twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கத்துக்குட்டி படத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கம் பாராட்டு!

    By Shankar
    |

    மீத்தேன் திட்டத்துக்கு எதிராகவும் விவசாயிகளின் வேதனைகளைச் சொல்லும் விதமாகவும் 'கத்துக்குட்டி' படத்தை இயக்கிய இரா.சரவணனுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு விழா நடத்தி கௌரவித்திருக்கிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பாராட்டு விழாவை நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 'கத்துக்குட்டி' பட இயக்குநர் இரா.சரவணனை 'மண்ணின் இயக்குநர்' எனக் கௌரவித்தது.

    Tamil Nadu Farmers Association felicitates Kaththukkutti

    ஏராளமான விவசாயிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்துகொண்ட இந்த விழாவில், இயக்குநரின் சொந்த ஊரான புனல்வாசல் கிராமத்தினர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

    விழாவில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பாலசுந்தரம், ''ஒரு பத்திரிகையாளராக இருந்து செய்த பணியைக் காட்டிலும் மெச்சத்தக்க பணியை சினிமாவில் செய்திருக்கிறார் சரவணன். டெல்டா மாவட்ட விவசாயிகளின் மனசாட்சியாக 'கத்துக்குட்டி' படத்தை எடுத்திருக்கும் சரவணன், மீத்தேன் அபாயங்களை அனைத்து விவசாயிகளுக்கும் புரியும் விதமாக கிராபிக்ஸ் செய்து காட்டி இருக்கிறார். நம்முடைய மண்ணுக்கான பிரச்னையை இவ்வளவு நுட்பமாகச் சொல்லி, மண்ணின் மைந்தன் என்பதை அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார் சரவணன்.

    Tamil Nadu Farmers Association felicitates Kaththukkutti

    'கத்துக்குட்டி' படம் வெளியான நான்காவது நாளே மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. 'கத்துக்குட்டி' படத்துக்கும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கும் கிடைத்த முதற்கட்ட வெற்றி இது. 'கத்துக்குட்டி' படத்தைப் பார்த்த ஒவ்வொருவருமே மீத்தேன் திட்டத்துக்கு எதிரான போராட்டவாதிகளாக மாறி இருக்கிறார்கள். முதல் படைப்பிலேயே நம் மண்ணுக்கான மரியாதையையும் விவசாயிகளுக்கான பெருமையையும் வீரியமாகச் சொல்லியிருக்கும் சரவணன், அடுத்தடுத்த படைப்புகளையும் மக்களுக்கான படைப்பாகவே செய்ய வேண்டும்!" எனப் பாராட்டினார்.

    அடுத்து பேசிய வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், ''விவசாயக் கடன், மது பிரச்னை, மீத்தேன் அபாயம், விவசாயச் சாவு, மின்சார சிக்கல், காவல்துறை அலட்சியம், சாதியக் கொடுமை, வாரிசு அரசியல் என சகலவிதமான கருத்துக்களையும் முதல் படத்திலேயே தைரியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரவணன். ஒவ்வொரு காட்சியிலும் நம் மண்ணுக்கான மரியாதையையும் மகத்துவத்தையும் காட்டி இருக்கிறார். ஒருங்கிணைந்த தஞ்சை மக்களின் மனங்களில் காலத்துக்கும் மாறாத கம்பீரத்தை 'கத்துக்குட்டி' படம் மூலமாகப் பெற்றிருக்கிறார் சரவணன். 'கத்துக்குட்டி' படம் தஞ்சை மாவட்டத்தின் கம்பீரக் குட்டியாக எந்நாளும் விளங்கும்!" என்றார்.

    இறுதியாகப் பேசிய இயக்குநர் இரா.சரவணன், ''நான் ஒரு விவசாயக் கூலியின் மகன். விவசாயக் கூலி வேலைகளைச் செய்துதான் பணிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். என்னுடைய முதல் படைப்பு மண்ணுக்கான படைப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். விவசாய மக்களின் ஆத்ம குரலாகவே 'கத்துக்குட்டி' படத்தை இயக்கினேன். விவசாயத்தைக் கதைக் களமாக வைத்துப் படம் எடுப்பது இன்றைய காலகட்டத்தில் சிரமமானது. என் தயாரிப்பாளர்கள்தான் இதனைச் சாத்தியமாக்கினார்கள். மிக இக்கட்டான நேரத்தில் இந்தப் படத்தை வெளிக்கொண்டு வர சுந்தரபரிபூரணன் என்கிற ஒரு விவசாய ஆர்வலர்தான் உதவினார். இங்கே கிடைக்கும் கைத்தட்டல்கள் அனைத்தும் அவரைத்தான் போய்ச் சேர வேண்டும். நிறைய காயங்களோடு இருக்கும் எனக்கு விவசாய மக்கள் எடுத்திருக்கும் விழா ஆறுதலாக இருக்கிறது. 'கத்துக்குட்டி' படத்துக்கு கிடைத்திருக்கும் மரியாதை, நல்ல படைப்புகளை மென்மேலும் கொடுக்க வைக்கும்!" என்றார்.

    விழாவில் புனல்வாசல், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, துறவிக்காடு, வலசக்காடு, நரியங்காடு, ஒட்டங்காடு உள்ளிட்ட கிராமத்தினர் இயக்குநர் சரவணனுக்கு பொன்னாடை போர்த்தியும், அன்பளிப்பு வழங்கியும் கௌரவித்தனர். சரவணனின் பள்ளி ஆசிரியர்கள் கோவிந்தராஜ், கோவிந்தம்மாள் இருவருக்கும் விழாவில் மரியாதை செய்யப்பட்டது. சரவணனின் குடும்பத்தினரை மேடைக்கு வரவழைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிறப்பு செய்தது.

    English summary
    The Tamil Nadu Farmers Association has felicitated Director Era Saravanan for his recent release Kaththukkutti.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X