twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏறுதழுவுதல் குற்றமல்ல... - வைரமுத்து

    ஏறு தழுவுதல் குற்றம் என்றால், சிவபெருமானை என்ன செய்வீர்கள்? சிவன், கடவுள் என்பதெல்லாம் இந்து மதத்தின் நம்பிக்கை என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

    By Mayura Akilan
    |

    சென்னை: அமீர் இயக்கத்தில் ஆர்யா, சத்யா நடிக்கவிருக்கும் சந்தனத்தேவன் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், வைரமுத்துவும் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தனது கருத்தை தெரிவித்தார்.

    அப்போது அவர், ஜல்லிக்கட்டு என்பது தமிழ் வார்த்தையல்ல. வட்டார வழக்கில் அது மாடு பிடித்தல், இலக்கிய வழக்கில் ஏறு தழுவுதல். உச்சநீதிமன்றத்தையும், மத்திய அரசையும் நான் பணிவோடு கேட்கிறேன். தமிழர்கள் அல்லாத மாற்று கலாச்சாரவாதிகளையும் இந்த ஏறு தழுவுதலை எதிர்க்கிற கூட்டத்தையும் பார்த்து நான் ஒன்று கேட்கிறேன்.

    Vairamuthu Speech Jallikattu to Santhana Thevan movie

    எங்களது தமிழர்கள் சொல்லில் பண்பாடு வைத்திருக்கிறார்கள். ஏறு தழுவுதல். தழுவுதல் என்றால் காயப்படுத்துதல் என்று அர்த்தமாகுமா? தழுவுதல் என்றால் வதை என்ற துன்பம் வருமா? தழுவுதல் என்றால் ரணம் நேருமா? தழுவுதல் என்றால் ஒரு உயிருக்கு விரோதமான காரியம் என்று ஒப்புக் கொள்ளப்படுமா?

    ஏறு தழுவுதல் குற்றம் என்றால், சிவபெருமானை என்ன செய்வீர்கள்? சிவன், கடவுள் என்பதெல்லாம் இந்து மதத்தின் நம்பிக்கை. ஆனால், மானுடவியல் வரலாற்றின்படி, நான் உணர்ந்துகொண்ட விஷயம் ஒன்று உண்டு. எவன் ஒருவன் காட்டு மாட்டை வசக்கி, தன் வசப்படுத்தி, ஏரில் பூட்டி அதில் சவாரி செய்தானோ அவன்தான் சிவபெருமான் என்று மனித இனம், நம் தமிழ் இனம் பெயர் சூட்டியது. மாட்டை வசக்கி ஏரியில் பூட்டுவது தவறு என்றால் எந்த விதியின் கீழ் சிவபெருமானை கைது செய்வீர்கள். அது முடியாது. ஜல்லிக்கட்டில் மாடுகளால் மனிதன் காயம்படுகிறான். ஆனால், மனிதர்களால் மாடுகள் காயம் படுவதில்லை.

    ஜல்லிக்கட்டால் மாடு காயமுறுகிறது என்று சொல்கிறார்கள். அப்படியில்லை, நாங்கள் மாட்டை காயப்படுத்துவதில்லை. ஜல்லிக்கட்டு காளைகளுக்குத்தான் எங்கள் வீட்டில் முதல் மரியாதை. உழவன் பட்டினி கிடப்பான், ஜல்லிக்கட்டு மாட்டை பட்டினி போடமாட்டான். உழைக்கும் பெண் இழைத்திருப்பாள், பருத்தி விதையை மாட்டுக்கு போடாமல் தூங்கமாட்டாள். தங்களைவிட தங்கள் மாடு ஆரோக்கியமாக, வலிமையுடையதாக, பெருமையுடயதாக திகழவேண்டும் என்று ஜல்லிக்கட்டை வளர்க்கிறவன் நினைக்கிறான். இல்லையென்றால், கேரளாவுக்கு அடிமாடுகளுக்கு செல்வதுபோல் இந்த ஜல்லிக்கட்டு காளைகளும் செல்லவேண்டிய அபாயம் உருவாகும்.

    இந்த விளையாட்டில் மாடுகளால் மனிதன் சாகிறான் என்று கூறினால், அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், ஆள் சாகாத விளையாட்டு ஒன்று இங்கு இருக்கிறதா என்று சொல்லுங்கள். விபத்து இல்லாத வாழ்வு உண்டா மாடு பிடித்து பிழைத்தவனும் உண்டு, கல் தடுக்கி கீழே விழுந்து செத்தவனும் உண்டு.

    சமீபத்தில் குத்துச்சண்டை பயிற்சி பெற்ற மாணவி திடீர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டாள். அப்படியிருக்கையில், உலக குத்துச் சண்டைப் போட்டியை நிறுத்திவிடலாமா? கிரிக்கெட் பந்து பட்டு வீழ்ந்தவர் இல்லையா? நீச்சல் போட்டியில் செத்தவர் இல்லையா? அப்படிப்பட்ட போட்டிகளை நிறுத்திவிடலாமா? என்று வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Vairamuthu Speaks about Jallikattu in SanthanaDevan Movie Launch.Santhana Devan would be a period film about Tamil culture, with several scenes featuring jallikattu written in the script.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X