twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராமானுஜன் விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5

    எஸ் ஷங்கர்

    நடிப்பு: அபிநய் வட்டி, பாமா, நிழல்கள் ரவி

    இசை: ரமேஷ் விநாயகம்

    ஒளிப்பதிவு: சன்னி ஜோசப்

    தயாரிப்பு: இயக்கம்: ஞானராஜசேகரன்

    உலகுக்கு தமிழகம் தந்த மிகப்பெரிய கணித மேதை என்று சொல்லப்படும் சீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை தனக்குக் கைவந்த விதத்தில் படமாகத் தந்திருக்கிறார் ஞான ராஜசேகரன்.

    ஆனால் ஒரு முழுமையான திரைப் படம் அல்லது ஆவணப்படமாக பார்வையாளனை இந்தப் படம் திருப்திப்படுத்துகிறதா...? பார்க்கலாம்!

    குடந்தையில் ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்த ராமானுஜனுக்கு கணிதத்தின் மீது அபார ஈடுபாடு, ஞானம். ஆனால் மற்ற பாடங்களில் நாட்டமின்மையால், கல்லூரிப் படிப்பை பாதியில் தொலைக்கிறான். திருமணத்துக்குப் பிறகு சென்னைக்குப் போய் ஒரு வேலையில் சேர்கிற ராமானுஜன், தன் கணித ஆராய்ச்சியைத் தொடர்கிறான். முதலில் ராமானுஜனைக் கண்டிக்கும் உயரதிகாரி, பின்னர் அவனது கணித மேதைமையைப் புரிந்து கொண்டு உதவி செய்கிறார். அவர் உதவியுடன் தன் கணித கண்டுபிடிப்புகளை பிரிட்டனுக்கு அனுக்கிறான். அவற்றைப் பார்த்து வியக்கும் ஹார்வர்ட் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் ஹார்டி, ராமானுஜனை லண்டனுக்கு வரவழைக்கிறார்.

    ஆனால் ராமானுஜனின் உணவுப் பழக்கம், கடவுள் நம்பிக்கை, சொந்தங்கள் தரும் மன உளைச்சல் போன்றவை அவனை உற்சாகமிழக்கச் செய்து, உடலையும் பாதிக்கிறது. சரிப்படுத்த முடியாத அளவுக்கு காசநோய் தாக்கம் காரணமாக ஊருக்கு திருப்பியனுப்பப்படும் ராமானுஜன் மரணப்படுக்கையில் வீழ்கிறார். மிக இளம் வயதில் உலகை விட்டுப் பிரியும் அவரது, இறுதி நிகழ்வுக்கு சொந்த சாதிக்காரர்களே வர மறுக்க, வேற்று சாதியார் சிலர் அவரை அடக்கம் செய்கிறார்கள்.

    ஒரு மாபெரும் கணித மேதையின் வாழ்க்கை, அற்ப ஆயுளில், அதைவிட அற்பமாக வகையில் முற்றுப் பெறுகிறது.

    -இதுதான் ராமானுஜனின் கதை. ஆனால் இந்தக் கதையை, ஒரு திரைப்படத்துக்குரிய நளினத்தோடோ அல்லது ஆவணப்படத்துக்குரிய நம்பகத் தன்மையோடோ தரத் தவறியிருப்பதுதான் ஞான ராஜசேகரனின் ஆகப்பெரிய குறை!

    பாரதி, பெரியார் படங்களில் இருந்த அதே குறைபாடுதான் இந்தப் படத்திலும். ஒவ்வொரு முறையும் இந்த சாதனையாளர்களின் கதை என்ற கோடுகளை எடுத்துக் கொள்ளும் ஞான ராஜசேகரன், அவற்றை மேம்போக்காக, செவிவழிச் செய்தியாக கேட்ட விஷயங்களை வைத்து ஓவியமாக்க முனைகிறார். அதன் விளைவு, மனதில் பதியாத அரைகுறைப் படங்களாக அவை மாறிவிடுகின்றன.

    வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு மிக முக்கியமானது சரளமான திரைக்கதை, செறிவான காட்சிகள்.. மற்றும் அவற்றின் அசைக்க முடியாத நம்பகத் தன்மை. இந்த அம்சங்களை மோகமுள் தவிர, ஞான ராஜசேகரனின் வேறு எந்தப் படங்களிலும் பார்க்க முடியாது. இந்த ராமானுஜனும் அதற்கு விலக்கல்ல!

    மேலும், தமிழில் வாழ்க்கை வரலாற்றுப் படமென்றால் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது என்ற தோற்றத்தை இந்த மாதிரி படங்கள் ஏற்படுத்தியுள்ளதை, மாற்ற வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. ஞாஎன ராஜசேகரனே கூட இதற்கான முயற்சியை மேற்கொண்டால் நலம்!

    Ramanujan Review

    ராமானுஜன் மிகப் பெரிய கணித மேதை என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவரது கணித மேதைமை எப்படி நடைமுறை வாழ்க்கைக்கு உதவுகிறது என்பதை ஏடிஎம் ரகசிய குறியீட்டெண் சமாச்சாரத்தோடு நிறுத்திக் கொண்டது ஏன்? இன்னும் சில பயன்பாடுகளைக் காட்சிகளாகக் கோர்த்திருந்தால் அவரது சாதனையை வலுவாக பார்வையாளனின் மனதுக்குள் பதிந்திருக்க முடியும்!

    அதே நேரம், சனாதன கட்டுப்பாடுகள் மிக்க சமுதாயத்தில் பிறந்ததே ராமானுஜனின் வீழ்ச்சிக்குக் காரணமாகிப் போனதைக் காட்டும் காட்சிகளும், ராமானுஜனுக்கு ஆதரவாக பேராசிரியர் ஹார்டி பேசும் காட்சியும் நல்ல பதிவு.

    படம் நடக்கும் காலகட்டத்தில் சார் என்ற வார்த்தைப் பிரயோகமே தமிழகத்தில் இல்லை என்ற குறைந்தபட்ச விஷயத்தைக் கூட இயக்குநர் எப்படி கவனிக்காமல் விட்டுவிட்டார்?

    ராமானுஜனின் கண்டுபிடிப்புகள், அவை கிளப்பும் ஆச்சர்யங்களை காட்சிப்படுத்தாமல், வெறும் வசனங்களால் கடத்தப் பார்ப்பது இயக்குநரின் இயலாமை அல்லது போதிய தகவல்கள் இல்லாமை என்பதையும் கவனிக்க வேண்டும்!

    ராமானுஜனாக நடித்திருக்கும் அபினய் முடிந்த வரை அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய முயன்றிருக்கிறார். குறிப்பாக தன் இயலாமை மற்றும் உடல் வலியை அவர் பிரதிபலிக்கும் காட்சிகள்.

    அவருக்கு ஜோடியாக வரும் பாமா, அன்றைய மருமகள்களைப் பிரதிபலிக்கிறார். பிராமண குடும்ப அம்மா - மாமியார் மனநிலையை சுகாசினி மூலம் சரியாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

    நிழல்கள் ரவி, ராதாரவி, மனோபாலா, தலைவாசல் விஜய், சரத்பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், அப்பாஸ், டெல்லி கணேஷ், மோகன்ராம், டி.பி.கஜேந்திரன் என ஏகப்பட்ட பாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்துவிட்டுப் போகின்றன.

    இந்த மாதிரி வரலாற்றுப் படங்களுக்கு மிக முக்கிய தேவை, காட்சிகளுக்கு நம்பகத் தன்மையைக் கூட்டும் இசை. அது இந்தப் படத்தில் இல்லை. வாணி ஜெயராம் பாடும் அந்த நாராயணா பஜன் அருமை!

    சன்னி ஜோசப்பின் ஒளிப்பதிவு, படத்தின் கதை நிகழும் காலகட்டத்தை நம்ப வைக்கிறது.

    படத்தில் இத்தனை குறைகள் இருந்தாலும், அவற்றுக்கு பட்ஜெட் ஒரு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. குறைந்த செலவில், முடிந்தவரை சமரசமின்றி ஒரு சுத்தமான படத்தைத் தர வேண்டும் என்ற இயக்குநரின் முயற்சியை விமர்சனம் என்ற பெயரில் கொச்சைப்படுத்தவும் மனசில்லை. அந்த முயற்சிக்காகவாவது இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம்!

    English summary
    ‘Ramanujan’, is the true story of Srinivasa Ramanujan the Mathematical genius from small town Kumbakonam, Tamil Nadu attracts viewers in bits and pieces. But the effort is really appreciable.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X