» 

வேலூர் மாவட்டம் - விமர்சனம்

Posted by:

பொதுவாக சென்னை அல்லது தென் மாவட்டங்களை மையப்படுத்திதான் திரைப்படங்கள் வருகின்றன. தமிழ் சினிமா கண்டுகொள்ளாத வேலூர் மாவட்டத்தை மையப்படுத்தி ஒரு படம் வருவது அநேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும். அதுவும் போலீஸ் கதை.

ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் நந்தாவுக்கு, ஐபிஎஸ்தான் வாய்க்கிறது. இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ஏற்றுக் கொண்டு வேலூர் மாவட்ட ஏஎஸ்பியாக பணியில் சேர்கிறார்.

வழக்கம்போல, ஏஎஸ்பி நந்தாவின் நேர்மைக்கும் உள்ளூர் அரசியல் பின்புலத்தோடு வளைய வரும் தாதா அழகம்பெருமாளுக்கும் மோதல். அவரைக் கைது பண்ண இவர் திட்டமிட, இவரை காலி பண்ண அவர் திட்டமிட... இந்த போலீஸ் - திருடன் கண்ணாமூச்சில் போலீஸ் உயர் அதிகாரிகளும் தாதா பக்கமே நிற்கிறார்கள். வெறுத்துப் போய் வேலையை ராஜினாமா செய்கிறார்.

ராஜினாமா செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தாதா கும்பல் அவரை அடித்து குற்றுயிராய் விட்டுவிட்டுப் போக, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்புகிறார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்காத போலீஸ் தலைமையகம், அவரை மீண்டும் வேலூரில் பணியாற்றவும் அனைத்து உதவிகளைச் செய்யவும் உறுதியளிக்கிறது. மீண்டும் புத்துணர்ச்சியோடு பணியில் சேரும் நந்தா, தான் நினைத்ததைச் சாதித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

ஏற்கெனவே நமக்குப் பரிச்சயமான அதே போலீஸ் கதைதான் என்றாலும், கதை நிகழுமிடம் புதிது என்பதால், பார்க்க ப்ரெஷ்ஷாகத்தான் இருக்கிறது!

தனி ஹீரோவாக, தன் திறமையை முழுமையாகக் கிடைத்த வாய்ப்பை நந்தா நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். தன்னை நேர்மையாக செயல்படவிடாமல் சக அதிகாரிகளே தடுக்கும்போதும், அரசியல் தாதா விபச்சாரியுடன் உல்லாசம் இருக்க, அவருக்கு காவலுக்கு நிற்க நேர்ந்த அவமானத்தையும் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்துக்குப் பிறகாவது இந்த நல்ல நடிகரை பயன்படுத்துங்கப்பா!

பூர்ணாவுக்கு பெரிதாக வேலை ஒன்றுமில்லை. கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டுகிறார், களைத்துப் போய்!

மெயின் வில்லனாக வரும் அழகம் பெருமாள் அசல் அரசியல் தாதாவை கண்முன் நிறுத்துகிறார். வேலூர் மாவட்டத்தில் உண்மையிலேயே இவரைப் போல பலரைப் பார்த்த நினைவு!

அமைச்சராக வருபவர் ஒரிஜினல் அரசியல்வாதி ஒருவரை நினைவுபடுத்துகிறார். நல்ல தேர்வு.

டிரைவராக வரும் சந்தானத்துக்கு சில சீரியஸ் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இதுபோக தனக்கு கொடுத்த நகைச்சுவை வாய்ப்பில் கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டவும் அவர் தவறவில்லை.

சுந்தர் சி பாபுவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்க முடிகிறது. பின்னணி இசை பரவாயில்லை. கோட்டை, மார்க்கெட், குவாரி என வேலூரை முழுமையாக சுற்றிக் காட்டியிருக்கிறது வெற்றியின் கேமரா. போலீஸ் கதைக்கான வேகத்தை சரியாக மெயின்டெய்ன் பண்ணுகிறது சுரேஷின் எடிட்டிங்.

ஒரு போலீஸ் கதைக்கே உரிய வழக்கமான விஷயங்கள்தான் என்றாலும் ஆர்என்ஆர் மனோகரின் விறுவிறுப்பான இயக்கம் படத்தை பார்க்க வைக்கிறது!

Read more about: review, nandha, poorna, வேலூர் மாவட்டம், vellore maavattam, விமர்சனம், நந்தா, பூர்ணா
English summary
Vellore Maavattam is the new movie based on a police story. Filmed in and around locations of Vellore, the director maintains the fast phase throughout the movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos