கிடா பூசாரி மகுடி விமர்சனம்
-எஸ் ஷங்கர்
நடிகர்கள்: தமிழ், நட்சத்திரா, ராம் தேவ், சிங்கம்புலி
ஒளிப்பதிவு: ரவி சீனிவாஸ்
தயாரிப்பு: த தமிழ்மணி
இசை: இளையராஜா
இயக்கம்: ஜெயக்குமார் ஜெ
'ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல கிராமத்துப் படம் பார்த்த உணர்வு' என்று சினிமா விமர்சனங்களில் அடிக்கடி குறிப்பிடப்படுவதைக் கடந்து வந்திருப்பீர்கள். உண்மையிலேயே அப்படிச் சொல்லக்கூடிய ஒரு படம்தான் கிடா பூசாரி மகுடி.
90களில் பார்த்த ராஜ்கிரண் படங்களை நினைவூட்டும் கதையமைப்பு, படத்தின் உணர்வுகளை, பாத்திரங்களின் தன்மைகளை உள்ளத்துக்குள் கடத்தும் இசை, புதுமுகங்களாக இருந்தாலும் தேர்ந்த நடிப்பு... என குறிப்பிடத்தக்க படமாக வந்திருக்கிறது இந்த மகுடி.

மிக எளிய கிராமத்துப் பின்னணி. சிக்கலில்லாத இயல்பான கதை.
அய்யனாருக்கு 'கிடா வெட்டும் பூசாரி' மகுடிக்கு அக்கா மகள் நட்சத்திரா மீது கொள்ளைப் பிரியம். அவளையே திருமணம் செய்து கொள்ள ஆசை. ஆனால் ஆடுகளை நேசித்து வளர்க்கும் அவளுக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை. அவள் சென்னையிலிருந்து அந்த ஊருக்கு வரும் ராம்தேவை விரும்புகிறாள். இந்த விவரம் மகுடியின் காதில் விழ, அருவாளோடு அக்கா வீட்டுக்குப் போய், பெண்ணை இழுத்து வந்து அய்யனார் சிலை முன்பாக பலவந்தமாக தாலி கட்டுகிறான்.
இந்த கட்டாயத் திருமணத்தால் ஆரம்பத்தில் மகுடியை வெறுக்கும் நட்சத்திரா, போகப் போக அவன் அன்பைப் புரிந்து ஏற்றுக் கொள்கிறாள்.

இந்த சூழலில்தான் மீண்டும் ராம்தேவ் ஊருக்கு வருகிறான். அவன் வந்த பிறகு மகுடி - நட்சத்திரா வாழ்க்கையில் பெரும் புயல். அந்தப் புயல் ஓய்ந்ததா, அவர்களைச் சாய்த்ததா என்பது மீதி.
தமிழ் மணி என்கிற மகுடிதான் இந்தப் படத்தின் ஹீரோ - தயாரிப்பாளர். அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். அக்கா மகள் மீது அவர் காட்டும் அன்பும், அதே அக்கா மகள் சந்தேகம் வந்ததுமே படு முரட்டுத்தனம் காட்டுவதுமாக, முதல் படத்திலேயே டிஸ்டிங்ஷன் வாங்குகிறார்!
கிராமத்துப் பெண்ணான மலர் பாத்திரத்துக்கு பக்காவான தேர்வு நட்சத்திரா. மிக இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார். இந்தப் படத்துக்காக நிஜமாகவே தன் முடியைத் தியாகம் செய்து மொட்டையும் போட்டிருக்கிறார், படத்தில்தான்!
நட்சத்திராவின் காதலனாக வரும் ராம்தேவ், சிங்கம்புலி, கம்பம் மீனா போன்றவர்கள் அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறி நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

உணர்வுப் பூர்வமான கிராமத்துக் கதை, தேர்ந்த நடிப்பு... அப்புறமென்ன இசை ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் இசைஞானி. பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே பிரமாதம்.
ரவி சீனிவாஸின் ஒளிப்பதிவில் கதையை மீறாத யதார்த்தம்.
தியேட்டருக்குள் நுழைந்த சில நிமிடங்களில் பார்வையாளர்களை கதைக்குள் இழுக்கும் வித்தை முதல் படத்திலேயே கைவந்திருக்கிறது புது இயக்குநர் ஜெயக்குமாருக்கு. ஒரு முழுமையான படம் தந்த காரணத்துக்காகவே சின்னச் சின்ன குறைகளை பெரிதுபடுத்தாமல் பார்த்து ஆதரிக்கலாம்!
மகுடி - இனிமை!


Click it and Unblock the Notifications