twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏவிஎம்மின் எழுபது ஆண்டுகள்... ஒரு நீண்ட திரை வரலாறு!

    By Shankar
    |

    தமிழ் சினிமா உலகம் என்றில்லை.. இந்திய சினிமா துறையில் ஏவி எம் நிறுவனத்துக்கென தனித்த இடம் உண்டு, விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும்.

    இன்று அந்த நிறுவனம் தனது 70ம் வயதில் அடியெடுத்து வைக்கிறது. இந்த எழுபது ஆண்டுகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 175 படங்களைத் தயாரித்து பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது ஏவிஎம்.

    தோற்றம்

    தோற்றம்

    ஏவி.மெய்யப்பன் 1934-ம் ஆண்டிலிருந்து திரைப்படத் துறையில் இருந்தாலும், 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதிதான் முதன்முதலில் ‘ஏவி.எம் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

    சென்னை, மைலாப்பூரில், சாந்தோம் பகுதியில், தெற்கு தெரு, எண் - 60 என்ற முகவரியில் இருந்த ஒரு வாடகை கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏவி.எம் புரொடக்சன்ஸ் நிறுவனம், இன்று 2014, அக்டோபர் 14, செவ்வாய்கிழமையன்று 70-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    காரைக்குடியில் நாம் இருவர்

    காரைக்குடியில் நாம் இருவர்

    சென்னையில் ஆரம்பிக்க நினைத்த ஏவி.எம் ஸ்டுடியோஸ் முதலில் மின்சாரத் தேவையின் காரணமாக காரைக்குடியில் இயங்க ஆரம்பித்தது. முதலில் ‘நாம் இருவர்' படத்தை தயாரித்து 14.01.1947-ல் வெளியிட்டார் ஏவிஎம். இதில் பாரதியாரின் பாடல்கள் காட்சிகளாக இடம் பெற்றிருந்தன. இதற்காக பாரதியார் பாடல்களின் உரிமையை முறைப்படி பெறப்பட்டு பின்னர் அது நாட்டுடமையாக்கப்பட்டதென்பது வரலாறு. 1948-ல் ‘வேதாள உலகம்' படத்தை காரைக்குடியில் இருந்து வெளியிட்டவுடன், ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்றினார் ஏவி.எம். செட்டியார்.

    சென்னையில்...

    சென்னையில்...

    1948 முதல் இன்றுவரை ஏவி.எம் ஸ்டூடியோஸ் கால மாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் புதுப்பித்து நிலைத்து நின்று, இந்தியாவின் பழமையான ஸ்டூடியோ என்ற புகழைப் பெற்றுள்ளது.

    தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் சிங்கள மொழிகளிலும் 175-க்கும் மேற்பட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

    இயக்குநர் ஏவி மெய்யப்பன்

    இயக்குநர் ஏவி மெய்யப்பன்

    இந்த நிறுவனம் தயாரித்த ‘நாம் இருவர்', ‘வாழ்க்கை'-(3 மொழிகள்), ‘சபாபதி', ‘ஸ்ரீவள்ளி', ‘வேதாள உலகம்' போன்ற படங்களை ஏவி.மெய்யப்பன் அவர்களே இயக்கியிருந்தார்.

    இந்திப் படம்

    இந்திப் படம்

    ஏவி.எம். நிறுவனம் 1957-ம் ஆண்டு தயாரித்த ‘ஹம்பஞ்சி ஏக் டால்கே' என்ற இந்திப் படம் சிறந்த குழந்தைகள் படத்திற்கான தங்க மெடலை பெற்று அப்போதைய பிரதமர் பண்டித நேருவின் பாராட்டுக்களைப் பெற்றது.

    தேசிய விருதுகள்

    தேசிய விருதுகள்

    ராஜ்கபூர் - நர்கீஸ் நடித்து ஷங்கர் ஜெய்கிஷன் இசையமைத்த, ‘சோரி சோரி' ஹிந்தி படம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றது.

    ‘அந்த நாள்', ‘தெய்வப் பிறவி', ‘பாவ மன்னிப்பு', ‘சர்வர் சுந்தரம்' ஆகிய படங்கள் அந்தந்த ஆண்டுகளில் சிறந்த திரைப்படத்திற்கான மத்திய அரசின் சான்றிதழ் பெற்ற படங்களாக அமைந்தன.

    ‘அன்னை', ‘நானும் ஒரு பெண்', ‘குழந்தையும் தெய்வமும்', ‘ராமு' ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றன.

    நான்கு மொழிகளில்

    நான்கு மொழிகளில்

    ‘பக்த பிரகலாதா' தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் எடுக்கப்பட்ட படமாகும்.

    ‘வாழ்க்கை' படம் மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டது.

    உயர்ந்த மனிதன்

    உயர்ந்த மனிதன்

    ‘உயர்ந்த மனிதன்' திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125-வது படமாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘பால் போலவே' பாடலைப் பாடிய பி.சுசீலாவுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. அதேபோல் சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசின் விருதும் இந்தப் படத்திற்குக் கிடைத்தது.

    மின்சாரக் கனவு

    மின்சாரக் கனவு

    ‘சம்சாரம் அது மின்சாரம்' சிறந்த ஜனரஞ்சப் படத்திற்கான மத்திய அரசின் தங்கப் பதக்கம் பெற்றது.

    ‘மின்சார கனவு' படத்திற்கு சிறந்த நடனம்(பிரபு தேவா), சிறந்த இசை(ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த பின்னணிப் பாடகர்(எஸ்.பி.பாலசுப்ரமணியம்) பாடகி(சித்ரா) ஆகிய நான்கு தேசிய விருதுகள் கிடைத்தன. இப்படி தேசிய விருது பெற்ற பல சிறந்த படங்களை ஏவி.எம். நிறுவனம் தயாரித்துள்ளது.

    குரல் பதிவு முறை

    குரல் பதிவு முறை

    தொழில் நுட்ப வளர்ச்சியை கையாண்டு பின்னணி பாடல் பாடுவது, பின்னணி குரல் கொடுப்பது என்ற இரண்டு புதிய அத்தியாயங்களை ஏவி.எம். நிறுவனம்தான் தமிழ்ச் சினிமாவில் துவக்கி வைத்த்து.

    1937-ல் பின்னணி பாடும் முறையை ‘நந்தகுமார்' என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார் ஏவி.மெய்யப்ப செட்டியார். பிரபல பாடகி லலிதா வெங்கட்ராமன் இந்தப் படத்தில் பாடல்களை பாடியிருந்தார்.

    அதேபோல படங்களை டப்பிங் செய்யும் முறையையும் ஏவி.எம். நிறுவனம்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது.

    முதல் டப்பிங் படம்

    முதல் டப்பிங் படம்

    1938-ல் ‘ஹரிச்சந்திரா' என்ற கன்னட படம் ஏவி.எம். நிறுவனத்தால் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் ‘டப்பிங்' படமாகும்.

    நட்சத்திரங்களை அறிமுகம் செய்த ஏவிஎம்

    நட்சத்திரங்களை அறிமுகம் செய்த ஏவிஎம்

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன்(பராசக்தி), எஸ்.எஸ்.ராஜேந்திரன்(பராசக்தி), டி.ஆர்.மகாலிங்கம்(ஸ்ரீவள்ளி), கமல்ஹாசன்(களத்தூர் கண்ணம்மா), வைஜெயந்திமாலா(வாழ்க்கை), சிவகுமார்(காக்கும் கரங்கள்), நாகேஷ்வரராவ்(ஓர் இரவு), விஜயகுமாரி(குல தெய்வம்), கன்னட நடிகர் ராஜ்குமார்(பேடர கண்ணப்பா), பண்டரிபாய், மைனாவதி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களை இந்தியத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது இந்த ஏவி.எம். நிறுவனம்தான்.

    சாதனை இயக்குநர்கள்

    சாதனை இயக்குநர்கள்

    இயக்குனர்கள் ஏ.டி.கிருஷ்ணசாமி, எம்.வி.ராமன், ப.நீலகண்டன், கே.சங்கர், பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், எஸ்.பி.முத்துராமன், இராம.நாராயணன், ராஜசேகர் மற்றும் பல முன்னணி இயக்குநர்களும் ஏவி.எம். நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்தான்.

    5 முதல்வர்கள்

    5 முதல்வர்கள்

    5 முதல்வர்கள் பணியாற்றியுள்ள பெருமையைப் பெற்றது ஏவி.எம். நிறுவனம். அண்ணாதுரை(ஓர் இரவு), கருணாநிதி (பராசக்தி), எம்.ஜி.ஆர்.(அன்பே வா), என்.டி.ராமராவ் (பூ கைலாஸ், ராமு, சிட்டி செல்லலு, சங்கம், பக்தி மகிமா), ஜெயலலிதா (மேஜர் சந்திரகாந்த், எங்க மாமா, அனாதை ஆனந்தன்) ஆகியோர் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த படங்களில் பணியாற்றியுள்ளார்கள்.

    இந்தி ஜாம்பவான்கள்

    இந்தி ஜாம்பவான்கள்

    இவர்கள் மட்டுமல்லாமல், இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ராஜ்கபூர், சுனில்தத், அசோக்குமார், நர்கீஸ், மீனாகுமாரி, தர்மேந்திரா, ஜிதேந்திரா, மற்றும் தெலுங்குத் திரையுலகில் நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி, ஆகியோரும் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த படங்களில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

    ரஜினி - கமல்

    ரஜினி - கமல்

    ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக்காளை' முதல் ‘சிவாஜி 3-டி' படம்வரையிலும், கமல்ஹாசன் நடித்த ‘சகலாகலாவல்லவன்' முதல் ‘பேர் சொல்லும் பிள்ளை'வரையிலும் இந்த முன்னணி கலைஞர்களின் படங்களை தொடர்ந்து தயாரித்து வெளியிட்ட பெருமையைப் பெற்றது ஏவி.எம். நிறுவனம்.

    மேலும், விஜயகாந்த், அர்ஜூன், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் ஏவி.எம். தயாரித்த படங்களில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

    இணைய தளத்துக்கான திரைப்படம்

    இணைய தளத்துக்கான திரைப்படம்

    அடுத்தது ‘இணையம்'தான் உலகை ஆளப் போகிறது என்பதை உணர்ந்து, அதற்காக ‘இதுவும் கடந்து போகும்' என்ற படத்தையும் தயாரித்து இதை இணையத் தளங்களில் மட்டுமே வெளியிட்டது ஏவி.எம்.

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் பிரபு, சிவக்குமார் மற்றும் சூர்யா, ருக்மணி அவரது மகள் லட்சுமி அவரது மகள் ஐஸ்வர்யா என தலைமுறைகளைத் தாண்டிய கலைஞர்களை வைத்தும் படங்களைத் தயாரித்துள்ளது ஏவி.எம்.

    சின்னத் திரையிலும்...

    சின்னத் திரையிலும்...

    1980-ம் ஆண்டுகளில் சின்னத்திரையான தொலைக்காட்சியும் வளரத் தொடங்கியபோது சின்னத்திரைத் தொடர்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பெரும் வெற்றியைப் பெற்றது ஏவி.எம். நிறுவனம்.

    1400 எபிசோடுகள்

    1400 எபிசோடுகள்

    தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘ஒரு மனிதனின் கதை', ஒரு பெண்ணின் கதை,' சன் டிவியில் ‘சொந்தம்', ‘வாழ்க்கை', ‘நம்பிக்கை', ‘சொர்க்கம்', ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்', ‘மங்கையர் சாய்ஸ்', ஜெயா டிவியில் ‘மனதில் உறுதி வேண்டும்', ராஜ் டிவியில் ‘சவாலே சமாளி', கலைஞர் டிவியில் ‘வைர நெஞ்சம்', ‘உறவுக்குக் கை கொடுப்போம்', ‘மங்கையர் உலகம்', ‘வைராக்கியம்' என்று வளர்ந்து தற்போது ‘மோகினி'வரை 1400 எபிசோடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பி தங்களது சின்னத்திரை பயணத்தையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஏவி.எம் நிறுவனம்.

    தபால் தலை - செட்டியார் சிலை

    தபால் தலை - செட்டியார் சிலை

    ஏவி.எம். நிறுவனத்தின் திரையுலகத் தொண்டினைப் பாராட்டி மத்திய அரசு 2006-ம் ஆண்டில் தபால் தலை ஒன்றை வெளியிட்டது.

    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஏவி.மெய்யப்பச் செட்டியாரின் சிலையை அவர்களது புதிய அலுவலக வளாகத்தில் திறந்து வைத்துப் பாராட்டியது.

    நான்காவது தலைமுறை

    நான்காவது தலைமுறை

    இப்படி இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை படைத்த ஏவி.எம். நிறுவனம் தனது வெற்றிகரமான கலை உலகப் பயணத்தில், இன்று தனது நான்காவது தலைமுறையின் வழிகாட்டுதலில் 70-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதன் மூலம் மேலும் ஒரு புதிய சாதனையைப் படைக்கிறது.

    English summary
    AVM Productions, the oldest studio and production company in India, is entering its 70th year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X