»   »  விஷால் அணிக்கு முதல் தோல்வி.. சேலம் நாடக நடிகர் சங்கத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது

விஷால் அணிக்கு முதல் தோல்வி.. சேலம் நாடக நடிகர் சங்கத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கம் இரண்டாக உடைந்தது, நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும் இளம் நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும் இந்த பிரச்சினையின் மூலம் உருவானது.

கடந்த மாதம் நடக்க இருந்த நடிகர் சங்கத் தேர்தல் சென்னை உயர்நீதி மன்றத்தின் தடை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள நாடக நடிகர் சங்கத்தில் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

Salem Drama Union Election Results

இதில் விஷால் அணியினரும், ராதாரவி அணியினரும் மோதினர். முடிவில் ராதாரவி அணியினர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தல்

தற்போதைய நடிகர் சங்கத் தலைவராக நடிகர் சரத்குமார் இருக்கின்றார், நடிகர் சங்கத்திற்கு முறையான கட்டிடம் இல்லை எனவே புதிதாக நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று நடிகர் விஷால் குரல் கொடுத்தார். இதனை சரத்குமாரும் ஒப்புக் கொண்டு விரைவில் சங்கக் கட்டிடத்தை கட்டுவோம் என்று உறுதியளித்தார்.

கட்டிடம் முடிந்தால் தான் கல்யாணம்

சரத்குமார் சொன்னபடி கட்டிடம் கட்டும் முயற்சிகளை எடுக்கவில்லை என்று விஷால் குற்றம் சாட்டினார், இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் இரண்டாக உடைந்தது. இளம் நடிகர்கள் விஷால் தலைமையில் ஒன்று திரண்டனர். இந்த மோதல் பெரிதாக வெடித்தபோது நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டி முடித்து விட்டுத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சபதம் செய்தார் விஷால்.

தள்ளிப்போன தேர்தல்

இந்நிலையில் கடந்த மாதம் நடிகர் சங்கத் தேர்தல் நடக்க இருந்தபோது அதனை எதிர்த்து விஷால் கோர்ட் படியேற, சங்கத் தேர்தலை தள்ளி வைத்து தீர்ப்பு வழங்கினர் நீதிபதிகள்.

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கம்

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

தேர்தலில் மோதிய ராதாரவி - விஷால் அணியினர்

இதில் தலைவராக அத்தியப்பனும், துணைத்தலைவராக கண்ணனும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் பதவிக்கு நடிகர் ராதாரவி அணியில் மேயர் சவுண்டப்பனும், விஷால் அணி தரப்பில் ரகுபதியும் போட்டியிட்டனர். இதேபோல் துணைச்செயலாளர் பதவிக்கு முத்துகிருஷ்ணன், ராஜசிகாமணி ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஏ.பி.சக்திவேல் மற்றும் சுந்தரமும் போட்டியிட்டனர். இதுதவிர, 10 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு (ஆண்-7, பெண்-3) 18 பேர் போட்டியிட்டனர்.

அமைதியாக நடைபெற்ற தேர்தல்

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 217 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள நாடக நடிகர் சங்க கட்டிடத்தில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் மூத்த நாடக நடிகர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். முடிவில் 217 வாக்குகளில் 205 வாக்குகள் பதிவானது. ஒரு வாக்கு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.

மண்ணைக் கவ்விய விஷால் அணியினர்

அதைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. முடிவில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மேயர் சவுண்டப்பன் 131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரகுபதிக்கு 74 வாக்குகள் (விஷால் அணி) கிடைத்தது. இதேபோல் ராதாரவி அணியில் இருந்து துணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட முத்துகிருஷ்ணன் 138 வாக்குகளும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ஏ.பி.சக்திவேல் 152 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சவுண்டப்பன் தற்போது 10வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஷால் அணி, ராதாரவி அணி இங்கே கிடையாது

செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சேலம் மேயர் சவுண்டப்பன் கூறுகையில், '' கடந்த 40 வருடங்களாக இதில் நான் உறுப்பினராக இருக்கிறேன்.எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை. ஒரு பிரிவினர்தான் தங்களை விஷால் அணியினர் என்று கூறிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டனர். இப்போது அவர்கள்தான் தோல்வியை சந்தித்துள்ளனர் என்றார். இங்கு ராதாரவி அணி என்றோ விஷால் அணி என்றோ கிடையாது. சவுண்டப்பன் அணிதான் உண்டு என்றார்.

எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க தேர்தல் முடிவு குறித்து நடிகர் விஷால் அணியின் பிரதிநிதி ஜெரால்டு, செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த ரகுபதி ஆகியோர் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். சேலம் நாடக நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை சேர்ந்த செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ரகுபதிக்கு 74 ஓட்டுகள் கிடைத்தது. அவர் தோல்வி அடைந்தாலும் இதுவே விஷால் அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று பல்வேறு மிரட்டல்கள் வந்தது. இருப்பினும் துணிச்சலுடன் போட்டியிட்டோம். எங்களுக்கு கிடைத்த 74 ஓட்டுகளும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க கூடிய தகுதியுள்ளவர்களின் ஓட்டுகள் ஆகும். நடிகர் சங்க தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால் மீதியுள்ள ஓட்டுகளை பெறுவதற்கு மற்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்போம். என்று சற்றும் மனம் தளராது விஷால் அணியினர் கூறியிருக்கின்றனர்.

எங்கே முடியும் இந்தத் தேர்தல் யாரோ யாரோ அறிவார்.

English summary
Salem Drama Union Election, Vishal Team Mates Failure this Election.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos