twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சலீம்- விமர்சனம்

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    Rating:
    3.5/5

    நடிப்பு : விஜய் ஆன்டனி, அக்ஷா பர்தசானி, ஆர்என்ஆர் மனோகர், சந்திரமவுலி

    ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

    இசை: விஜய் ஆன்டனி

    மக்கள் தொடர்பு: நிகில்

    தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆன்டனி, ஆர்கே சுரேஷ், எம்எஸ் சரவணன்

    இயக்கம்: என்வி நிர்மல் குமார்

    தனக்கு எது சரியாக வருமோ அதைத் தேர்வு செய்து, உண்மையாக உழைப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாக வந்திருக்கிறது விஜய் ஆன்டனி நடித்துள்ள இரண்டாவது படமான சலீம்.

    இது ஒரு ஆக்ஷன் படம்தான். ஆனால் அதிரடியான லாஜிக் மீறல்கள் இல்லாமல் இயல்பாக நம்மையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் அளவுக்கு அழுத்தமான படமாகத் தந்திருக்கும் அறிமுக இயக்குநர் நிர்மல் குமாருக்கு பாராட்டுகள்.

    Salim Review

    நான் படத்தின் தொடர்ச்சியாகக் கதை ஆரம்பிக்கிறது. யாருமற்ற சலீம் மருத்துவம் முடித்து நேர்மையான டாக்டராக ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். நேர்மை, சேவை மனப்பான்மை, எல்லாவற்றிலும் நியாயம் பார்க்கும் மனசு, சமூகத்தின் மேல் உண்மையான அக்கறை என செல்லும் சலீமின் போக்கு, அந்த தனியார் மருத்துவமனைக்குப் பிடிக்காமல் போகிறது.

    (சலீம் படங்கள்)

    சலீமுக்கு அக்ஷாவுடன் திருமணம் நிச்சயமாகிறது. இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். சலீமின் குணத்துக்கு நெரெதிர் குணம் கொண்டவராக அக்ஷா. எனவே திருமணம் வேண்டாம் எனக் கூறிவிடுகிறார்.

    ஒரு நாள் சலீமை விருந்துக்கு அழைக்கும் மருத்துவமனை நிர்வாகம், தங்களின் கொள்ளைக்கு உடந்தையாக இல்லாத சலீமை, வேஸ்ட் என்று கூறி டிஸ்மிஸ் செய்வதாக அறிவிக்கிறது. அத்துடன் அந்த விருந்துக்கான பில்லைக் கூட சலீம்தான் கட்ட வேண்டும் என அடாவடி பண்ண.. வெகுண்டு எழுகிறார் சாது சலீம்.

    Salim Review

    அதன் பின் நடப்பவற்றை நிச்சயம் கதையாக சொல்லிவிடக் கூடாது. பார்த்து அனுபவிக்க வேண்டும்!

    இந்த சமூகத்தின் பெரும் நோயாக மாறிவிட்ட தனியார் மருத்துவமனைகளை மீண்டும் தைரியமாகத் தோலுரித்திருக்கிறது சலீம்.

    சலீம் என்ற பெயரைக் கேட்டதும், காவல் அதிகாரி நீ எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்.. அல்கொய்தாவா.. லஷ்கர் இ தொய்பாவா என பட்டியல் போட, அவரை இடைமறிக்கும் சலீம்... 'என் பேரை வைச்சு இப்படி முடிவெடுக்காதீங்க ஸார்.. வேணும்னா என் பேரை விஜய்ன்னோ ஆண்டனின்னோ வைச்சுக்குங்க.." -என நிறுத்தும் இடம், போலீசாரின் இன்றைய மனப்போக்கின் மீது விழுந்த சவுக்கடி!

    மகன் பிணையக் கைதியாக உள்ள ஆத்திரத்தில் போலீசுக்கு போன் பண்ணும் அமைச்சர், 'என்னய்யா புடுங்கிக்கிட்டிருக்கீங்க?' என எகிற, அதே சூட்டுடன், 'வாய்யா நீயும் வந்து புடுங்கு,' என்று அதிகாரி திருப்பிக் கொடுக்கும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.

    சலீமாக நடித்திருக்கும் விஜய் ஆன்டனி நிஜமாகவே கவர்ந்துவிட்டார். ஆக்ஷன் படங்கள் என்ற பெயரில் முன்னணி நடிகர்கள் படுத்தும் பாட்டுக்கு, இந்த சலீம் ரொம்பவே ஆறுதல். இயல்பாக நடிக்க வருகிறது. வசனங்களை உச்சரிப்பதிலும் தனி ஸ்டைல். சண்டைக் காட்சிகளில் நல்ல தேர்ச்சி... விஜய் ஆன்டனியை இரண்டாவது படத்திலேயே முன்னணி நடிகராக்கியிருக்கிறது சலீம் என்றால் மிகையல்ல.

    Salim Review

    நாயகியாக வரும் அக்ஷா பர்தசானி சொன்ன வேலையைச் செய்திருக்கிறார். அவரது நடிப்பு நம்மைக் கவரும் ஒரே இடம்... அந்த ஹோட்டலில் அலட்டலோடு சலீமைக் காணப் போய், அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறாரே.. அங்குதான்!

    சுற்றிலும் அத்தனை போலீசார், மீடியா சூழ்ந்து நிற்க, அமைச்சரின் மகனை துப்பாக்கி முனையில் காருக்குள் திணிக்கும் காட்சி நிஜமாகவே செம த்ரில்.

    இந்தப் படத்தில் விஜய் ஆன்டனிக்குப் பிறகு கவரும் இருவர் அமைச்சராக வரும் ஆர்என்ஆர் மனோகர் மற்றும் காவல் அதிகாரி செழியனாக வரும் சந்திரமவுலி. அதிலும் பின்னவர், அமைச்சர் மகனுக்கு வயசு பதினேழுதான் ஆகுது... சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்குத்தான் போகப் போறான் என க்ளைமாக்ஸில் சலீமிடம் சொல்லும் காட்சியும், அதை உணர்ந்து சலீம் தரும் ஒரு சிறு புன்னகையும் க்ளாஸ்.

    இசையிலும் கலக்கியிருக்கிறார் விஜய் ஆன்டனி. குறிப்பாக பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம். மஸ்காரா, உன்னைக் கண்ட நாள் முதல் பாடல்கள் அருமை. இத்தனை அருமையாக பாடல்கள் அமைக்கும் திறனிருக்கும்போது, எதற்காக பழைய ரீமிக்ஸ் விஜய் ஆன்டனி?

    Salim Review

    ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய தூண். ஆரம்பக் காட்சிகளில், பாத்திரங்களின் உணர்வுகளுக்கேற்ப நின்று நிதானிக்கும் அவர் கேமிரா, பிற்பாதியில் அத்தனை வேகம் காட்டியுள்ளது.

    ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கும் காட்சிகள் இருந்தாலும், பிற்பாதி அவற்றை நியாயப்படுத்திவிடுவதால், எடிட்டரைக் குற்றம் சொல்லும் அவசியமும் இல்லாமல் போய்விட்டது.

    வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. என்வி நிர்மல் குமாரின் இயக்க நேர்த்தி, அவர் ஒரு அறிமுக இயக்குநர் என்ற நினைப்பையே போக்கிவிட்டது.

    சலீம்.. போடலாம் ஒரு சலாம்!

    English summary
    Vijay Antony's second movie Salim is really nice action movie and worth to watch for the fantastic performance of the lead artist and perfect directorial.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X