» 

'வாரணம் ஆயிரம்' விருதுக்கு தகுதியான படமா?

Varanam Ayiram
விருதுகள் பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை... வாங்கப்படுகின்றன, என்று ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய மொழிப் படமாக 'வாரணம் ஆயிரம்' தேர்வு செய்யப்பட்டிருப்பதே அதற்கு சான்று என்கிறார்கள் திரையுலகில் நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற பொருமலில் தவிக்கும் தமிழ்ப் படைப்பாளிகள்.

'வாரணம் ஆயிரம்' என்ற தமிழ்ப் படம் தமிழரின் கலாச்சாரத்தையோ, வாழ்வியலையோ சொன்ன படம் அல்ல. ஆனாலும், அந்தப் படத்தை தமிழ் பிராந்தியத்துக்கான சிறந்த படம் என்று தேர்வு செய்துள்ளது விருதுக் குழு.

இதன் நிஜமான பின்புலம் என்ன?:

"எல்லாம் நக்மாதான். தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அவர், தனது தங்கையின் கணவர் நடித்த படம் என்ற ஒரே காரணத்துக்காக 'வாரணம் ஆயிரம்' படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படம் என்ற விருதினைக் கொடுத்திருக்கிறார்கள். நல்ல தமிழில், தமிழ் படைப்பாளிகளால், தமிழ் மண்ணின் பெருமையும் வாழ்க்கை முறையையும் பறைசாற்றிய 'சுப்பிரமணியபுரம்' படம் இவர்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லை" என்கிறார் ஒரு படைப்பாளி.

சேரன் நடித்து கரு.பழனியப்பன் இயக்கிய 'பிரிவோம் சந்திப்போம்' படமும் விருதுக் குழுவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்தப் படம் தமிழரின் ஒரு பிரிவினரான நகரத்தாரின் வாழ்வியலை மிகச் சிறப்பாகவே சித்தரித்திருந்தது.

இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் இப்படிச் சொன்னார்: "உண்மையில் கூட்டுக் குடும்பத்தின் அருமைகளை, மிகவும் நாகரீகமாக, நல்ல நெறிகளுடன் சொன்ன படம் 'பிரிவோம் சந்திப்போம்'. ஆனால் அவர்களுக்கு இந்தப் படம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். வருத்தமாக இருக்கிறது என்றார்.

இந்த ஆண்டில் வெளியான 'பூ' என்ற படத்தைப் பாராட்டாதவர்கள் இருக்க முடியுமா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்துக்கும் எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை. கரிசல் மண்ணில் பிறந்த ஒரு பெண்ணின் உணர்வுகளை, கந்தகத்தோடு கலந்துவிட்டு அந்த மக்களின் வாழ்க்கையை நெகிழ்வுடன் சொன்ன படம் அது.

அட, தமிழரின் வாழ்க்கை முறை என்ற விஷயத்தை விட்டுவிட்டாலும் அபியும் நானும், பாரதிராஜாவின் பொம்மலாட்டம் என சிறந்த திரைக்கதையுடன் வந்த நல்ல படங்களை விருதுக் குழு கண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது சரி... இவற்றிலெல்லாம் நக்மாவின் சொந்தக்காரர்களா நடித்தார்கள் அல்லது டெல்லியில் 'வேலையைக் காட்டி' விருதை 'வாங்கும்' அளவுக்கு மேனன்களும் கேரளத்தை சேர்ந்தவர்களுமா இயக்கியிருக்கிறார்கள்?

Read more about: நக்மா, சூர்யா, வாரணம் ஆயிரம், விருது, vaaranam aayiram, best regional film, nagma, surya
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos