twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை 11 : பாதியில் நின்ற நம்நாடு படப்பிடிப்பு!

    |

    -பெரு துளசிபழனிவேல்

    விஜயா வாஹினியில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு 'வாங்கய்யா வாத்யாரய்யா வரவேற்க வந்தோமய்யா ஏழைகள் உங்களை நம்பி எதிர்ப்பார்த்து நின்றோமய்யா' என்ற பாடல் காட்சிசயை 'நம்நாடு' படத்திற்காகப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். செல்வி ஜெயலலிதா. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் கலந்த நடனக் கலைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். டைரக்டர் ஜம்பு பாடல் காட்சியை பரபரப்புடன் படமாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை விஜயா இண்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் சார்பில் நாகிரெட்டியாரும், சக்கரபாணியும் தயாரித்தனர்.

    Nenjam Marappathillai 11

    இந்தப் பாடல் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் எடுத்து முடித்ததும் மதியவேளை படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது. அனைவரும் சாப்பிடப் போனார்கள். எம்.ஜி.ஆர்.சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக தியாகராய நகரில் உள்ள தனது ஆற்காடு சாலை அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். அன்றும் அப்பபடியே போய்விட்டார். மதிய உணவு முடிந்ததும் அனைவரையும் மேனேஜர் படப்பிடிப்புக்கு வரச் சொன்னார். எல்லோரும் பாடல் காட்சியில் நடனமாடுவதற்கு ரெடியனார்கள்.

    அப்பொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய எம்ஜிஆர் நடனக் கலைஞர் ஒருவரிடம் 'சாப்பிட்டு விட்டீர்களா' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியிருந்தது. நடனக் கலைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட நடனக் காட்சியையும் படமாக்க தொடங்கினார்கள். நடனக் காட்சியை எடுத்து முடித்ததும் இறுதியாக குளோசப் காட்சியையும் எடுக்கத் தயாரனார்கள்.

    அடுத்து எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சியை எடுப்பதற்காக டைரக்டர் ஜம்பு எம்.ஜி.ஆரை அழைத்து வரச் சொன்னார். படப்படிப்பில் இருந்த படம் சம்பந்தபட்ட புரொடக்ஷன் மேனேஜர் எம்.ஜி.ஆர். இருக்கும் அறைக்கு ஒடிப் போய் பார்த்தார். அறை மூடப்பட்டிருந்தது கதவைத் தட்டினார். கதவு திறந்தது உள்ளிருந்து வேறு யாரோ ஒருவர் வெளியே வந்தார். புரொடக்ஷன் மேனேஜர் எம்.ஜி.ஆர்.உள்ள இருக்கிறாரா என்று மெதுவான குரலில் கேட்டுக் கொண்டே அறைக்குள் சென்றார் உள்ளே எம்.ஜி.ஆர்.இல்லை. உள்ளே இருந்தவரும் 'அவர் இங்கு வரவேயில்லையே', என்றார்.

    புரொடக்ஷன் மேனேஜருக்கு டென்ஷன் ஆரம்பித்தது. இப்பதானே காரில் வந்து இறங்கினார். நானே பார்த்தேனே.. எங்கு போயிருப்பார்? தேடிக் கொண்டே வெளியேவந்தார்.

    Nenjam Marappathillai 11

    அவரது காரும் அங்கு இல்லை. நேரடியாக டைக்ரடர் ஜம்புவிடம் வந்தார். 'சின்னவர் அந்த அறையில் இல்லை. அவர் ரூமுக்கும் வரவில்லையாம்,' என்று விபரம் சொன்னார் மேனேஜர்.

    அதற்கு டைரக்டர் ஜம்பு, 'அவர் கார் வந்ததை நான் பார்த்தேன். காரிலிருந்து இறங்கி யாரோ ஒரு டான்ஸரிடம் பேசிக்கிட்டிருந்தார். திடீர்னு எங்கு போயிருப்பார்?' என்று ஸ்டுடியோ முழுவதும் போய் தேடினார்கள். எங்கும் இல்லை. அதற்குள் அவர்களுக்கு தகவல் வந்தது, எம்.ஜி.ஆர். தனது ஆற்காடு சாலையிலுள்ள அலுவலகத்திற்கு சென்றுவிட்டார் என்று. படப்பிடிப்பில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

    என்ன பிரச்சனை? எதற்காக எம்.ஜி.ஆர். திரும்பி போனர்? அதுக்காக இருக்குமோ? இதுக்காக இருக்குமோ? என்றுஅனுமானத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள் படப்பிடிப்பு குழுவினர்.

    படப்பிடிப்பு நடத்துகொண்டிருந்த விஜயா வாஹினி ஸ்டுடியோ முழுவதும் பரபரப்பாகியது. அதற்குள் டைரக்டர் ஜம்பு, மேனேஜரைக் கூப்பிட்டு ஒரு யோசனை சொன்னார். 'எம்.ஜி.ஆர். இங்கு வந்த போது யாரோ ஒரு டான்ஸரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது தேடிப் பிடித்து அழைத்து வா' என்றார்.

    Nenjam Marappathillai 11

    புரொடக்ஷன் மேனேஜர் அவரது உதவியாளர்களும் ஓடிப் போய் தேடினார்கள். இறுதியாக செட்டுக்குள் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்த அந்த டான்சரை அடையாளம் கண்டு அழைத்து வந்தார்கள்.

    டைரக்டர் ஜம்பு அவரைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் மெல்ல விசாரித்தார்.

    "உங்களிடம் தான் எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருந்தாரா?"

    "ஆமாம்... என்னிடம் தான் பேசிக்கொண்டிருந்தார்" என்று பவ்யமாக சொன்னார் அந்த டான்ஸ் கலைஞர். "உங்களிடம் சின்னவர் என்ன கேட்டார்... நீங்கள்அவரிடம் என்ன பதில் சொன்னீங்க?"

    அதற்கு டான்ஸ் கலைஞர், "சாப்பிட்டாச்சான்னு கேட்டார்... சாப்பிட்டோம்னு சொன்னோம். என்ன சாப்பிட்டீங்கன்னு திரும்பக் கேட்டார். நான் புளியோதரை, தயிர் சாதம் பொட்டலம் கட்டிக் குடுத்தாங்க... அதைத்தான் சாப்பிட்டோம்னு சொன்னேன். அதுக்கப்புறம் அவர் என்னை எதுவுமே கேட்கவேயில்லை காரில் ஏறி வெளியே போய்விட்டார்," என்று டான்ஸர் சொல்லி முடித்ததும் புரொடக்ஷன் மேனேஜருக்கு எதனால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்பது புரிந்துவிட்டது.

    Nenjam Marappathillai 11

    டைரக்டர் ஜம்புவும் எங்கே தவறு நடத்திருக்கு என்பதைப் புரிந்துக் கொண்டார்.
    டைக்ரடர் ஜம்பு, புரொடக்ஷன் மேனேஜரும் சேர்ந்து ஆற்காடு சாலையிலுள்ள எம்.ஜி.ஆர்.அலுவலகத்திற்குப் போனார்கள்.

    எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்துப் பேசினார்கள். புரொடக்ஷன் மேனேஜர்தான் பேசினார்.

    "இந்த தப்புக்கு நான்தான் காரணம். மேனேஜ்மெண்டுக்கு இதுப் பற்றி எதுவும் தெரியாது லஞ்ச் பிரேக்குக்கு அப்புறம் சீக்கிரம் படப்பிடிப்பு தொடங்கணும், நிறைய டான்சர்கள் இருந்ததால் பொட்டலம் சாப்பாடு கொடுத்துட்டா சீக்கிரமா சாப்பிட்டு வந்துடுவாங்கனு நான் அப்படி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன். இனி அப்படி ஒரு தவறு நடக்காது மன்னிச்சிடுங்க," என்று மேனேஜர் பேசி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆரின் கார் ஆற்காடு சாலையிலிருந்து கிளம்பியது.

    அதன்பிறகு 'நம்நாடு' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து எந்த விதமான காலதாமதமும் இல்லாமல் நடந்தது. இந்தப்பாடல் காட்சி எடுத்து முடியும் வரைஎம்.ஜி.ஆர்.அங்கேயே சக கலைஞர்களுடன் இணைந்து சாப்பிட்டார். தனக்கு என்ன உணவோ, அதுதான் படக்குழுவினர் அனைவருக்கும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

    அவரது கோபத்திற்குக் காரணம் புரொடக்ஷன் மேனேஜர் கம்பெனி சார்பில் நல்ல சாப்பாடு போடாமல், பொட்டலம் சாப்பாடு கொடுத்ததுதான். அதுவும் மேனேஜ்மெண்ட்டுக்கு தெரியாமல், மேனேஜர் எடுத்த முடிவினால் வந்த விபரீதம்தான் இது.

    Nenjam Marappathillai 11

    எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பு என்றால் அனைவருக்கும் நல்ல சாப்பாடுதான் போடுவார்கள். அது எந்தக் கம்பெனி படமாக இருந்தாலும். இது அவரது படத்தில் நடித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். எம்.ஜி.ஆரிடம் ஒரு குணம் உண்டு... தன்னுடைய படத்தில் நடிப்பவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைத்ததா? சம்பளத்தை முழுமையாக கொடுத்து விட்டார்களா? என்பதில் அதிக கவனம் எடுத்து கொள்வார்.

    இன்று வரையிலும் அவரது பேரும், புகழும் நிலைத்து நிற்பதற்கு அவரது இந்த குணமும், நல்ல மனமும்தான் காரணம்.

    இந்தப் படத்திற்கு ஜம்பு டைரக்டரான பின்னணியில் ஒரு செய்தி உண்டு. 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை குறுகிய காலத்தில் எடுத்தார்கள். அந்தப் படத்தை 14.1.1965 பொங்கல் பண்டிகை நாளில் வெளியிடுவதற்காக தீவிரமாக ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் படம் சீக்கிரமாக வெளியே வருமா என்று சந்தேகம் இருந்தது. அப்பொழுது ஜம்பு அந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகளுக்கு உடனிருந்து படம் சீக்கிரமாக வெளியே வருவதற்கு உதவிகள் செய்தார். அதனால்தான் எம்.ஜி.ஆர்.அவர்கள் 'நம்நாடு' படத்தை இயக்குகின்ற வாய்ப்பை ஜம்புவுக்குக் கொடுத்தார்.

    -தொடரும்...

    English summary
    The 11th episode of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai cinema series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X