twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேகமெடுக்கும் விஜய், அஜித்... வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்?

    |

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. எப்போதுமே முதலிடத்துக்கு வருவது முதலிடத்துக்கான போட்டியில் இருந்தவர்களாக இருப்பதில்லை. எங்கிருந்தோ ஒருவர் யாருமே எதிர்பாராமல் முதலிடத்தைப் பிடிப்பார். தமிழக அரசியலிலும் இதுபோலத்தான் நடந்திருக்கிறது. அண்ணாவுக்கு பிறகு கலைஞர் பதவியை பிடிப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா வருவார் என்றும் எதிர்பார்க்கவில்லை. இப்போது அதுபோல ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

    தமிழக அரசியலும் தமிழ் சினிமாவும் தவிர்க்க முடியாத உடன்பிறப்புகள். வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஐந்து முதல்வர்களை தந்திருக்கிறது தமிழ் சினிமா. இப்போது இருக்கும் ஹீரோக்களுக்கும் அரசியல் ஆசையோ, ஈடுபாடோ இல்லாமல் இல்லை. சிலர் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்கள். ஹீரோக்களை விட அவர்கள் ரசிகர்கள் தான் ஹீரோக்களை அரசியலுக்கு இழுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். சோஷியல் மீடியாக்கள் இதற்கு தான் அதிகம் பயன்படுகின்றன. ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள் ஓகே... ஆனால் ஹீரோக்கள்? தமிழ் ஹீரோக்களின் தற்போதைய மனநிலையை விசாரித்தோம்.

    ரஜினி

    ரஜினி

    இந்த விஷயத்தில் மற்றவர்களை விட அதிகம் அனுபவமுள்ளவர் ரஜினிதான். அதனாலேயே என்னவோ இரு தரப்பினரையும் மாறி மாறி சமாளித்து செல்வதை இலாவகத்துடன் கையாளுகிறார். அந்த வகையில் அரசியலுக்கு வராமலேயே தேர்ந்த அரசியல்வாதி ஆகிவிட்டார் ரஜினி. இந்த பக்கம் கருணாநிதியைப் புகழ்ந்தால் சில நாட்களிலேயே அந்த பக்கமும் ஒரு வாய்ஸ் கொடுத்து பேலன்ஸ் பண்ணி விடுவார். அதில் லேட்டஸ்ட் ஜெயலலிதாவை புகழ்ந்திருப்பதும், கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததும் சேரும். ரசிகர்கள் போராடினாலும் ரஜினி நேரடியாக அரசியலுக்கு வருவது புலி வருது கதையாகத்தான் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.

    இனி ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்கிறார் ரஜினிக்கு நெருக்கமான மூத்த தயாரிப்பாளர் ஒருவர். "ரஜினியின் மனநிலையோ, உடல்நிலையோ அரசியலுக்கு தயாராக இல்லை. நடித்துக்கொண்டிருக்கும் 2.ஓ படத்தின் படப்பிடிப்பே ரஜினியின் உடல்நிலையால் பலமுறை பாதிக்கப்பட்டது. எனவே ரஜினிக்கான காட்சிகள் குறைக்கப்பட்டு அக்‌ஷய் குமாரை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். ரஜினி மிகவும் தயங்குவதே தன் குடும்பத்தினரை நினைத்துதான். எனவேதான் அரசியலே வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டார் ரஜினி. நமக்கேன் வம்பு என்று எல்லா தரப்புக்கும் நண்பராக செயல்படுகிறார்," என்கிறார்.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமர் ஆவது எப்போது என்று ஒரு மேடையில் சிதம்பரம் முன்பு சொல்லப்போய் அந்த பேச்சு விஸ்வரூபம் எடுத்து கமலை பதம் பார்த்தது. நாட்டை விட்டே போக முடிவெடுக்கும் அளவுக்கு போன பிரச்னை ஒரு வழியாகத் தீர்ந்தது. இதில் தொடங்கிய ஜெயலலிதா கமல் பனிப்போர் உத்தமவில்லன், பாபநாசம் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது வரை தொடர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்கு கூட கமல் அஞ்சலி செலுத்த வரவில்லை. அஞ்சலி செய்தியைக் கூட 'சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று வேண்டாவெறுப்பாக ஒரு ட்விட்டோடு முடித்துக்கொண்டார். கமலை விட்டு சமீபத்தில் பிரிந்த கவுதமி பிரதமருடன் சந்திப்பு, ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகக் கடிதம் என்று அரசியலில் ஆக்டிவாகி இருக்கிறார். ஆனால் கமலோ அமைதியாக வேடிக்கை பார்க்கிறார். அதிகபட்சம் கமெண்ட் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறார். ஆனால் அதற்கே பிரச்னைகள் வருவதால் இப்போது ஆள் கப்சிப்.

    விஜய்

    விஜய்

    விஜய்யும் ஜெயலலிதாவால் எதிரியாக பார்க்கப்பட்டவர்தான். காரணம் ஆரம்பத்தில் திமுக ஆதரவாளராக விஜய் வலம் வந்தது. பின்னர் ஜெயலலிதா ஆதரவாளராகி அதுவும் சரி வராததால் பாஜக ஆதரவாளர் ஆனார். இப்போது கறுப்பு பண விவாகரத்திலும் வாயை விட்டு மாட்டிக்கொண்டுள்ளார். ஜெயலலிதா இருக்கும்வரை அடக்கி வாசித்தவர் அவர் மறைந்த பிறகும் பைரவா ஆடியோ வெளியீட்டை வைக்காமல் நழுவியிருக்கிறார். ஆனால் விஜய் மனதுக்குள் அரசியல் ஆசை இருந்துகொண்டேதான் இருக்கிறது. ரசிகர்களை அழைத்து அடிக்கடி ரகசிய மீட்டிங் போடும் விஜய் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அப்படியொரு மீட்டிங் போட்டுள்ளார். எனவே எந்த நேரத்திலும் விஜய் களம் இறங்கலாம். அதற்கான சந்தர்ப்பதுக்கு தான் காத்திருக்கிறார் என்கிறார்கள். ‘அப்பாவை மட்டும் கிட்டத்தில் சேர்க்க வேண்டாம்' என்ற நெருக்கமானவர்களின் அட்வைஸை ஃபாலோ செய்கிறார். எந்த கட்சியிலும் சேராமல் ரசிகர்கள் பலத்தை தனிக்கட்சியாக மாற்ற திட்டமிடுகிறார். தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை கொஞ்சம் கட்டுப்பாட்டுக்கு வந்ததும் ஒரு ரசிகர் மாநாடு நடத்தப்படலாம்.

    அஜித்

    அஜித்

    இந்த வரிசையில் அம்மாவின் ஆதரவு பெற்ற ஒரே ஹீரோ அஜித்தான். கருணாநிதி ஆட்சியில் நடிகர்கள் மிரட்டப்பட்டதை அவரிடமே மேடையில் சொல்லி கருணாநிதிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியவர்தான் அஜித். அதன்பின்தான் அதிமுக ஆதரவாளராக அறியப்பட்டார். அஜித் திருமணத்துக்கு நேராக சென்று வாழ்த்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பின் அடுத்த முதல்வர் லிஸ்டில் அஜித்தின் பெயரும் அடிபட்டது. அதற்கு ஏற்றாற்போல அஜித்தும் ஐரோப்பாவிலிருந்து பல மணி நேரங்கள் பயணம் செய்து ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். விடியற்காலையில் அஜித் வந்து அஞ்சலி செலுத்தியது ‘எப்படியோ' கவர் செய்யப்பட்டு ஃபோட்டோ, வீடியோவாக வலம் வந்தது. இது எல்லாமே அஜித்துக்கும் அரசியல் ஆசை இருப்பதைத்தான் காட்டுகிறது. 'தான் பேசாவிட்டாலும் தன்னைப் பற்றி எல்லோரையும் பேச வைக்கிறார். தனக்குண்டான நல்லவர் பிம்பத்தை அரசியலாக்கத் திட்டமிடுகிறார் அஜித்' என்கிறார்கள். ஆனால் நேரடியாக இப்போது களத்தில் குதிக்க மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.

    இவர்கள் தவிர விஷால், த்ரிஷா, நயன் தாரா என்று நண்டு சிண்டுகளுக்கு கூட அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால் நடிகர்களை நம்பியது போதும் என்ற மக்கள் மனநிலைக்கு வந்திருந்தால் இவர்கள் யாருமே களம் இறங்குவது சிரமம். எனவே யாராவது முதலில் அடியெடுத்து வைக்கட்டும். பின்னர் நாம் களம் இறங்கலாம் என்று காத்திருக்கிறார்கள் அட்டகத்தி ஹீரோக்கள்.

    - ஆர்ஜி

    English summary
    After Jayalalithaa's demise, any of our heroes going to fill the gap in Tamil Nadu politics? Here is an analysis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X