twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனேகன் விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.5/5
    எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: தனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி

    ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்

    இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

    தயாரிப்பு: ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்

    இயக்கம்: கேவி ஆனந்த்

    பேய்க் கதை அல்லது முன்ஜென்மக் கதைகள்தான் இன்றைய கோலிவுட் - டோலிவுட் ஃபேவர் என்பதால், அப்படி ஒரு கதையோடு களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கேவி ஆனந்த்.

    Anegan Review

    1962-ம் ஆண்டு... பர்மாவில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்திய காலம். அங்கே அதிகாரத்திலிருக்கும் ஒரு தமிழனின் பெண்ணை காதலிக்கிறான் கூலித் தொழிலாளி. ஆனால் இந்தக் காதலைப் பிரிக்கப் பார்க்கிறார் பெண்ணின் தந்தை. அந்த நேரத்தில்தான் பர்மாவில் உள்நாட்டுக் கலவரம். தமிழர்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு விரட்டப்படுகிறார்கள். அந்த கலவரத்தில் காதல் நிறைவேறாமல் உயிர் துறக்கிறார்கள் காதலர்கள்... கட்... இது நாயகியின் கனவில் வரும் கதை. ஆனால் இந்த கதையின் மாந்தர்கள் அத்தனை பேரையும் நிஜத்திலும் சந்திக்கிறாள் நாயகி, காதலனைத் தவிர, கடைசியில் அவனையும் சந்தித்து காதல் கொள்கிறாள். இந்தக் காதலுக்கும் எதிர்ப்பு.

    உண்மையில் இதுபோல வேறு இரு கனவுகளும் அவளுக்கு வருகின்றன. ஒன்றில் அவள் இளவரசி. காதலன் இளவரசன். அவர்களையும் பிரிக்கிறார்கள்.

    அடுத்தது மட்டும், கனவென்று சொல்ல முடியாது. 1987-ல் நடந்த இரு காதலர்களின் நிஜ கொலைகளின் பின்னணியைச் சொல்லும் கதை. இந்தக் கதைதான் படத்தின் ஜீவன் என்பதால், அதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

    Anegan Review

    இப்படி நான்கு வெவ்வேறு கதைகளை சரியான புள்ளியில் இணைக்க முயன்று, ஓரளவு வெற்றியும் பெறுகிறார் இயக்குநர் கேவி ஆனந்த்.

    தனுஷ்.. வெளுத்துக் கட்டியிருக்கிறார் நான்கு வெவ்வேறு பாத்திரங்களிலும். குறிப்பாக காளியாக வரும் காட்சிகளில் பக்கா வியாசர்பாடி பையனாக மனதில் ஓட்டிக் கொள்கிறார். அந்த ஐடி பையன் பாத்திரமும் ஓகேதான். பர்மா எபிசோடில் மட்டும் அவர் தலைமுடி மாதிரியே கொஞ்சம் ஒட்டாமல் நிற்கிறார். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்.. 'ஆப்போனன்டே இல்லாம சோலோவாகிட்டேன்' என அவரே ஒரு பாட்டில் சொல்வதுதான் அவரது இன்றைய நிலை. தனுஷுக்கு நிகர் அவர்தான், இன்றைய தேதிக்கு.

    நாயகியாக வரும் அம்ரியாவுக்கு நடிப்பு நன்றாக வருகிறது. ஆனால் ஆள்தான் பார்க்க ரொம்ப அந்நியமாகத் தெரிகிறார், அந்த வியாசர்பாடி 'அய்யராத்து பெண்' வேடம் தவிர்த்து!

    Anegan Review

    கார்த்திக்... ஹஹா... அட்டகாசமான அடுத்த இன்னிங்ஸ் இந்தப் படத்திலிருந்து ஆரம்பம் எனலாம். மனிதர் பின்னியெடுக்கிறார். அவரது வசன உச்சரிப்பு, குறிப்பாக ஐடி நிறுவன முதலாளியாக அவரது உடல் மொழி, வெறித்தனமாக வில்லத்தனம் காட்டும் அந்த க்ளைமாக்ஸ்... அத்தனை காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

    படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான இன்னொரு பாத்திரம் ஆசிஷ் வித்யார்த்தியும், மீராவாக வரும் ஐஸ்வர்யா தேவனும். சில காட்சிகளில் ஹீரோயினை விட ஐஸ்வர்யா தேவன் பிரமாதமாகத் தோன்றுகிறார்.

    தலைவாசல் விஜய்யிடம் போய் தனுஷ் பெண் கேட்கும் காட்சி தளபதியை நினைவூட்டுகிறது.

    ஜெகன், முகேஷ் திவாரி, கிரண், லெனா என அத்தனை பேரும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

    Anegan Review

    பர்மா காட்சிகளில், ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். அன்றைய நாட்களின் பத்திரிகை அட்டைகள், நாளிதழ்களின் முகப்புப் பக்கங்களைக் கூட பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார். பர்மா தமிழன், சுதேசமித்திரன் நாளிதழ்களின் முகப்பு பக்கங்களைத் தேடிப் பிடித்து வடிவமைத்த நுணுக்கம் பாராட்டுக்குரியது.

    அதேபோல 1987 காட்சிகளின் பின்னணியை உருவாக்கிய விதம் பிரமாதம். டங்காமாரி ஊதாரி.. அப்படியே வட சென்னைப் பகுதியில் பிரபலமான 'வா முனிமா..'வை நினைவூட்டியது.

    திரைக்கதையில் ஒரு நெருடல்... பர்மா பகுதி மற்றும் இளவரசன் - இளவரசி காட்சிகளை முன்ஜென்ம தொடர்ச்சியாக காட்டியவர், அந்த காளி, அவன் காதலி காட்சிகளை மட்டும் நிகழ்காலத்தின் துப்பறியும் எபிசோடாக மாற்றியது ஒட்டாமல் நிற்கிறது. ஆனால் காட்சிகளின் உருவாக்கம் மற்றும் அந்த டங்கமாரி ஊதாரி.. பாடல் அந்த பகுதியை சுவாரஸ்யமாக்கிவிடுகிறது.

    படத்தில் கேவி ஆனந்துக்கு இடது வலது கரங்களாக ஹாரிஸ் ஜெயராஜும், எழுத்தாளர்கள் சுபாவும். கேவி ஆனந்தும் அவர்களுடன் இணைந்து திரைக்கதை வசனத்தை உருவாக்கியிருக்கிறார். காட்சிகளுக்கு உயிர்ப்பும் விறுவிறுப்பும் தரும் பின்னணி இசைக்கும் பாராட்டுக்கள். கூடவே ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு. கேவி ஆனந்த் எத்தனை பெரிய ரசனைக்காரர் என்று காட்டுகின்றன பாடல் காட்சிகள். குறிப்பாக அந்த இளவரசன் - இளவரசி காதல் பாட்டு.

    லாஜிக் என்று பார்க்கக் கிளம்பினால் படம் அம்பேல். ஆனால் கனவு, கற்பனை, முன்ஜென்மம் இதற்கெல்லாம்தான் லாஜிக்கே இல்லையே!

    இரண்டே முக்கால் மணி நேரத்தை சுவாரஸ்யமாகக் கழிக்க அனேகன் உத்தரவாதம் தருகிறான்... இன்றைய சூழலில் வேறென்ன வேண்டும்!

    English summary
    KV Anand's Dhanush starrer Anegan is an interesting fair with a good script and making.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X