twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலி... மாற்று சினிமாவின் குரல்!

    By Shankar
    |

    கபாலி தமிழ்ப் படம்தான் என்றாலும் கதையின் களம் வேறு நிலம். முழுமையாய் கபாலியை ரசிக்க கொஞ்சமல்ல நிறையவே மலேசிய தமிழர்களின் பேச்சு வழக்கு, மலேசியாவின் வரலாறு, நிலத் துண்டாடல், தோட்டத் தொழிலார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, போராட்டங்கள், வர்க்கப் பிரிவுகள் என்று தொடங்கி இன்று வரை அந்த மண்ணில் நடக்கும் எல்லாவிதமான சமூகக் குற்றங்கள் வரை தெரிந்திருப்பதோடு ஓரளவிற்கு அவர்கள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களையும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.

    இதுவெல்லாம் அதிகம் புரியாத வேறு நிலம் சார்ந்த தமிழர்களுக்கு கொஞ்சம் இந்தப் படத்தோடு ஒட்டிக் கொள்ள கால அவகாசம் தேவைப்படத்தான் செய்கிறது.

    Kabalai.. A voice for parallel cinema

    படத்தோடு ஒன்ற நம்மிடம் இருப்பது ரஜினி என்னும் மந்திரம் மட்டுமே, அந்த மந்திரமும் அந்த வேலையை பொறுமையாய் திரையில் செய்து விடுகிறது.

    ரஜினியின் மாஸ் ஸ்டைலைத் தொட்டுக் கொண்டு ஒரு கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான காமம் கடந்த ஒரு 50+ காதலை வைத்து நெய்து, மனித ஏற்றத் தாழ்வுகள் பற்றிப் பேச நினைத்த தன்னுடைய வேட்கைக்கு ஒரு களமாய் ஒட்டு மொத்த திரையையும் பயன்படுத்தி கொண்ட இயக்குநர் ப. ரஞ்சித் வெகு நிச்சயமாய் பாராட்டுக்குரியவர்.

    கபாலி படம் வெளியாவதற்கு கொஞ்ச நாள் முன்புதான் நான் இயக்குநர் ரஞ்சித்தின் பேட்டிகளைப் பார்த்தேன். வெகு நேர்த்தியான புரிதலும், மிகவும் விசாலமான பார்வையும் கொண்டதாக அவை இருந்தன. அடிப்படையில் அவருக்குள் இருந்த அந்த சமூக ஏற்றத் தாழ்வுகளின் மீதிருந்த கோபம் அவரை நிறைய புத்தகங்களை வாசிக்க வைத்திருக்கிறது.

    அழுத்தி வைக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து மேலெழும்பி அதற்கு முன்பு வலுவான பொருளாதார மற்றும் மனோபலத்துடன் இருக்கும் ஒரு சமூகத்துடன் மோத எவ்வளவு வலு வேண்டும் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்கவே முடியவில்லை.

    Kabalai.. A voice for parallel cinema

    பொருளாதார பலத்தை அரசின் திட்டங்களும் அதனால் கிடைக்கும் சூழல்களும் மாற்றினாலும் காலங்கள் கடந்து அவர்களுக்குள் அடங்கிக் கிடக்கும் அடக்கப்பட்ட உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் அகல வேண்டுமெனில் நிறைய சவாலான சூழல்களை அவர்கள் எதிர்கொள்ளவும் வேண்டும். இப்படியான ஒரு சமூகச் சூழலில் திரைத்துறையில் மேலெழும்பி வந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இன்னும் வலுவாய் கால் பதிக்க காத்திருக்கும் கனவுகள் நிறம்பிய ஒரு இளைஞர்தான் இயக்குநர் ப. ரஞ்சித்.

    ஒடுக்கப்பட்ட சமூகம் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள எப்போதும் கலைகளைத்தான் முதல் ஆயுதமாக பாவிக்கும். கலைகளினால் ஏற்படும் மீட்சி சமூகத்தில் பெருந் தாக்கங்களை உருவாக்கி புரட்சியை ஏற்படுத்துகிறது. புரட்சி சமூகத்தை மெல்ல மெல்ல மாற்றுகிறது. தெருவில் இறங்கிப் போராடுவது ஒரு வழிமுறை என்றால் திரையில் இறங்கிப் போராடுவது வேறுவகை போரட்ட வழிமுறை என்பதனை அறிக; ப. ரஞ்சித் என்னும் கலைஞன் சூப்பர் ஸ்டார் ரஜினி என்னும் பிரம்மாண்ட கலைஞனிடம் கபாலியின் கதையினைக் கூறிய பின்பு அதை ரஜினி கேட்டு கொஞ்ச நஞ்சமல்ல முழுக்க முழுக்க தன்னை தன் மிகப்பெரிய சூப்பர் மாஸ் ஹீரோ இமேஜை தியாகம் செய்து விட்டு இது போன்ற படங்களில் நடிக்க காரணம்....

    Kabalai.. A voice for parallel cinema

    ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்தில் மாற்றம் வந்து விடாதா என்று எண்ணிய ஒரு இளைஞனின் புரட்சி எண்ணம் வீழ்ந்து விடக்கூடாது என்பதுதான். திரைப்படம் பிற்பாடு வணிக நோக்கத்தோடு அதிகமாய் விளம்பரபடுத்தப்பட்டது என்றாலும், இதில் அதிக வருமானம் பார்க்க எல்லா யுத்திகளையும் அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு செய்தார் என்ற போதிலும்....

    பலநேரங்களில் தவறான தயாரிப்புகள் விளம்பரங்களால் முக்கியத்துவம் பெற்று சீரழிந்து போவது போல கபாலியால் ஒரு அபத்தம் நிகழாது என்ற விசயம் நமக்கெல்லாம் ஆறுதல்தான். ஏனென்றால் இங்கே விதைக்கப்பட்டிருப்பது நல்வித்து. ரஜினி அறிமுகமாகும் ஆரம்ப காட்சியிலிருந்தே எந்த ஒரு மிகைப்படுத்துதலும் இல்லாமல் மிக மெதுவாகவே ஆனால் கூர்மையாகவே கதை நகர்கிறது. ரஜினியை முழுதாய் அபகரித்துக் கொள்ளாமல் அவர்களது ரசிகர்களுக்கும் தீனி போடவேண்டும் என்பதற்காக அட்டகாசமான காட்சிகள் இந்தப் படத்தில் நிறையவே உண்டு என்றாலும் இது பாட்சா போன்று ஹீரோயிசத்துக்கான படமல்ல. இது ஹீரோவை மையமாய் வைத்து சொல்லும் கருத்தை ஹீரோயிசமாய் கொண்ட கதைக் களம்.

    64 வயதில் என்ன ஒரு பாடி லாங்வேஜ், என்ன ஒரு சுறுசுறுப்பு எல்லாவற்றுக்கும் மேலாய் என்ன ஒரு ஸ்டைல்? நீலாம்பரியின் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது ஆமாம் வயதானாலும் அவரது கம்பீரமும், ஸ்டைலும்.....ஹும்கூம்....கொஞ்சம் கூட குறையவே இல்லை அவரிடம். மிகக் கவனமாய் எந்த ஒரு மிகைப்படுத்துதலும் சூப்பர் மேஜிக்கும் இல்லாமல் இயல்பாய் ரஜினி தனது பாத்திரத்தை கையாண்டிருக்கும் விதமும் அவரது நடிப்பும் சூப்பர் ஸ்டார் என்றால் என்ன? யார் என்ற கேள்விக்கு தெளிவாய் விடை சொல்லி இருக்கின்றன. மனைவியைப் பிரிந்த சோகத்தையும் மீண்டும் வெகு நாள் கழித்து தன் மனைவியை பார்க்கும் போது ஏற்படும் உணர்வையும் வெகு இயல்பாய் வெளிப்படுத்தி பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் மனிதர்.

    Kabalai.. A voice for parallel cinema

    'நான் மேல வருவேண்டா, முன்னேறுவேண்டா, கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவேண்டா.....பிடிக்கலேன்னா சாவுங்கடா...'

    'நீ ஆண்ட பரம்பரை டா.........நான் ஆளப்பொறந்த பரம்பரைடா...'

    என்று உணர்ச்சி பீறிட சூப்பர் ஸ்டார் பேசும் டயலாக்தானே ரஞ்சித் பரம்பரை பரம்பரையாய் அடிமைப்பட்டுக் கிடக்கும் இனத்தின் ஆதாரக் குரல், இதை திரையில் நிகழ்த்திக் காட்டுவதுதானே அதுவும் ஒரு உச்ச நட்சத்திரத்தைப் பேச வைப்பதுதானே உனது கனவு.....? என்று கேட்டு ரஞ்சித்தை பாரட்டத்தான் தோன்றுகிறது நமக்கு.

    கபாலியில் நடித்ததோடு சூப்பர் ஸ்டார் நின்று விடக்கூடாது. இதே போன்று ரஜினி என்றால் யார்? அவரது நடிப்பின் முழுப் பரிமாணம் என்ன என்று எடுத்து சொல்லும் நிறைய கதாபாத்திரங்களை அவர் செய்ய வேண்டும். எங்கேயோ கேட்டகுரல், புவனா ஒரு கேள்விக் குறி, முள்ளும் மலரும்.....என்று பார்த்த ஒரு ரஜினியை ஒரு ரசிகனாய் வெகு காலம் கழித்து திரையில் ரசித்த திருப்தியை எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை.

    வெறுமனே எதையோ எதிர்ப்பார்த்து அது இல்லை என்று இந்த அவசர கதியில் ஏதோ ஒரு கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நகைச்சுவையாய் இணையத்தில் கருத்து தெரிவிக்கும் அத்தனை பேரும் கபாலி சொல்லவரும் அரசியல் என்ன? சூப்பர் ஸ்டார் என்னும் சிங்கம் தன் பிடரி சிலிர்த்து நடித்து கர்ஜித்திருக்கும் அந்த நடிப்பின் சுவை என்ன என்பதை நிதானமாய் பார்த்தால் எல்லோருடைய ஆழ்மனதிலிருந்தும் வெளிபடும் உண்மை கபாலி போன்ற படங்களை நாம் வரவேற்றுத்தான் ஆகவேண்டும் என்று சொல்லும்.

    மேலிருந்து கீழ் பார்த்து தமிழ்த்திரைப்படங்கள் பேசிய வர்க்க அரசியலை நாம் உண்மையென்று நம்பிக் கொண்டிருந்தோம். கீழை மேலாய் மாற்றி மேலை கீழாய் ஆக்காமல் சரி சமமாய் வைத்துக் கூட பார்க்க திரணியற்ற தொடர் தமிழ் சினிமா மரபில் வரவேற்கத்தகுந்த புரட்சிகரமான தனது கருத்துக்களை மிக தைரியமாய் முன்னெடுத்த இயக்குநர் ப. ரஞ்சித் பாரட்டுக்குரியவர், இந்தக் கதைக் கருவில் தனது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் முழுமையாய் தன்னை ஒப்புக் கொடுத்து நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் போற்றுதற்குரியவர்.

    இது போக படத்தின் இசை, ஒளிப்பதிவு, பாடல்கள் மற்றும் திரைப்படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுமே பாரட்டுதற்குரியவர்கள்தாம்.

    கபாலியின் தீம் நெருப்பு... அந்த நெருப்பு கனலாய் படம் முழுதும் பரவி இருக்கிறது. அதை உணர்வாய் பற்ற வைத்துக் கொண்டு சமூக மாற்றத்துக்கான வித்தாய் பார்ப்பதும் அல்லது வெறும் சிகரெட்டுக்கான நெருப்பாய் பார்ப்பதும்... பார்ப்பவர்களின் மனோநிலையைப் பொறுத்த விசயம்!

    -தேவா சுப்பையா

    English summary
    Kabali is the voice from Superstar for parallel cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X