twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் - விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5
    எஸ்.ஷங்கர்

    நடிப்பு: சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி, பிந்துமாதவி
    ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியன்
    இசை: இமான்
    வசனம்: எம் ராஜேஷ்
    தயாரிப்பு: எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் பி மதன்
    இயக்கம்: பொன்ராம்

    சில படங்கள் ஏன்டா பார்த்தோம் என வருத்தப்பட வைக்கும். 'வ வா ச' அப்படி வருத்தப்பட வைக்கவில்லை. சிவகார்த்திகேயன் காட்டில் மழை தொடர்கிறது.

    கதை ரொம்ப வழக்கமானது. அடுத்து என்ன நடக்கும் என புரிந்து கொள்ள சிரமமற்றது.

    கிராமத்துப் பெரிசு சத்யராஜ். காதலித்தால் காதை அறுக்கும் ரகம். தன் செல்லமகள் ஸ்ரீதிவ்யா காதலில் விழாமல் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறார். ஆனால் எதிர்ப்பார்த்த மாதிரியே வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் சிவகார்த்திகேயனை லவ்வ ஆரம்பிக்கிறார். உடனே வேறு மாப்பிள்ளை பார்க்கிறார் சத்யராஜ். சிவகார்த்தியும் ஸ்ரீதிவ்யாவும் ஊரைவிட்டே எஸ்ஸாகிறார்கள். எப்படி எஸ்ஸானார்கள், சேர்ந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ். கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முயன்று ட்ராமா பண்ணியிருக்கிறார்கள்.

    Varuthapadatha Vaalibar Sangam - Review

    படத்துக்குப் படம் சிவகார்த்திகேயன் பாடி லாங்குவேஜில் முன்னேற்றம் தெரிந்தாலும், அவர் வசன உச்சரிப்பில் மாற்றமே இல்லை. மனம் கொத்திப் பறவை, கேபிகேர, எதிர்நீச்சல் என எல்லாப் படங்களிலும் ஒரே ஏற்ற இறக்கத்தோடுதான் அவர் டயலாக் டெலிவரி இருக்கிறது. கொஞ்சம் யோசித்தால் இந்த நான்கு படங்களிலும் அவருக்கு ஒரே மாதிரி ரோல்... ஒரே மாதிரி வசனம், ஒரே மாதிரி லவ்.. நேரம் நல்லா ஒர்க் அவுட் ஆகும்போதே ரூட்டை ஸ்டெடி பண்ணுங்க சிவகார்த்திகேயன்!

    ஹீரோயின் ஸ்ரீதிவ்யா, திரைக்குப் புதுசு. இயல்பான முகம்... எப்போதும் குறும்பு தவழும் கண்களும் இதழ்களும். கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சில காட்சிகளில் வரும் அனுபவ நடிகை பிந்து மாதவியை 'ஜஸ்ட் லைக் தட் ஓரம்' கட்டுகிறார் இந்த சின்னப் பெண்.

    சத்யராஜ் வழக்கமான அப்பா கேரக்டருக்கு வந்துவிட்டார். க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க அவரையும் காமெடியனாக்கியிருக்கிறார்கள். அந்த நெருக்கடியான நேரத்திலும் தனக்கு வாய்த்த இரு மூத்த மாப்பிள்ளைகள் பற்றி அவர் புலம்புமிடம் வெகு இயல்பு. அதேபோல கூட இருந்தே ஏத்திவிடும் அல்லக் கைகளால் எழும் ஈகோவை அவர் சொல்லிக் காட்டும் க்ளைமாக்ஸ் குபீர்!

    சூரிக்கு கிட்டத்தட்ட ஹீரோவுக்கு சமமான வாய்ப்பு. அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா தெரியவில்லை. சந்தானத்தைப் போல, வெறும் வசனங்களால் ஒப்பேற்றாமல், உடல் மொழியால் ரசிகர்களை ஈர்க்கும் திறனை இயல்பிலேயே பெற்றுள்ள சூரி, இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள நிறைய உழைக்க வேண்டியிருப்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. சிவகார்த்திகேயன் எப்படி நான்கு படங்களிலும் ஒரே மாதிரி தொடர்கிறாரோ அப்படித்தான் சூரியும் இந்தப் படத்தில்!

    அந்த ஆடலும் பாடலும் காட்சியும் அதில் இடம்பெற்ற நிலா காயுது பாடலும்... பல மாரியம்மன் திருவிழாக்களை நினைவுபடுத்தியது!

    சத்யராஜின் அல்லக்கைகளாக வரும் நால்வருமே கலகலக்க வைக்கிறார்கள். குறிப்பாக ஏகத்துக்கும் ஏத்திவிடும் தண்டபாணி!

    கிணற்றில் விழும் மாட்டை காப்பாற்றும் காட்சி, நிச்சயம் ஏதோ ஒரு கிராமத்தில் இயக்குநருக்கு நேர்ந்த அனுபவமாக இருக்கலாம்... அத்தனை நேர்த்தி, இயல்பு!

    டி இமானின் இசை இந்தப் படத்துக்கு பெரும் பலம். ஊதா கலரு ரிப்பன்... வரிகளைத் தாண்டி ரசிக்க வைக்கும் மெட்டு. அடுத்து அந்த 'பார்க்காதே பார்க்காதே...' அத்தனைப் பாடல்களும் ஏற்கெனவே கேட்ட மாதிரி இருந்தாலும், படத்தில் உட்காரும் நேரம் முழுவதும் நம்மை கட்டிப் போடுகிறது. இமான்... கமான்!

    இத்தனை ப்ளஸ்கள் இருந்தாலும், அவற்றுக்கு இணையான மைனஸ்களுக்கும் படத்தில் குறைவில்லை.

    முக்கியமாக சத்யராஜ் பாத்திரம். இவர் ஒன்றும் அத்தனை ஆபத்தான அப்பா இல்லை. இப்படித்தான் மாறப் போகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துமளவுக்குத்தான் இந்த கேரக்டர் உள்ளது.

    நான்கு காட்சிகளில் வருகிறார் பிந்து மாதவி. ஆனால் முதல் காட்சியிலேயே நிரூபித்துவிடுகிறார் தனக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை என்று. குறிப்பாக மாணவி தரும் காதல் கடிதத்துக்கு அவர் காட்டும் ரியாக்ஷன்!

    ராஜேஷின் உதவியாளரான பொன்ராம் தன் குரு வழியில் எந்த லாஜிக் பற்றியும் ரசிகர்களை யோசிக்க விடாமல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

    இவற்றில் சிரிப்பு குறைவாக இருந்தாலும், வெறுப்பில்லாமல் பார்க்கும்படி இயக்கிய விதத்தில், முதல் படத்திலேயே மினிமம் கியாரண்டி இயக்குநராகத் தெரிகிறார் பொன்ராம்!

    English summary
    Debutant Ponram's Varuthapadatha Vaalibar Sangam is a complete village based comedy with usual logical flaws.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X