twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிழல்கள் வெற்றி பெற்றிருந்தால் உலக சினிமா பக்கம் சென்றிருப்பேன்! - பாரதிராஜா

    By Shankar
    |

    அறிமுக இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ள படம் 'குற்றம் கடிதல்'. இப்படம் பல்வேறு சர்வதேச திரைபட விழாக்களில் பங்குபெற்று, தற்போது தேசிய விருதையும் வென்றுள்ளது. இந்நிலையில் 'குற்றம் கடிதல்' படத்தின் இயக்குனர் பிரம்மாவை, இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.

    சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குனர் பாரதிராஜா இயக்குனர் பிரம்மா குறித்து பேசுகையில், "என்னுடைய ‘ நிழல்கள்' படத்தின் தோல்வி தான் என்னை சாதாரணமான சினிமாவிற்குள் தள்ளியது, 'நிழல்கள்' வெற்றிப் பெற்றிருந்தால் உலகத்தரமான சினிமா பக்கம் சென்று இருப்பேன். நான் செய்ய முடியாத அந்த உலகத்தரமான சினிமாவை யாரேனும் செய்வார்களா என்று பல நாள் ஏங்கியதுண்டு. இன்றைய இளைஞர்களில் 50 சதவிதம் அப்படிப்பட்ட கதையுடன் தான் சினிமாவிற்குள் வருகிறார்கள்.

    Bharathiraja hails kutram Kadithal director

    ‘குற்றம் கடிதல்' என்ற இக்கதைக்கு மிக அற்புதமான தலைப்பு, மிக பொருத்தமான தலைப்பு. இந்தப் படம் அதன் கதை, கதாப்பாத்திரங்களின் நிலையில் இருந்து எங்கும் தடமாற வில்லை. ஒரு சினிமாக்காரன் ஒவ்வொரு காட்சிக்கும், கதாப்பாத்திரத்திற்கும் அழகு சேர்ப்பதில் குறியாக இருப்பான். இது பிரம்மா என்ற ஒரு எழுத்தாளனின் படைப்பு. அவன் அந்த கதாப்பாத்திரங்களாக மாறி அவர்களை வடித்திருக்கிறான்.

    ‘குற்றம் கடிதல்' படம் மூலம் இயக்குனர் பிரம்மா தான் ஒரு படைப்பாளி என்று நிரூபித்திருக்கிறான். படத்தில் நடித்தவர்கள் அவர் எழுத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள். புதுமுகம் ராதிகா ஒரு பள்ளிக்கூட ஆசிரியையாக பொருந்தி இருந்தாள். ஒவ்வொரு காட்சியிலும் அவள் நடிப்பும், கண்ணசைவும் பிரமாதம். மாஸ்டர் அஜய் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அப்படி ஒரு நடிப்பை நடித்திருக்கிறான். இந்த சிறுவனின் மாமனாக வரும் பாவல் நவகீதன் நிஜ வாழ்க்கையில் ஒரு தாய் மாமன் எப்படி இருப்பானோ அப்படியே இருக்கிறான். சினிமாவில் பலர், பெரும் நடிப்பினை வெளிபடுத்தியுள்ளனர். ஆனால், இப்படத்தில் அனைவரும் நடிக்கவில்லை கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

    இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன், படத்தில் தன்னை எங்கும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கதையோடு உருகி உருகி வாசித்திருக்கிறார். படத்திலிருக்கும் எல்லா வகையான சூழ்நிலைகளுக்கும் தகுந்த இசையை வழங்கி மிகவும் திறமையாக இசையை கையாண்டு இருக்கிறார். குறிப்பிட வேண்டும் என்றால் பாரதியாரின் ‘ சின்னஞ்சிறு கிளியே ‘ பாடலை இசையமைத்த விதமும் பாடலை படமாக்கிய விதமும் உலகத்தரத்திலான சிந்தனை.

    இப்படி அத்தனை துறையையும் தன் கதைக்கு ஏற்றவாறு எடுத்து சென்று இருக்கிறார் இயக்குனர் பிரம்மா. என்னையும் மிஞ்சிய ஒரு படைப்பாளி பிரம்மா. என்று சொன்னால் அது மிகையல்ல," என்றார் நெகிழ்ச்சியுடன்.

    English summary
    Director Bharathiraja has praised Kutram Kadithal movie director Bramman for the making of the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X