து நிற்கிறேன்.
    மன நிறைவுடன்

    அன்புடன்

    சுரேஷ் காமாட்சி,
    இயக்குநர் & தயாரிப்பாளர்

    English summary
    Director & Producer Suresh Kamatchi's letter to Rajkiran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X