twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு பட அதிபர் பழக்கடை அதிபரான கதை!

    By Shankar
    |

    - அழகன் தமிழ்மணி

    (தயாரிப்பாளர் & நடிகர்)

    நான் தஞ்சை மாவட்டத்தில் சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். நான் 1965ல் சென்னைக்கு வந்து புதுமுக வகுப்பு என்று சொல்லக்கூடிய பி.யு.சி எனப்படும் படிப்பை மவுண்ட் ரோட்டில் உள்ள கலைக் கல்லூரியில் பயின்றேன். அதை தொடர்ந்து என்னுடைய டிகிரியை நான் பிரெசிடென்சி கல்லூரியில் படித்தேன்.

    இந்தக் கல்லூரியில் படித்தது எனக்கு மிகப்பெரிய பெருமையாகும் ஏன்னென்றால் நான் இக்கல்லூரியில் பயிலும் போது என்னோடு படித்த நிறைய பேர் இன்று பல்வேறு துறையில் மிகப்பெரிய ஜாம்பாவான்களாக உள்ளனர். சிலர் மிகப்பெரிய அரசியில்வாதிகளாக உள்ளனர். உதாரணத்துக்கு சொல்லவேண்டும் என்றால் அண்ணன் வைகோ நான் முதல் வருடம் படிக்கும் போது அவர் எம்.ஏ படித்து வந்தார். இப்படி பாரம்பரியம் மிக்க ஓர் கல்லூரியில் நான் என்னுடைய டிகிரியை முடித்தேன்.

    Producer & Actor Azhagan Tamilmani turns as a fruit vendor!

    அதன் பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ முடித்தேன். சிலோன் பல்கலைகழகத்தில்பி.ஹெச்.டி முடித்து டாக்டரேட் பட்டம் பெற்றேன்.

    நான் என்னுடைய வாழ்க்கையை பத்திரிக்கை நிருபராகத்தான் தொடங்கினேன். அதற்குக் காரணம் என்னுடைய தாத்தா. ஒரு காலத்தில் முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோர் தஞ்சை பெரியவர் என்று அன்போடு அழைக்கக்கூடிய அன்னாரின் பேரன் நான்.

    நான் பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் நான் படிக்கும் காலத்தில் இருந்து சொந்தமாக உழைத்துத்தான் சாப்பிட என்னும் குறிக்கோளில் என்னுடைய தாத்தா உறுதியாக இருந்தார். நான் என்னுடைய வாழ்கையை சினிமா பத்திரிக்கையாளராகத்தான் நான் துவங்கினேன். அதில் இருந்து 12 வருடம் சினிமா ரிப்போர்டராக நான் பணியாற்றி வந்தேன்.

    என்னுடைய அண்ணன் முத்தாரம் எனப்படும் பிரபல பத்திரிக்கையில் வெளிவந்த கதையை வைத்து கொண்டு இதை சினிமாவாக்க வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் சொல்லுவார். பதிலுக்கு நான் அவரிடம் நமக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை என்று சொல்லுவேன். அவர் அதற்கு என்னிடம், "இல்லடா இந்தக் கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்று வெறியோடு இருந்து வந்தார். சில நாட்கள் கழித்து அண்ணனோடு மற்றும் சிலரோடு இணைந்து அவருக்கு உதவியாக அந்தக் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கினேன். அவர்கள் அனைவரும் என்னையும் படத்தில் ஒரு தயாரிப்பாளர்களாக இணைத்து கொண்டார்கள். தயாரிப்பாளர் என்றால் இப்போது நான் பெரிதாக முதலீடு செய்தேன் என்று கூற முடியாது. ஏனென்றால் அப்போது என்னுடைய மாதச் சம்பளமே வெறும் 200 ரூபாய் தான் அப்படி இருக்கும் போது என்னால் எப்படி தயாரிப்பாளராக முடியும்?

    Producer & Actor Azhagan Tamilmani turns as a fruit vendor!

    இருந்தாலும் என்னை தயாரிப்பாளராக சேர்த்து கொண்ட காரணத்தால் என்னிடம் இருந்ததை இப்படம் தயாரிக்க நானும் முதலீடு செய்தேன். அப்படி ஆரம்பிக்கப்பட்ட படம் தான் மலையூர் மம்மட்டியான். அப்படத்தை நாங்கள் 1984ல் வெளியிட்டோம். அப்படத்தில் நடித்த நடிகர் கவுண்டமணிக்கு 5000 ரூபாய்தான் சம்பளம், நடிகர் செந்திலுக்கு 3000 ரூபாய் தான் சம்பளம். இதைச் சம்பளம் என்று கூற முடியாது. ஏனென்றால் படமெடுக்கும் எங்களின் நிலையை புரிந்து கொண்டு படத்தில் நடித்த எல்லோரும் எங்களோடு இணைந்து படத்தை நன்றாக கொண்டு வர எல்லா வித உதவிகளையும் செய்தார்கள் என்றே கூறவேண்டும். அப்படி எடுக்கப்பட்டு , மாபெரும் வெற்றி படமாக மாறிய திரைப்படம் தான் மலையூர் மம்மட்டியான் திரைப்படம்.

    அண்ணன் தம்பிகள் எல்லோரும் சேர்ந்து இப்படத்தை எடுத்தோம். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் எல்லோருக்கும் தலைக்கனம் வந்துவிடுமே. ஆம் எங்களுக்குள்ளும் அது வந்துவிட்டது. அப்படி தலைக்கனம் வந்தவுடன் நாங்கள் அனைவரும் பிரிந்துவிட்டோம். பிரிந்து சென்ற எங்களுடைய அண்ணன் தம்பிகள் எல்லோரும் இணைந்து தேவி பகவதி பிலிம்ஸ் என்னும் பெயரில் படக் கம்பெனியை துவங்கி படம் தயாரிக்க தொடங்கினர். நான் வெளியே வந்துவிட்டேன். வெளியே வந்தவுடன் அன்புள்ள ரஜினிகாந்த் என்னும் படத்தை என்னுடைய இரண்டாவது படமாக நான் தொடங்கினேன்.

    முதலில் அந்த படத்துக்கு அன்புள்ள எம்.ஜி.ஆர் என்று பெயரிட்டு இருந்தோம். இந்தப் படத்தை நாங்கள் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து புரட்சித் தலைவரைச் சந்திக்கலாம் என்று நாங்கள் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சமயத்தில்தான் புரட்சித் தலைவர் தேர்தலில் அமோகமாக வென்றி ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக அரியணை ஏறியிருந்தார். அப்போது அவரைப் பார்க்க நானும் என்னுடைய நண்பன் தூயவனும் லாமேல்டன் ஸ்கூட்டரில் சென்றோம்.

    அவரைச் சந்திக்க நேரம் கிடைத்தது. நாங்கள் அவரைக் காண உள்ளே சென்றோம். எங்களைக் கண்டதும் "வாடா தூயவா... ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கிங்களே... என்ன விவகாரம்?" என்று கேட்டார் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.

    Producer & Actor Azhagan Tamilmani turns as a fruit vendor!

    ஆம், நீங்கள் நினைப்பது சரி தான். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அவருக்கு என் மேலும் தூயவன் மீதும் தனி ப்ரியம் உண்டு. என்னை அவர் 'சின்ன மணி' என்றுதான் அன்போடு அழைப்பார். அவர் என்ன விவகாரம் என்று கேட்டதும் நாங்கள் அவரிடம் கதை சொல்ல வந்திருப்பதைப் பற்றி கூறினோம்.

    அதற்கு அவர், "அட என்னடா இது... இப்போது நான் முதல்வர். எப்படி நான் படத்தில் நடிக்க முடியும்? இதை யோசிக்காம நீங்க என்னிடம் கதை சொல்ல வந்துள்ளீர்களே...", என்றார்.

    அதற்கு அவரிடம், "எனக்கு கதை சொல்ல பத்து நிமிடம் தாருங்கள்," என்று கேட்டார் தூயவன். முதல்வரும் சரி என்று கூறிவிட்டு எங்களுக்காக நேரம் ஒதுக்கி கதை கேட்டார். 10 நிமிடம் என்று ஆரம்பித்த கதை சொல்லும் படலம் ஒன்றரை மணி நேரத்தைத் தாண்டிச் சென்றுவிட்டது. கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இப்படத்தை நாம் கண்டிப்பாக செய்கிறோம். நான் எப்படியாவது அனுமதி கேட்டுவிட்டு வருகிறேன் என்றார் எம்.ஜி.ஆர்.

    ஆனால் அவரை வைத்து படமெடுக்க முடியாமல் போனது எல்லாம் பெரிய கதை. அதை நாம் தனிப் பகுதியாக பார்க்கலாம். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் கதை சொல்லப்பட்டு அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 7 நாட்கள் கால்ஷீட் என்று நாங்கள் ஆரம்பித்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 14 நாட்கள் படமெடுத்தோம். படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய அளவில் எங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

    அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் முடிந்த பின்னர் ஜம்பு சாரிடம் சென்று அவருடைய உதவியாளராகப் பணியாற்றினேன். அவரிடம் நான்கு முதல் ஐந்து படங்களில் பணியாற்றிய பின்னர் வெங்கட்ராமன் என்னும் படத்தொகுப்பாளர் ஒருவரிடம் வேலைப் பார்த்தேன். அதன் பின்னர் இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் வேலை பார்தேன். இப்படியே சினிமாவில் பல்வேறு இடங்களில் 3 முதல் ஆறு மாதங்கள் வேலை பார்த்துவிட்டு வெளியே வந்துவிடுவது வழக்கமாகிவிட்டது.

    சரி சினிமா வேண்டாம் என்று விட்டுவிட்டு சிவில் சர்வீஸ் கார்ப்ரேஷனில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கும் யூனியன் ஆரம்பித்து அதில் ஐந்து பத்து பேரைச் சேர்த்து, அப்படியே 7,000 பேரை அந்த யூனியனில் சேர்த்து திரும்பி வந்து பத்திரிக்கையாளர் ஆகி மீண்டும் சினிமாவுக்கு வந்து படம் தயாரிக்கத் தயாரானேன். இப்படி மாறி மாறி பயணித்துக் கொண்டு இருந்த நான் மீண்டும் சினிமாவில் களமிறங்கி இயக்குநர் அமீர் ஜானை வைத்து 'தர்ம பத்தினி' என்னும் கதையை தயாரிக்க முடிவு செய்து அந்த பணிகளில் இறங்கினேன். அந்த படம் மிகபெரிய அளவில் வெற்றி பெற்று 125 ஓடி எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

    மலையூர் மம்மட்டியான், அன்புள்ள ரஜினிகாந்த், தர்ம பத்தினி ஆகிய எல்லா படங்களும் 125 நாட்களுக்கு மேல் ஓடி எனக்கு நல்ல பெயரைக் கொடுத்தன. அதைத் தொடர்ந்து சோலைக்குயில் என்னும் படத்தை தயாரிக்க முடிவு செய்து அந்த படத்தின் பணியில் இறங்கினேன். அந்த படத்தில் இயக்குநர், துணை இயக்குநர் , இசையமைப்பாளர் என எல்லாம் புதியவர்கள். என்னுடைய பல படங்களில் பல நடிகர்களை நான் அறிமுகம் செய்துள்ளேன். ஆனால் இத்தனை படமெடுத்து , இத்தனை பேரை அறிமுகம் செய்த என்னை யாருக்கும் தெரியாது. நான் அறிமுகம் செய்த யாரும் என்னை வந்து பார்த்து, 'எப்படி இருக்கீங்க அண்ணா?' என்று ஒரு வார்த்தை கூட கேட்டது இல்லை. 'நான் நன்றாக இருக்கிறேன் உங்களுக்கு படம் பண்ணுகிறேன்' என்றும் சொன்னது இல்லை.

    முதன் முதலில் கார்த்திக் ரசிகர் மன்றம் என்ற ஒன்றை ஆரம்பித்து அவருக்கு வாழ்க்கை கொடுத்தது நான்தான். ஆனால் நான் மூன்றாவது முறையாக அவரை வைத்துப் படமெடுக்க கால்ஷீட் கேட்ட போது அவரை மறுத்துவிட்டார். அதன் பின்னர் நான் தயாரித்த படத்தில் எனக்கு 3 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் நான் சுரேஷ் என்பவரின் அறிவுரையின் பேரில் சன் தொலைக்காட்சியில் சீரியல் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டேன். ஆம் மங்கை என்னும் சீரியலை அரிராஜன் என்பவரின் இயக்கத்தில் நான் தயாரித்தேன். அந்த சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சன் டிவியில் முதன் முதலாக மதியான நேரத்தில் சீரியல் தயாரித்து வழங்கியது நான் ன். இப்படி வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்க, திடீரென்று படம் தயாரிக்க ஆசைப்பட்டு, பாலு இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரித்தேன். படம் பெரிய அளவில் தோல்வி அடைந்தது.

    அந்த படம் தோல்வி அடைந்த மீண்டும் 3 கோடி நஷ்டப்பட்டேன். நஷ்டத்தில் இருந்து மீள மீண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்த போது மீண்டும் சீரியல் தயாரிக்கலாம் என்று யோசனை வந்தது. அதன் படி மீண்டும் சீரியல் தயாரிக்க சன் டிவியில் ஸ்லாட் கேட்க சென்றேன். ஆனால் அவர்கள் சீரியலில் மட்டும் கவனம் செலுத்தாமல் சினிமாவில் கவனம் செலுத்தியதால் எனக்கு ஸ்லாட் தர மறுத்தனர்.

    பின்னர் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் நடிகனாக அறிமுகமனேன். பின்னர் அதை தொடர்ந்து இன்று வரை பல படங்களில் நடித்து வருகிறேன். இப்போது என்னுடைய மருமகனுடன் இணைந்து கோயம்பேட்டில் பழக்கடை ஒன்றைத் துவங்கியுள்ளேன். அது நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. மீண்டும் சீரியல் மற்றும் சினிமா தயாரிப்பேன். இப்போது இயக்குநர் அமீர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். புயலாய் வருவோம் என்னும் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளேன்.

    என்னுடைய வாழ்கையை, 'ஒரு பட அதிபர் பழக்கடை அதிபரான கதை' என்று சொல்லலாம்.

    நன்றி: Fridaycinemas.com

    English summary
    Producer & Actor Azhagan Tamilmani's exciting life story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X