twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தில்லு முல்லு - விமர்சனம்

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    Rating:
    3.0/5

    நடிப்பு: சிவா, பிரகாஷ் ராஜ், கோவை சரளா, இஷா தல்வார், சந்தானம், சூரி

    இசை: எம்எஸ் விஸ்வநாதன் - யுவன் சங்கர் ராஜா

    ஒளிப்பதிவு: லக்ஷ்மண்

    பிஆர்ஓ: ஜான்சன்

    தயாரிப்பு: வேந்தர் மூவீஸ்

    இயக்கம்: பத்ரி

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படங்களில் ஒன்றான, இன்றும் வாரத்துக்கு ஒருமுறையாவது தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தில்லுமுல்லு படத்தை, மீண்டும் அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

    என்னதான் தலைமுறை இடைவெளி, ரசனை மாற்றம் என்றெல்லாம் சமாதானப்படுத்திக் கொண்டாலும், ஒரிஜினல் தில்லுமுல்லுவையும் இந்த ரீமேக்கையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.

    அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால்... ஒரிஜினலுக்கு முன் இந்த ரீமேக் ஜூஜுபி!

    அதே கதைதான்... திரைக்கதையில் மட்டும் இன்றைய சூழலுக்கேற்ப சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள்.

    ஒரிஜினல் தில்லுமுல்லுவில் மீசையை வைத்து ஆள்மாறாட்டம் செய்வதாகக் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் சாதாரண கண் பசுபதி, பூனைக் கண் கங்குலி கந்தன் என ஆள்மாறாட்டம் செய்கிறார் சிவா.

    கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வசனத்தை ஒப்பிக்கிறார் சிவா. இதையே நடிப்பு என நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் இன்றைய ரசிகர்களும் விமர்சகர்களும். ராகங்கள் பதினாறு பாடலில் சிவாவின் உடல் மொழியும் பாவங்களும்... ரொம்ப்ப பாவம்! 'தமிழ்சினிமா'வை ஒரு முறைதான் ரசிக்க முடியும். நடிக்கிற எல்லா படமும் 'தமிழ்சினிமா'வாகவே இருந்தால், உங்களை நீங்களே ஸ்பூஃப் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

    தேங்காய் சீனிவாசன் பின்னியெடுத்த அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வேடத்தில் பிரகாஷ் ராஜ். சிவகுருநாதன் எனும் முருகபக்தராக, எதையும் சீக்கிரம் நம்புகிற அல்லது சந்தேகப்படுவராக வருகிறார். அவ்வளவு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர், திறமையாளர் இத்தனை மாங்காவாகவா இருப்பார்... ஆனால் ஒரிஜினலில் இப்படிக் கேட்க முடியாத அளவுக்கு தேங்காய் சீனிவாசன் பாத்திரமும் நிகழ்வுகளும் பின்னப்பட்டிருக்கும்.

    சௌகார் நடித்த ஆள்மாறாட்ட அம்மா பாத்திரத்தில் கோவை சரளா. கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரகாஷ் ராஜ் சந்தேகத்துடன் இவரைப் பார்க்க வரும் நேரங்களிலெல்லாம் நாக்கில் வேலைக் குத்தி அவரை உட்கார வைத்து விடுகிறார்கள். ஒரு முறை இரு முறை என்றால் கூட பரவாயில்லை. கோயிலில், நிச்சயதார்த்தத்தின்போது, சாதாரணமாக வீட்டிலிருக்கும்போது என எப்போதும் நாக்கில் வேலோடு கோவை சரளா. முடியல!

    படத்தின் பெரிய மைனஸ் கதாநாயகி இஷா தல்வார். ஏதோ மும்பை எக்ஸ்ட்ரா மாதிரி தெரிகிறார். முகத்தில் ஒரு களை இல்லை. நடிப்பு....? வீசை என்ன விலை!!

    நண்பன் கூடவே இருந்து அவன் தங்கையை கரெக்ட் பண்ணுபவராக வருகிறார் பரோட்டா சூரி. ரொம்ப ஸாரி... இந்த முறை உங்கள் ஷோ எடுபடவில்லை!

    பாத்திரங்கள், அதற்கான தேர்வுகளில் இயக்குநர் கோட்டைவிட்டாலும், வசனங்கள் அவருக்குக் கைகொடுக்கின்றன. சின்னச் சின்ன டைமிங் வசனங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

    க்ளைமாக்ஸை முழுசாக மாற்றியிருக்கிறார்கள். குன்றத்தூர் முருகன் கோயிலில் நடக்கும் கல்யாண காட்சியும் அதில் நடக்கும் சுவாரஸ்ய ஆள்மாறாட்டங்களும் சுந்தர் சி பட எஃபெக்டைத் தருகின்றன. இந்த க்ளைமாக்ஸ் மொத்தத்தையுமே சந்தானத்திடம் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.

    லக்ஷ்மனின் ஒளிப்பதிவில் விசேஷம் ஒன்றுமில்லை. துபாய் காட்சிகளில் கூட கிராபிக்ஸ் விளையாடுவதால், ஒளிப்பதிவாளர் காணாமல் போகிறார்.

    எம்எஸ்வி - யுவன் இசைக் கூட்டணியில், அந்த டைட்டில் ரீமிக்ஸ் அசத்தலாக உள்ளது. ராகங்கள் பதினாறு... பாடலை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். கார்த்திக் குரலை மட்டுமல்ல, மொத்த பாட்டையுமே கூட ரசிக்க முடியவில்லை. ஏதோ கோயிலில் கச்சேரி கேட்ட உணர்வு!

    ஒரிஜினல் தில்லுமுல்லு ஒரு காமெடிப் படம் என்றாலும், அத்தனைக் காட்சிகளிலும் ஒரு நேர்த்தியும் ஒழுங்கும் ஸ்டைலும் அழகுணர்வும் மனதை ஆளும் இசையும்... அனைத்துக்கும் மேல் ரஜினியின் சுவாரஸ்ய நடிப்பும் இருந்தது. அதெல்லாம் இந்த ரீமேக்கில் இல்லை. ஒருவேளை இதெல்லாம் இல்லாமலிருப்பதுதான் இந்தத் தலைமுறை பாணி என நினைத்துக் கொண்டார்களோ!

    ரஜினியின் தில்லுமுல்லு படத்தை மறந்துவிட்டு இந்தப் படத்தைப் பார்த்தால்... ரசிக்கலாம்!

    English summary
    Thillu Mullu is the remake of Superstar Rajini's 80's blockbuster in the same name is interesting in bits and pieces.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X