twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை - 23: எம்.ஜி.ஆரை திரையுலகின் முடிசூடா மன்னனாக்கிய படங்கள்!

    |

    -பெரு துளசிபழனிவேல்

    தமிழ்த் திரையுலகில் துணை நடிகராக நுழைந்து 'சதிலீலாவதி' (1936) முதல் ஸ்ரீமுருகன், சுலோச்சனாவரை சுமார் 15 படங்களில் சிறிய வேடங்களில் தோன்றி வளர்ந்து வந்த எம்.ஜி.ஆர், 'ராஜகுமாரி' (1947) படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் புரட்சி நடிகரானார்... மக்கள் திலகமானார். அவர் புரட்சித் தலைவராக புகழ்பெற்று, கடைசியாக நடித்த படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)'. அந்தப் படம் வெளியாவதற்குள் தமிழகத்தின் முதல்வராகிவிட்டார் (1977).

    115 படங்கள்வரை கதாநாயகனாக நடித்து தமிழ்த் திரையுலகில் வெற்றி நாயகனாக உலாவந்தவர் எம்.ஜி.ஆர். அவர் கதாநாயகனாக நடித்த பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்களாகவும், வசூலை வாரிக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன. 100 நாட்கள் ஓடாத அவரது சில படங்களும் கூட தோல்விப் பட லிஸ்டில் சேர்ந்ததில்லை. வசூலில் பெரிய குறை வைக்காத படங்கள்.

    எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகில் 42 ஆண்டுகள் வெற்றிகரமாக உலாவந்தாலும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் பலசோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தார். அப்படிப்பட்ட சோதனைகளும், வேதனைகளும் எம்.ஜி.ஆரை நெருங்கி நிலைகுலைய வைத்த போது திரையுலகைச் சேர்ந்தவர்களில் சிலர் 'எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் இத்தோடு முடிந்தது இனி அவரால் கதாநாயகனாக வெற்றி பெற முடியாது. மக்களும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்று அவரது காதுபடவே கேலியும், கிண்டலுமாக பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி அவர் நடித்த சிலப டங்கள் அவருக்கு சோதனையான காலகட்டத்திலும் மக்களைக் கவரும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து அவரது திரையுலக வாழ்க்கைகே திருப்பு முனையாகத் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரை நம்பி படம் எடுக்கவந்தவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தன.

    சோதனையான வேதனையான காலகட்டத்தில் அவரது சினிமா மார்க்கெட் வீழ்ந்து விடாமல் தூக்கி நிறுத்தி வெற்றி நாயகனாக அவரை வலம் வர வைத்த சில படங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

    ராஜகுமாரி (1947)

    ராஜகுமாரி (1947)

    எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடங்களில் நடிப்பதற்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்த காலம் அது. கதாநாயனாக நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவை, இலட்சியத்தை 1947ஆம் ஆண்டு வெளிவந்த ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ராஜகுமாரி' படம் தான் நிறைவேற்றிக் கொடுத்தது. மாலதி என்ற நடிகை ஜோடியாக நடித்தார். ஏ.எஸ்.ஏ.சாமி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் உதவி வசனம் என்று மு.கருணாநிதி பெயர் போடப்பட்டது. துணை நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்த ‘ராஜகுமாரி' படம்தான்.

    மருதநாட்டு இளவரசி (1950)

    மருதநாட்டு இளவரசி (1950)

    கோவிந்தன் கம்பெனி மூலம் தயாரிக்கபட்ட படம் ‘மருதநாட்டு இளவரசி'. ஏ.காசிலிங்கம் இயக்கிய இந்தப் படத்திற்கு வசனம் மு.கருணாநிதி என்று முதல் முதலில் டைட்டிலில் பெயர் வந்தது. கதாநாயகியாக எம்.ஜி.ஆருடன் முதன்முறையாக இணைந்து நடித்தார் வி.என். ஜானகி. 133 நாட்கள் ஓடி அதிக வசூலை கொடுத்ததால் இந்தப்படத்திற்கு பிறகு எம்.ஜி.அரை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க வைத்து படங்களை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது ‘மருதநாட்டு இளவரசி' படம். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கையிலும் திருப்பத்தைத் தந்த படம் இது.

    மர்மயோகி (1951)

    மர்மயோகி (1951)

    ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் கே.ராம்நாத் இயக்கத்தில் தயாரித்த படம் ‘மர்மயோகி' 151 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மாதுரி தேவி நடித்தார். வசனத்தை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதினார். எம்.ஜி.ஆரை அன்றிருந்த கதாநாயகர்களின் வரிசையில் முதல் வரிசையில் கொண்டுபொய் உட்கார வைத்த படம் ‘மர்மயோகி'. ஏழை எளியவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக போராடுகின்ற நாயகன் எம்.ஜி.ஆர்தான் நல்ல என்ற நல்ல பெயரை மக்களிடம் பெறுகின்ற அளவிற்கு அமைந்தது ‘மர்மயோகி'.

    மலைக் கள்ளன் (1954)

    மலைக் கள்ளன் (1954)

    ஸ்ரீராமுலு நாயுடு பக்ஷிராஜா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கிய படம் ‘மலைக்கள்ளன்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என்று பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஜோடியாக நடித்தவர் பி.பானுமதி. ஸ்ரீராமுலு நாயுடு நாமக்கல் கவிஞரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 150 நாட்கள் ஓடி எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளிக் கொடுத்து முதல்வரிசையில் இருந்த எம்.ஜி.ஆரை திரையுலக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சக்கரவர்த்தியாக மாற்றிய படம் ‘மலைக் கள்ளன்'.

    நாடோடி மன்னன் (1958)

    நாடோடி மன்னன் (1958)

    எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்து தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கிய முதல் படம் ‘நாடோடி மன்னன்'. இவருக்கு ஜோடியாக பி.பானுமதி, சரோஜா தேவி நடித்திருந்தார்கள். கவியரசர் கண்ணதாசன் படத்திற்கான வசனத்தை எழுதியிருந்தார். படம் வெளியாவதற்கு முன் 'இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் இல்லை என்றால் நாடோடி' என்று பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர். பேட்டிக் கொடுத்திருந்தார். இந்தப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை வாரிக்குவித்து நல்ல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தை ஏற்று சிறப்பாக நடிக்க கூடிய நடிகராகவும் மக்கள் ஏற்றுக் கொண்டாடிய படம். மக்கள் மனதில் இன்று வரை மன்னனாக எம்.ஜி.ஆர் அமர்ந்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம் ‘நாடோடி மன்னன்'.

    திருடாதே (1961)

    திருடாதே (1961)

    ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எல். சீனிவாசன் ப.நீலகண்டன் இயக்கத்தில் தயாரித்த படம் ‘திருடாதே'. வசனத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து முதல் முதலில் ‘திருடாதே' படம் எடுக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு தாமதமானதால் படம் தாமதமாக வந்தது. ‘நாடோடி மன்னன்' சீக்கிரமாக வெளிவந்துவிட்டது. அதுவரையில் சரித்திர படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரால் சமூகப் படங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்த படம் ‘திருடாதே'. 161 நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடியதால் தொடர்ந்து பல சமூகப் படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதற்கான திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்த படம் ‘திருடாதே'.

    தாய் சொல்லைத் தட்டாதே (1961)

    தாய் சொல்லைத் தட்டாதே (1961)

    ‘திருடாதே' படத்தை எடுத்து முடிக்க சந்தர்ப்ப சூழ்நிலையால் பல மாதங்கள் ஆனதால் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால் வெளிவருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்ற ஒரு அவப்பெயர் எம்.ஜி.ர் மீது சுமத்தப்பட்டது. அந்தப் அவப் பெயரை நீக்கிய படம் ‘தாய் சொல்லைத் தட்டாதே' சாண்டோ சின்னப்ப வேரின் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தால் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டு விரைவாக வெளிவந்த படம். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜா தேவி ஜோடியாக நடித்தார். 133 நாட்கள் ஓடி வசூலை வாரித் தந்தது.

    எங்க வீட்டுப் பிள்ளை (1965)

    எங்க வீட்டுப் பிள்ளை (1965)

    எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டை நீக்கிய படம் ‘எங்க வீட்டுப்பிள்ளை'. 236 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக விழா கொண்டாடிய படம். 1965, ஜனவரியில் வெளியானது.

    பி.நாகிரெட்டியாரின் விஜயா வாஹினி நிறுவனம் தயாரிப்பில், சாணக்கியா இயக்கத்தில் வெளி வந்து தமிழ்த்திரையுலகிற்கே திருப்புமுனையை தந்தபடம். இதில் சரோஜாதேவியும், புதுமுக நடிகை ரத்னாவும் ஜோடியாக நடித்தார்கள். வசனத்தை சக்தி கிருஷ்ணாசாமி எழுதியிருந்தார்.

    13 தியேட்டர்களில் 100 நாட்கள், 7 அரங்குகளில் 175 நாட்கள், 3 அரங்குகளில் 236 நாட்கள் ஓடிய படம் இது.

    ஆயிரத்தில் ஒருவன் (1965)

    ஆயிரத்தில் ஒருவன் (1965)

    எம்ஜிஆர் கிட்டத்தட்ட சரித்திரப் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த நேரத்தில், ஒப்புக் கொண்ட சரித்திரப் படம் ஆயிரத்தில் ஒருவன். சிவாஜியின் ஆஸ்தான இயக்குநராக இருந்த பிஆர் பந்துலு, கர்ணன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தைத் தொடர்ந்து எம்ஜிஆரிடம் கால்ஷீட் கேட்டு வந்தார். மறுப்பேதும் சொல்லாமல் எம்ஜிஆரும் நடித்துக் கொடுத்தார்.

    எங்க வீட்டுப் பிள்ளை என்ற ப்ளாக்பஸ்டர் வெளியான அதே 1965-ம் ஆண்டு, ஜூலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படி ஒரு வெற்றி வேறு எந்த நடிகருக்கும் அமையாது எனும் அளவுக்கு பிரமாண்ட வெற்றிப் பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். இனி எம்ஜிஆரை மிஞ்ச ஒரு நடிகர் திரையுலகில் இல்லை என்று அழுத்தமாக உணர வைத்த படம் ஆயிரத்தில் ஒருவன். முதல் வெளியீட்டில் வெள்ளி விழா கண்ட இந்தப் படம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ல் மீண்டும் வெளியிடப்பட்டபோது, 190 நாட்கள் ஓடி கோடிகளை அள்ளி, எம்ஜிஆர் என்ற ஆளுமையின் பெருமையை உணர வைத்தது.

    காவல்காரன் (1967)

    காவல்காரன் (1967)

    ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘காவல்காரன்'. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக செல்லி ஜெயலலிதா நடித்திருந்தார். ப.நீலகண்டன் படத்தை இயக்கியிருந்தார். வித்வான் வே.லட்சுமணன் வசனத்தை எழுதியிருந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர். தனது சொந்தக் குரலில் பேசி நடித்தப் படம் ‘காவல்காரன்'. குண்டடிப்பட்டு பாதிக்கப்பட்டு பேசிய எம்.ஜி.ஆரின் சொந்தக் குரலை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று அனைவரும் சந்தேகத்தை கிளப்பிய போது, ஏற்றுக் கொள்வோம் என்று மக்கள் ‘காவல்காரன்' படத்தையே மாபெரும் வெற்றிப் படமாக்கி 160 நாள் வெற்றிகரமாக ஓடவைத்து வசூலிலும் சாதயைப் படைக்க வைத்தார்கள். எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையே காவல்காரனுக்கு முன், காவல்காரனுக்குப் பின் என்றாகிவிட்டது.

    குடியிருந்த கோயில் (1968)

    குடியிருந்த கோயில் (1968)

    ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘குடியிருந்த கோயில்.' இதிலும் மாறுபட்ட இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக செல்வி ஜெயலலிதா, ராஜஸ்ரீ நடித்திருந்தனர். கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். வசனம் கே.சொர்ணம், சிறந்த நடிருக்கான விருதை தமிழ்நாடு அரசிடமிருந்து முதன் முதலில் எம்.ஜி.ஆருக்கு பெற்றுத் தந்தபடம். 146 நாட்கள் ஓடி பெரிய வசூலைத் தந்தது.

    ஒளிவிளக்கு (1968)

    ஒளிவிளக்கு (1968)

    எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆரை மாறுபட்ட கதாபாத்திரத்தில் துனிச்சலாக நடிக்க வைத்து எடுத்த படம் ‘ஒளிவிளக்கு'. இது எம்.ஜி.ஆருக்கு 100வது படம். படத்தை சாணக்யா இயக்கியிருந்தார். கே.சொர்ணம் வசனம் எழுதியிருந்தார். செல்வி ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை நடித்திராத முரட்டுத்தனம், திருட்டுத்தனம் கொண்ட குடிகாரன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இப்படிப்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகத்தைப் போக்கி 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியப் படம் ‘ஒளி விளக்கு'.

    அடிமைப் பெண் (1969)

    அடிமைப் பெண் (1969)

    எம்.ஜி.ஆர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து, தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் உருவாக்கிய படம் ‘அடிமைப் பெண்'. செல்வி ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சொந்தக் குரலில் ‘அம்மா என்ற அன்பு....' என்று ஒரு பாடலையும் பாடியிருந்தார். வசனத்தை கே.சொர்ணம் எழுதியிருந்தார். இந்தப் படத்தின் கதை வரலாற்று கதையுமல்லாமல், சமூக கதையுமல்லாமல், மந்திர ஜாலங்களைக் கொண்ட கதையுமில்லாமல், ஆனால் எல்லாம் கலந்த கதையாக இருந்தது. இப்படி ஒரு கதையை வெற்றிப் பெற வைப்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. அப்படிப்பட்ட படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு 176 நாட்கள் ஓட வைத்து வெற்றி விழா கொண்டாட வைத்தார்கள்.

    மாட்டுக்கார வேலன் (1970)

    மாட்டுக்கார வேலன் (1970)

    எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம். செல்லி ஜெயலலிதா, லட்சுமி ஜோடியாக நடித்திருந்தார்கள். ப.நீலகண்டன் இயக்கத்தில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்தது. ஏ.எல். நாராயணன் வசனம் எழுதியிருந்தார். முதலில் இந்தப் படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்குவதாக இருந்தது பிறகு அவருக்கு அதிக வேலைகள் இருந்ததால், ப.நீலகண்டன் படத்தை இயக்கினார். இந்த டைரக்டர் படத்தை இயக்குவார் என்று சொல்லிவிட்டு வேறொரு டைரக்டரை வைத்துப் படத்தை எடுக்கும் போது படம் சரியாக வருமா, வெற்றி பெறுமா? என்று விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் சந்தேகத்தை எழுப்பியதால் படத்திற்கு சிக்கல் வந்தது. ஆனால் எல்லா சிக்கலையும் மீறி இந்தப் படத்தை சிறப்பாக தயாரித்தார் தயாரிப்பாளர் கனகசபை. மக்களும் ஏற்றுக் கொண்டு 177 நாட்கள் ஒட வைத்தார்கள். வசூலிலும் சாதனைப் படைத்தது.

    ரிக்ஷாக்காரன் (1971)

    ரிக்ஷாக்காரன் (1971)

    எம்.ஜி.ஆர். ரிக்ஷா தொழிலாளியாக நடித்த படம் ‘ரிக்ஷாக்காரன்' ஆர். எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. எம்.கிருஷ்ணன் படத்தை இயக்கியிருந்தார். ஆர்.கே.சண்முகம் வசனத்தை எழுதியிருந்தார். புதுமுக நடிகையான மஞ்சுளா எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இந்தப் படம் எடுக்கும்போது சிலர் ஒடாது, வெற்றி பெறாது என்று ஆரூடம் சொன்னார்கள். ஆனால் படம் வெளிவந்து 167 நாட்கள் ஓடி வசூலில் மாபெரும் சாதனைப் புரிந்தது. ‘ரிக்ஷாக்காரன்' எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருதினைக் கொடுத்து கௌரவித்தது இந்திய அரசு. ரிக்ஷாவில் இருந்துக் கொண்டே எம்.ஜி.ஆர் சிலம்பு சண்டைப் பேட்டது அனைவராலும் பேசப்பட்டது, பாராட்டப்பட்டது.

    உலகம் சுற்றும் வாலிபன் (1973)

    உலகம் சுற்றும் வாலிபன் (1973)

    எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்து தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம். ‘உலகம் சுற்றும் வாலிபன்'. லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை ரூங்ரேட்டா கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். கே.சொர்ணம் வசனம் எழுதினார். இந்தப்படம் வெளிவருவதற்கு பல தடைகள் ஏற்பட்டன. அதை எல்லாம் முறியடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்றது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்து சாதனைப் புரிந்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்' அன்றைய காலகட்டத்தில் 3 கோடிக்கு ‘இன்றைய கால கட்டத்தில் (300 கோடி) மேல் வசூலை தந்து அரசாங்கத்திற்கு 1.25 கோடிக்கு வரியைக் கட்ட வைத்த முதல் தென்னகப் படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்'.

    (எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி இன்னும் சில கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகும்)

    - தொடரும்...

    English summary
    The 23rd episode of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X