twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்த் - திரையுலகின் கடைசிக் 'கடவுள்'!

    By Shankar
    |

    -அருணன்

    தியாகராஜ பாகவதர், என்.டி.ராமா ராவ், எம்.ஜி.ஆர் என நம் திரையுலகம் மிகச் சில 'கடவுள்'களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தை, ஒவ்வொரு தேசத்தை ஆட்சி செய்தவர்கள். திரையில் தோன்றிய போதெல்லாம் ரசிகர்களை ஆனந்தக் கடலில் துள்ளிக் குதிக்கச் செய்தவர்கள்.

    மக்கள் எல்லா நடிகர்களுக்கும் அந்த பாக்கியத்தை அளிப்பதில்லை. அந்த வகையில் நம் காலகட்டத்தின் கடவுள், சொல்லப்போனால் கடைசிக் கடவுள் ரஜினிகாந்த்.

    Rajinikanth, the last god of Cinema!

    ஏன்? இவருக்குப் பிறகு வேறு யாரும் அந்த இடத்தைப் பிடிக்க முடியாதா?

    பிடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. கிடைப்பதற்கரிய ஒரு விஷயம் நமக்கு எப்போதாவது கிடைக்கும்போதே அதன் சிறப்பை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஒரு காலத்தில் நடிகர்களைத் தொடர்பு கொள்வதோ, காண்பதோ அவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்குவதோ மிகப்பெரிய விஷயம். உங்களின் கருத்தை ஒரு நடிகருக்குத் தெரிவிப்பதோ அல்லது அவருக்கு எதிரான ஒரு எதிர்மறை கருத்துக்களை பெரிய அளவில் பரப்புவதோ இயலாத காரியம்.

    ஆனால் இன்று...டிவிட்டர் புண்ணியத்தில் நீங்கள் என்ன நினைத்தாலும் ஒரு நடிகரிடம் நேரடியாகச் சொல்லி விட முடியும். உங்கள் கருத்துக்களை நொடிப் பொழுதில் உலகத்திற்கே பரப்ப முடியும். இணைய வசதியுடன் கூடிய ஒரு கணிப்பொறி போதும். எவ்வளவு பெரிய மனிதனின் அஸ்திவாரத்தையும் உங்களால் ஆட்டிப் பார்க்க முடியும்.

    நிழல் திரையில் நடிகர்கள் நற்கருத்துக்களைக் கூறும்போது முன்பு வாய்மூடிக் கேட்ட மக்கள், இன்று ஒரு நடிகர் திரைப்படம் வாயிலாகக் கருத்துச் சொல்ல முயலும்போது அவரின் சுய வாழ்க்கையை ஒப்பிட்டு 'இந்த கருத்தை சொல்ல நீ தகுதியானவானா?' என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்கிறார்கள்.

    காலையில் எழுந்து தேநீர் விளம்பரத்திலிருந்து, குளிர்பானம், துணிக்கடை, நகைக்கடை விளம்பரங்கள் என அனைத்திற்கும் வந்து முகம் காட்டி விட்டுச் செல்லும் நடிகர்களைத் திரையில் காணும்போது ஏனோ மக்களுக்கு அந்த ஒரு சிலிர்ப்பு வருவதில்லை. அந்த வகையில் இதுபோன்ற அபரிமிதமான இணைய வளர்ச்சிகளிலிருந்தும் விளம்பர வியாபாரங்களிலிருந்தும் விலகி நிற்கும் கடைசி நடிகர் திரு. ரஜினிகாந்த்.

    இப்போது கபாலிக்காக நடந்து கொண்டிருக்கும் கொண்டாட்டங்கள் உலகின் எந்த மொழிப் படங்களுக்கும், எந்த ஒரு நடிகருக்கும் நடந்திராத ஒரு அதிசயம். கடந்த ஒருமாதமாக குழந்தைகள் முதல் பெரியவர் எங்கு பார்த்தாலும் பேசிக்கொள்வது கபாலி பற்றியே. இணைய தளங்கள் எதைத் திறந்தாலும் முதலிலும், முழுவதிலும் வந்து நிற்பது கபாலி பற்றிய செய்திகளே.

    வெளிநாடுகளில் இந்த திரைப்படத்திற்கு செல்வதை திருவிழா போல கொண்டாடுகின்றனர். பாரிஸின் ரெக்ஸ் திரையரங்கில் இவரைப் பற்றிய இரண்டு நிமிட Mashup -க்கு திரையரங்கே விசில் சத்தத்தாலும், தலைவா என்ற சத்தத்தாலும் அதிர்கிறது. அந்தத் திரையரங்கில் வாழ்நாளிலேயே இப்படி ஒரு ஆரவாரத்தைக் கண்டிருக்க மாட்டார்கள். இரண்டு வயது குழந்தைகள் கபாலி வீடியோக்களை பலமுறை போட்டு காண்பிக்கச் சொல்லி நச்சரிக்கின்றன. அவரைப் போலவே செய்து பார்க்கின்றன.

    கார்ப்பரேட் கம்பெனிகள் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கின்றன. முதல் காட்சிக்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கபாலியைப் பார்ப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு சிலர் வருகின்றனர். தமிழர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநில மக்கள் அதற்கும் மேல் இருக்கிறார்கள். எவ்வளவாக இருந்தாலும் சரி முதல் காட்சி நாங்களும் பார்க்க வேண்டும் டிக்கெட் கேட்டு நச்சரிதவர்கள் ஏராளம்..

    செக்ரட்டரியேட்டிலிருந்து லெட்டர் பேடில் முத்திரையுடன் ஒரு மந்திரியின் பிஏ முதல் காட்சிக்கு டிக்கெட் கேட்கிறார். அமைச்சர்கள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்க என்னென்ன செய்தார்கள் என்ற கதைகளைப் படித்திருப்பீர்கள். இதற்கிடையில் வயிற்றெரிச்சல் தாங்காத ஓரிருவர் வழக்கு தொடுக்கின்றனர். வழக்கை தள்ளுபடி செய்யும் நீதிபதி 'மகிழ்ச்சி' என்று கூறி முடிக்க நீதி மன்றமே மகிழ்ச்சியில் திளைக்கிறது.

    ஆயிரம், ரெண்டாயிரம் என முதல் காட்சிக்கான கட்டணம் வியாபார நோக்கில் எகிருகின்றது. எவ்வளவாயினும் கொடுக்க மக்கள் இருக்கின்றனர். ஆனால் திரையரங்கில் டிக்கெட்டுகள்தான் இல்லை. சிறுவயதில் தீபாவளிக்கு முதல்நாள் மகிழ்ச்சியில் தூக்கம் வராது. அதைப்போல் முழுவதும் தூங்காமல் பண்டிகைக் கொண்டாடுவதைப் போல் திரையரங்கிற்குச் செல்கின்றனர். முதல் நாள் படத்தைப் பற்றி பெரும்பாலான எதிர்மறைக் கருத்துக்கள். ஆனால் போகப்போக ரஜினியை எதிரியாக பாவித்தவர்களே அவர் படத்தை தூக்கி நிறுத்துகின்றனர்.

    முன்பு ஏதேதோ சொல்லி ரஜினியை வசைபாடியவர்கள் இன்று அவர்களாகவே ஏதேதோ சொல்லி ரஜினியின் பெருமைப் பாடுகின்றனர். வசைபாடியவர்களும் வீண் விளம்பரத்திற்காக இவரை வம்பிழுத்தவர்களும் பின் அவரைப் புகழ்வது ஒன்றும் புதிதல்லவென்று அனைவருக்கும் தெரியும் என்கிறார்கள்.

    முதல் நாளே இணையத்தில் வெளியிடுவோம் என சவால் விட்டனர். சவாலிலும் ஜெயித்தனர். பெரும்பாலானோரின் ஆண்ட்ராயிடுகளிலும் அதிகாலையே கபாலி வாங்கி வைத்துக்கொண்டனரே தவிர ஒருவருக்குக் கூட அதை மொபைலில் பார்க்க மனது வரவில்லை என்பதே உண்மை.

    சிலர் எல்லாம் வியாபாரம்... எல்லாம் பணம் என்கின்றனர். வியாபார யுக்தியால் மட்டுமே ஒருவர் இவ்வளவு உயரத்தை அடைய முடியாது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல. எல்லோருக்குமே தெரியும்.

    நாம் நம் தலைமுறையில் பார்த்து இந்த அளவு வியக்கும் கடைசி Icon திரு ரஜினிகாந்த் மட்டுமே. சிறிவர் முதல் பெரியவர் வரை, அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை திரையில் ஒருவரைக் கண்டதும் குழந்தையாக மாறி ஆர்ப்பரிப்பது இவர் ஒருவரைக் கண்டு மட்டுமே. அதிலும் கபாலி பார்த்த பெண்களின் ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் வியப்பின் உச்சம்!

    இவையெல்லாம் என்ன? அப்படியென்ன இவருக்கு மட்டும் அந்த சிறப்பு? பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. பின்புலத்துடன் வரவில்லை. யாரையும் ஏமாற்றிப் பிழைக்கவில்லை. கண்டக்டராக அடிமட்டத்திலிருந்து படிப்படியாக உழைப்பால் உயர்ந்தவர். இந்த டீத்தூளை வாங்கு, இந்தக் கடையில் துணி வாங்கு, இந்த கடையில் நகை வாங்கு எந்த ஒரு விளம்பரப் பொருளையும் மக்கள் மீது திணிக்காதவர். எவ்வளவு உயரத்திலும் தன் நிலை மறக்காதவர். இன்றைய சூழலில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ரஜினிகாந்தின் வெற்றி ஒரு சாமான்யனின் வெற்றியாகவே கருதப்படுகிறது.

    ஒவ்வொருவருக்கும் ஒரு துறையில் பிடிப்பு இருப்பதற்கு ஒரு சிலர் காரணமாக இருப்பார்கள். உதாரணமாக கிரிக்கெட் ரசிப்பவர்களுக்கு முன்பு கபில். அடுத்து சச்சின். இப்போது தோணி. அதற்குப் பிறகு? கபிலின் ஓய்வுக்குப் பிறகு பாதிப்பேர் கிரிக்கெட் மறந்தார்கள். மீதமிருப்பவர்களைக் கட்டி வைத்திருந்தவர்கள் சச்சினும், தோணி. தோணியின் ஓய்வு மீதமிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோரின் ஓய்வாகத்தான் இருக்கும்.

    அடுத்து வரும் தலைமுறை நடிகர்களுக்கு இன்று இருப்பது போல மதிப்பும், அவர்களைப் பார்க்கும்போது மக்களுக்கு சிலிர்ப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. நடிகர்கள் 'நடிப்பு' என்ற தொழிலை செய்யும் சாதாரண மனிதர்களாகத்தான் பார்க்கப்படுவார்கள். இன்று இணையத்தில் கபாலி திரைப்படத்தின் கொண்டாட்டங்களாக வரும் ஒவ்வொரு வீடியோவும் பிற்காலத்தில் நாமே பார்த்து வியக்கப் போகும் பொக்கிஷங்கள்.

    இத்தனை மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் ஒவ்வொருவரும் குழந்தைகளாக மாறி ஒரு தனிமனிதனின் திரைப்படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் கடைசி மனிதனும், கடைசி நடிகரும், கடைசிக் திரையுலகக் கடவுளும் ரஜினிகாந்த்தாகவே இருப்பார்!

    English summary
    Rajinikanth is the last God of Cinema history because no actors have his charisma, mass and fans love.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X