twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனிதன் விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5
    Star Cast: உதயநிதி, ஹன்சிகா, ராதாரவி
    Director: ஐ அகமது
    -எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: உதயநிதி, ஹன்சிகா, ராதாரவி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா

    ஒளிப்பதிவு: ஆர் மதி

    இசை : சந்தோஷ் நாராயணன்

    தயாரிப்பு: ரெட்ஜெயன்ட்

    இயக்கம்: ஐ அகமது

    ஜாலி எல்எல்பி என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இந்த மனிதன். முகவரியற்ற நடைபாதைவாசிகளுக்கான சமர்ப்பணம் என்று முடியும் இந்தப் படம் உண்மையாகவே அப்படி ஒரு உணர்வைத் தருகிறதா...

    பார்க்கலாம்.

    பொள்ளாச்சியில் உதவாக்கரை வக்கீல் என்று பெயரெடுத்த உதயநிதிக்கு மாமாவின் அழகான பெண் ஹன்சிகா மீது காதல். எப்படியாவது அவரை திருமணம் செய்ய நினைக்கும் அவருக்கு, பெண் கொடுக்க மறுக்கிறார் மாமா. காரணம் எந்த வழக்கிலும் வெற்றி பெற முடியாத உப்புமா வக்கீல் என்று இவருக்கு இருக்கும் பெயர்!

    ஒரு நாள் ஹன்சிகா மற்றும் அவரது அப்பாவின் முன்பாகே நண்பர்களின் கேலி கிண்டல் எல்லை மீறிப் போக, உதயநிதியை கண்டபடி திட்டிவிடுகிறார் ஹன்சிகா.

    Manithan Review

    மனசு நொந்துபோய் சென்னைக்கு வந்து அங்கு வக்கீலாக உள்ள உறவினர் விவேக்குடன் சேர்ந்து வழக்குக்காக அலைகிறார். ஒரு வழக்கும் கிடைக்காமல் விரக்தியடைந்த நிலையில், அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

    நள்ளிரவில் குடிபோதையில் சொகுசு கார் ஒன்றை ஓட்டி வரும் பெரிய கோடீஸ்வரனின் வாரிசு, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி 6 பேரைக் கொல்கிறார். ஆனால் வக்கீல் பிரகாஷ்ராஜ் அந்த வாரிசுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து விடுகிறார்.

    இந்த விவகாரத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தால், நாமும் பிரபலமாகலாம், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏதாவது நல்லது நடக்கும் என்று திட்டமிட்டு பொது நல வழக்குத் தொடர்கிறார் உதயநிதி.

    அதன் பிறகுதான் அவருக்கு பல பிரச்சினைகள். இவற்றை எப்படிச் சமாளிக்கிறார்? ஹன்சிகாவைக் கைப்பிடிக்கிறாரா? பொது நல வழக்கில் வென்றாரா? என்பது சுவாரஸ்யமான பிற்பகுதி.

    Manithan Review

    வாழ்த்துகள் உதயநிதி. முதல் முறையாக மிகவும் சின்சியரான ஒரு கேரக்டரில் இயல்பாக நடித்ததற்காக!

    ஒருபக்கம் ஜாம்பவான் ராதாரவி, மறுபக்கம் அட்டாக் ஆதிசேஷனாக நிற்கும் பிரகாஷ்ராஜ்.. இருவருக்கும் இடையில் நின்று தன்னாலும் கச்சிதமான நடிப்பைத் தர முடியும் என்று காட்டியிருக்கிறார்.

    ஒரு காட்சி... நடைபாதையோரம் சிறு நீர் கழிக்கப் போவார் உதயநிதி. அப்போது ஒரு கூட்டம் வரும்... 'அய்யா கொஞ்சம் தள்ளிப் போங்க.. நாங்க படுக்கிற இடம் இது' என்று அவர்கள் இரந்து நிற்கும்போது மனசு கரைந்துபோகிறது. அதை உதயநிதி மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

    பார்ப்பவர் மனசுக்கு ரொம்ப நெருக்கமான காதல் காட்சிகள். நீதி மன்றக் காட்சிகளில் ராதாரவி, பிரகாஷ்ராஜுக்கு இணையாக ஸ்கோர் செய்கிறார் உதயநிதி.

    ஹன்சிகாவுக்கு டீச்சர் வேடம். வெறும் அழகுப் பொம்மையாக வந்து போகாமல் காதலனுக்கு பொறுப்பையும் சொல்லிக் கொடுக்கும் பாத்திரம். இந்த மாதிரி வேடத்தில் அவரைப் பார்ப்பது நிஜமாகவே ஒரு மாறுதல்தான்.

    Manithan Review

    படத்தில் கட்டாயம் சொல்லியே தீர வேண்டிய பாத்திரம் ராதா ரவி. மனசில் ஆழப் பதிந்துவிட்டார், தனபால் என்ற நீதிபதி வேடத்தில். காது கிழிய பிரகாஷ்ராஜ் கத்தினாலும், 'உட்காருங்க ஆதிசேஷன்' மிக மென்மையாய் அவரைக் காலி பண்ணும் இடம் செம. நீதிபதியான தன் உத்தரவை மதிக்காமல் பிரகாஷ்ராஜ் திரும்பத் திரும்ப கத்திக் கொண்டிருக்க, அப்போது எடுக்கிறாரே ஒரு விஸ்வரூம்... 'இதான்யா ராதாரவி.. இதான்டா அனுபவம் என்பது... இதுக்குப் பேர்தான் உடல்மொழி..' என்றெல்லாம் சொல்ல வைத்துவிட்டார்.

    ராதாரவி சார்... நடிகர் சங்கம் கிடக்கட்டும்.. நீங்கள் இதுபோல மாறுபட்ட வேடங்களில் வந்து எங்களோடு இருங்கள்!

    பிரகாஷ் ராஜ் சத்தம் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் ஷார்ப்பான ப்ளேடு மாதிரி கச்சிதமான பர்ஃபார்மென்ஸ்!

    க்ளைமாக்ஸில் சாட்சியாய் வந்து நம்மை கலங்க வைக்கும் அந்த வந்தவாசி நபரின் நடிப்பு, போலீசின் கவனத்தை மாற்றும் டீக்கடைக்காரர், உதயநிதிக்கு நோஞ்சான் பாதுகாவலராக வந்து, சட்டென்று ஒரு திருப்பம் தரும் அந்த காவலர்... அருமை!

    உண்மையில் நடந்தது என்னவென்று அந்த ஏழை விவரித்து முடித்த பிறகு, நீதிபதி ராதாரவி, சோம்பல் முறித்து இன்னிக்கு கேஸ் சுவாரஸ்யமா போச்சில்ல... என்று கேட்டிருக்க வேண்டாமே.. கேட்கும்போதே கண்ணீரை வழிய வைக்கும் ஒரு காட்சிக்குப் பிறகு இது தேவையில்லையே!

    அதேபோல அந்த முதல் பகுதியின் ஆமை வேகம்.

    வசனங்கள் இன்னும் கூர்மையாக இருந்திருக்க வேண்டும், க்ளைமாக்ஸ் வாதங்களில். இந்த நடைபாதைவாசிகள் யாருங்க? என்று நீதிபதி, எதிர்தரப்பு வக்கீல் மற்றும் பார்வையாளர்களை நோக்கி உதயநிதி கேட்டு முடித்ததும், ஏதோ பெரிய திருப்பு முனை வசனம் இருக்கப் போகிறது என்று பார்த்தால் சப்பென்ற விடை தருகிறார். அதைவிட அழுத்தமான விளக்கமும் இருக்கிறதே..!

    கச்சிதமாக இந்தத் திரைக்கதைக்கு எந்த வகையிலும் உதவவில்லை சந்தோஷ் நாராயணனின் இசையும் பாடல்களும். ஆனால் மதியின் ஒளிப்பதிவு காட்சிகளை மனசுக்கு நெருக்கமாக்கிவிடுகிறது.

    இந்த மாதிரி ப்ளாட்பாரத்தில் படுத்திருந்த ஏழைகளை காரேற்றிக் கொன்ற கோடீஸ்வர சென்னைவாசி கதையே நிஜத்தில் இருக்கிறதே. அதைவிட்டு அகமது ஏன் பாலிவுட் ரீமேக்கை நாடினார். இந்த மனிதனை அவசியம் பாருங்கள்.

    English summary
    Udhayanidhi's Manithan is a appreciable remake of Bollywood hit Jolly LLB and the whole movie is enjoyable.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X