twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெறி - விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5
    Star Cast: விஜய், சமந்தா, எமி ஜாக்ஸன்
    Director: அட்லி

    எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: விஜய், சமந்தா, எமி ஜாக்ஸன், மகேந்திரன், ராஜேந்திரன், பேபி நைனிகா, ராதிகா, பிரபு

    ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

    இசை: ஜிவி பிரகாஷ்குமார்

    தயாரிப்பு: கலைப்புலி எஸ் தாணு

    இயக்கம்: அட்லி

    'கடமை தவறாத போலீஸ் அதிகாரியின் கதை'

    - இந்த ஒரு வரியைச் சொன்னதும் 'ஒரு ஊர்ல ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இருப்பார். அவருக்கு ஒரு அழகான குடும்பம் இருக்கும். இந்த அதிகாரியால் பாதிக்கப்பட்ட ஒரு பலம் மிக்க பெரிய மனிதன் இருப்பான். அந்த பெரிய மனிதன் இந்த அதிகாரியின் குடும்பத்தைச் சின்னாபின்னமாக்குவான். அதற்கு பழிக்குப் பழி தீர்க்க அதிகாரி என்னவெல்லாம் செய்வார்' என்பதெல்லாம் உங்கள் மனக் கண்களில் விரிகிறதா?

    வெல்... தெறியின் கதையும் அதேதான்!

    Theri Review

    முதல் அரை மணி நேரம் பாட்ஷா, ஒரு கலர்ஃபுல் பாடலுக்கு சிவாஜி, கதையின் அடித்தளமாக சத்ரியன் மற்றும் ரமணா... இப்படி தனக்குப் பிடித்த ஆக்ஷன் த்ரில்லர்களின் 'இன்ஸ்பிரேஷனாக' இந்தத் தெறியை உருவாக்கியுள்ளார் அட்லி.

    ஒரு ஆக்ஷன் பட இயக்குநராக லிஸ்டில் இடம்பிடித்தாலும் இரண்டாவது படத்திலேயே சொந்த சரக்கு குறைந்துவிட்டதோ என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை அட்லி!

    Theri Review

    இன்னொரு முக்கியமான விஷயம்... விஜய் மாதிரி ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு வைக்கும் காட்சிகளில் எதார்த்தம் என்ற பெயரில், 'நீ மொக்க... உம் மூஞ்சிக்கு இது நல்லால்ல...' போன்ற அவரது உருவத்தை வாரும் வசனங்கள், காட்சியமைப்புகள் சேம் சைட் கோல் மாதிரி. படத்துக்கும் உதவாது.. ரசிகர்களையும் கடுப்பேற்றும்.

    இந்தப் படத்தை விஜய் என்ற ஒற்றை மனிதர்தான் தாங்கிப் பிடிக்கிறார். என்ன.. போலீஸ் உடுப்பு மட்டும் அவருக்குப் பொருந்தவில்லை!

    எந்த பந்தாவும் இல்லாத அழகான இயற்கைப் பின்னணியில் அமைந்த அறிமுகக் காட்சி இதம். விஜய்யின் ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த முதல் ஆக்ஷன் காட்சி அபாரம். சிக்னல்களில் குழந்தைகளைப் பிச்சையெடுக்க வைக்கும் அந்த கேடுகெட்ட ரவுடிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் விஜய்க்கு ஆரத்தி எடுக்க வேண்டும். அருமை.

    Theri Review

    மீட்கப்பட்ட அந்தக் குழந்தைகள் வைக்கும் கோரிக்கைகளைக் கேட்டு விஜய் மட்டுமல்ல, படம் பார்க்கும் அத்தனைப் பேரும் நெகிழ்ந்து கண்கலங்குவதைப் பார்க்க முடிந்தது.

    விஜய் வரும் அத்தனைக் காட்சிகளுமே 'தெறி' என்று சொல்லும்படிதான் இருக்கிறது.

    குறிப்பாக, வகுப்பறைக்குள் ரவுடிகளுக்குப் பாடம் சொல்லித் தரும் விதம், மாமனாரிடம் பெண் கேட்கும் காட்சி... செம்ம!

    அதேநேரம், சிக்லெட்டை வாயில் போடும் காட்சி, கண்ணாடியை இந்தக் கையிலிருந்து அந்தக் கைக்கு மாற்றும் ஸ்டைலெல்லாம் ஏற்கெனவே அட்லி வேலைப் பார்த்த சிவாஜியில் இடம்பெற்றவை. தவிர்க்கலாம்.

    Theri Review

    ஆனால் இதே அக்கறை பிரதான வில்லன் மகேந்திரனின் பாத்திரப் படைப்பில் இல்லை. 'என்னப்பா.. உங்கிட்ட இன்னும் எதிர்ப்பார்த்தேன். சப்பையா முடிச்சிட்டியே' என ஒரு காட்சியில் மகேந்திரன் பேசுவார். அந்த வசனம் அட்லிக்காகத்தான் போலிருக்கிறது. அவரது உடல் மொழியை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த வைத்திருக்கலாம். க்ளைமாக்ஸில் அவரை பரிதாபமாக உட்கார வைத்துவிடுகிறார். இந்த வயசான கிழவனை எப்படி நம்ம ஹீரோ அடிக்கப் போகிறாரோ என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.

    இரண்டு நாயகிகள். சமந்தா அழகான மனைவியாக வந்து ஒரு குழந்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, ஒரு நாள் இரவு, ஒரு மனைவியா என்னை நீங்க எப்படிப் பார்க்குறீங்க? என்று கேட்கும்போதே, அடுத்த சீனில் அவர் கொல்லப்படுவார் என்பது புரிந்துவிடுகிறது.

    அடுத்தது எமி. அவருக்கு சுத்தமாக பொருந்தாத கெட்டப். எப்போதும் ரோஸ் நிற உடை, கண்ணைப் பறிக்கும் லிப்ஸ்டிக். அவரது ரோல் என்னவென்று அவருக்கே கூட தெரியவில்லை.

    மொட்டை ராஜேந்திரனுக்கு செம புரமோஷன் இந்தப் படத்தில். படம் முழுக்க விஜய்யுடனே வருகிறார். சமயத்தில் கேரக்டர்... சில காட்சிகளில் நல்ல காமெடியன்.

    Theri Review

    பிரபு, ராதிகா, அழகம் பெருமாள், காளி வெங்கட் போன்ற பாத்திரங்கள் தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

    அந்த நைனிகா பாப்பா... அழகு. அந்த மழலை வசன உச்சரிப்புக்காகவே அள்ளிக் கொள்ளலாம் போல உள்ளது. நடிகை மீனாவின் மகளாச்சே!

    இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் ரொம்பவே மெனக்கெட்டிருக்க வேண்டும் இயக்குநர். திடீரென பேய்ப் பட ஸ்டைலில் மூன்று காட்சிகள் அரங்கேறுகின்றன. அதைத் தொடர்ந்து ரமணா பாணியில் மக்கள் கருத்து சொல்லும் காட்சிகள்.

    ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் கேரள காட்சிகள் அருமை. அந்த ட்ராஃபிக் சண்டைக் காட்சியில் செம உழைப்பு.

    ஜிவி பிரகாஷுக்கு இது 50வது படம். இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. அதில் ஒன்றின் இடையிசை ஏற்கெனவே கேட்டமாதிரி இருந்தது. பின்னணி இசைக்காக அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை.

    விஜய் ரசிகர்களுக்கு பெரிய அலுப்பிருக்காது. பொதுவான பார்வையாளருக்கு அட்லியிடம் நிறைய எதிர்ப்பார்த்துவிட்டோமோ என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாது.

    ஒரு முறை பார்க்கலாம், விஜய்க்காக!

    English summary
    Vijay's Atlee directed Theri is reminding the famous action movies Basha, Ramana, Sivaji and Chatriyan in parts. But the whole movie gives 50 percent satisfaction to general audience and 100 percent to Vijay fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X