விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!
விமல் - அஞ்சலி மூன்றாம் முறையாக இணையும் மாப்ள சிங்கம் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.
விண்ணைத்தாண்டி வருவாயா, அழகர்சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் கயல் படத்தைத் தயாரித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி. மதன் தயாரிக்கும் புதிய படம் - மாப்ள சிங்கம்.

தூங்கா நகரம், கலகலப்பு படங்களுக்குப் பிறகு விமல், அஞ்சலி இருவரும் ஜோடியாக நடிக்கும் படம் இது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா வெற்றிப் படங்களைத் தொடர்ந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனத்துடன் விமல் இணையும் மூன்றாவது படம் இது.

மாப்ள சிங்கம் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ராஜசேகர். இவர் இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.
மாப்ள சிங்கம் படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.
ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், காளி வெங்கட், சிங்கமுத்து, சுவாமிநாதன், விஷ்ணு, மதுமிலா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூஸிக் ஸ்கூலின் வைஸ் பிரின்ஸிபால் ஆடம் க்ரீக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ரகுநந்தன் இசையமைக்கிறார். டான் அசோக் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார். இணை தயாரிப்பு : ஜேம்ஸ்
அனகாபுத்தூர் முருகன் கோவிலில் பூஜையுடன் மாப்ள சிங்கம் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications