twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை 15 - எம்ஜிஆர்... அள்ளித் தந்த நல்லவர்!

    |

    -பெரு துளசிபழனிவேல்

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களைப் பொறுத்தவரை தன்னை வைத்து படம் எடுப்பபவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தன்னுடைய சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதைச் சரி செய்து படத்தையும் நல்லமுறையில் எடுத்து கொடுத்து வியாபாரத்திற்கும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுகின்ற வரையிலும் முக்கியப் பங்கு வகிப்பார்.

    நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 'தாலி பாக்கியம்' படமும் இதற்கு விலக்கல்ல.

    இந்தப் படத்துக்கு அவுட்டோரில் ஒரு பிரச்சனை வந்தது. அதையும் தனது சொந்தப் பிரச்சனையாக எடுத்து தீர்த்துக் கொடுத்தார்.

    Nenjam Marappathillai 15

    நடிகை கண்ணாம்பா எம்.கே - தியாகராஜா பாகவதருக்கும் (அசோக்குமார்) பி.யூ. சின்னப்பாவிற்கும் (கண்ணகி) ஜோடியாக நடித்தவர். எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் (தாய்க்குபின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே) சிவாஜி அவர்களுக்கும் (உத்தமபுரத்திரன், மனோகரா) அம்மாவாக நடித்தவர்.

    இவர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'தாலி பாக்கியம்' என்று சொந்தமாக ஒரு படத்தை தயாரித்தார். இதில் சரோஜாதேவி, எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். இந்தப் படத்திற்கான வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். இசையை கே.வி. மகாதேவன் அமைத்தார்.

    படத்தின் இயக்குநராக முதலில் எம்.ஏ.திருமுகத்தை போட்டார்கள். ஆனால் கண்ணாம்பாவின் கணவர் கே.பி. நாகபூஷணம் தங்களது சொந்தப் படம் என்பதால் தானே இந்தப்படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார். அதனால 'தாலி பாக்கியம்' படத்தை கே.பி.நாகபூஷணம்தான் இயக்கினார்.

    Nenjam Marappathillai 15

    கண்ணாம்பா எம்.கே.தியாகராஜாபாகவதருடன் ஜோடியாக நடித்த அசோக்குமார் படத்தை அடிப்படையாகக் கொண்டு தாலி பாக்கியத்தை உருவாக்கினார்கள்.
    ஒரு வயதானவர் (எஸ்.வி.சுப்பையா) தனக்கு இரண்டாந்தாரமாக ஒரு பெண்ணைப் (எம்.என்.ராஜம்) பார்த்து திருமணம் செய்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்கிறார்.

    அதற்காக தனது பக்கத்து வீட்டிலிருக்கும் இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஒருவரை உடன் அழைத்துச் செல்கிறார். அங்கே மணப்பெண் உடன் வந்த இளைஞன்தான் மாப்பிள்ளை என்றுநினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.

    திருமண நாளும் வருகிறது. தாலிகட்டும் போதுதான் தெரியவருகிறது மாப்பிள்ளை இளைஞனில்லை, கிழவர் தான் என்று. அவளால் மறுக்க முடியவில்லை. ஊருக்காக கிழவனையும், உள்ளத்தில் இளைஞனையும் கணவனாக ஏற்றுக் கொள்கிறாள். அதற்காக அவர்களது குடும்பத்தில் சூழ்ச்சிகளைச் செய்கிறாள். அதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகின்றன. இளைஞனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இருந்து வந்த காதலிலும் பிரச்சனைகள் தலை தூக்குகின்றன. இப்படி போகிறது இந்தபடத்தின் திரைக்கதை.

    Nenjam Marappathillai 15

    'தாலி பாக்கியம்' படத்திற்கான அவுட்டோர் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள முக்கியபகுதிகளில் நடந்ததுக் கொண்டிருந்தது. அவுட்டோரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நடிகர், நடிகையர்கள் கலந்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி சம்பந்தபட்ட காதல் காட்சிகள், எம்.ஜி.ஆர். - எம்.என்.ராஜம் சம்பந்தட்ட மோதல் காட்சிகள், எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் வேகமாக படமாக்கப்பபட்டன.

    ஒருநாள் இதேபோன்று படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அப்பொழுதுதான் தெரியவந்தது தயாரிப்பாளர் தரப்பில் மொத்த படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த பணம் திருடு போயிருப்பது.

    தயாரிப்பாளர் கண்ணாம்பா, அவரது கணவர் கே.பி.நாகபூஷணம் அவுட்டோரில் வந்து மாட்டிக் கொண்டோம் என்று அதிர்ச்சியடைந்தார்கள். படப்பிடிப்பபு குழுவினரால் பணம் திருட்டு போன விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்கள். திருட்டுப் போன பணம் திரும்பி வரவேயில்லை. இப்பொழுது என்ன செய்வது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதா? கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதா? அப்படி ஊருக்குப் போவதாக இருந்தாலும் அவர்களுக்கு தரவேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் எப்படி போவது?

    இடிந்து போய்உட்கார்ந்துவிட்டார்கள் இருவரும். இந்தச் செய்தி பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் காதுகளுக்குச் சென்றது தொழிலாளர்களும், நடிகர் நடிகையர்களும் பிரச்சனைகளை அவரிடம் கொண்டு சென்றார்கள்.

    கண்ணாம்பாவும், அவரது கணவர் கே.பி.நாகபூஷணமும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாகஅமர்ந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு அனைவரையும் வரவழைத்து அமைப்படுத்தினார்.தயாரிப்பாளர்களுக்கு தைரியம் சொன்னார்.

    Nenjam Marappathillai 15

    படப்பிடிப்பு நிற்க வேண்டாம் அவுட்டோர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கட்டும். எல்லாப் பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்றார். எம்.ஜி.ஆர் உடனடியாக பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தமிழ் நாட்டிலுள்ளள சத்தியா ஸ்டுடியோவிற்கு டிரங்க்கால் போட்டு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் குஞ்சப்பனிடம் பேசினார். படப்பிடிப்பிற்கான தொகை ரூபாய் ஐந்து லட்சத்தை உடனடியாக கொண்டு வரச் சொன்னார். கேட்ட பணம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தது.

    அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுக்கப்பட்டது. திட்டமிட்டப்படி அவுட்டோர் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்தது. 'தாலி பாக்கியம்' படத்தின் தயாரிப்பாளர் கண்ணாம்பா எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தனிப்பபட்ட முறையில் சந்தித்து நன்றி சொன்னார்.

    "படம் எடுக்க கால்ஷீட்டும் கொடுத்து படப்பிடிப்பில் பிரச்சனை வந்ததால் பணமும் கொடுத்து எனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டீர்கள். என்றென்றும் நன்றியோடு இருப்போம்," என்றார்.

    கண்ணாம்பா தனது இறுதிக் காலத்தில் தியாகராய நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர்.விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். "உங்களது இறுதிக் காலம் வரை நீங்கள் இந்த வீட்டில்தான் இருக்க வேண்டும். வேறு வீட்டிற்கு போகக் கூடாது," என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணாம்பாவும் தனது கடைசிகாலம் வரைஅந்த வீட்டில்தான் இருந்தார். அவர் இறந்த பிறகுதான் எம்.ஜி.ஆர்.அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார்.

    கவிஞர் வாலி எம்.ஜி.ஆரை சரியாக கணித்துத்தான் பாடல் எழுதினார்.

    'உள்ளமதில் உள்ளவரை
    அள்ளிதரும் நல்லவரை
    விண்ணுலகம் வா என்றால்
    மண்ணுலகம் என்னாகும்....'

    -தொடரும்...

    English summary
    Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai 15th episode.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X