» 

நார்வே திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கியது - நடிகை ரிச்சா, இயக்குநர் சற்குணம் பங்கேற்கின்றனர்!

Posted by:

3 வது நார்வே தமிழ் திரைப்பட விழா மற்றும் தமிழர் விருது 2012 நிகழ்வுகள் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் லொரன்ஸ்கூ நகரங்களில் வரும் 29-ம் தேதி வரை இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த விழாவில் நேரடியாகப் பங்கேற்க மயக்கம் என்ன, ஒஸ்தி புகழ் நாயகி ரிச்சா கங்கோபாத்யாய், புரட்சித் தளபதி விஷால், இயக்குநர்கள் சற்குணம், கவுரவ், ஆவணப்பட இயக்குநர் சுபாஷ் கலியன் , பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, புன்னகைப்பூ கீதா, கேசவன் உள்பட பல திரையுலகக் கலைஞர்கள் நார்வே செல்கின்றனர்.

24 ஆம் தேதி முதல் 28 ம் தேதி வரை பத்து தமிழ் திரைப்படங்கள் Ringen திரையரங்கில் பார்வையாளர்களுக்காக திரையிடப்படுகின்றன. இதற்கான நுழைவுச் சீட்டுகளை www.filmweb.no இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Stovner இல் உள்ள Nedre Fossum Gård - Kultur Salen இல் இருபது குறும்படங்கள் 25, 26 ஆம் தேதிகளில் இலவசமாக திரையிடப்படுகின்றன. இதற்கு நுழைவுச் சீட்டு இலவசம்!

நிறைவு நாளான 29 தேதி தமிழர் விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. அன்றைக்கு பார்வையாளர் செவிகளுக்கு இன்னிசை விருந்து வழங்க பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே) , பிரவீனா(நோர்வே), மாளவி சிவகணேஷன்(நோர்வே) ஆகியோருடன் 'Yarl stars' இசைக் குழுவினர் இணைந்து வழங்கும் "நள்ளிரவுச் சூரியன்" - இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

தூங்கா நகரம் - சிறப்புத் திரையிடலுக்கு தேர்வு

கவுரவ் இயக்கத்தில் விமல் - அஞ்சலி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற தூங்கா நகரம் திரைப்படம் இந்த ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது.

சுபாஷ் கலியன் இயக்கத்தில் "பாலம் கல்யாணசுந்தரம்" அய்யா அவர்களின் ஆவணப்படமும் இந்த விழாவில் சிறப்பு திரையிடலுக்கு தெரிவாகி உள்ளது. நார்வே தமிழ் திரைப்பட விழாவின் பிரதான போட்டிக்கான 15 முழு நீள தமிழ் திரைப்படங்களை, மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையே சமீபத்தில்தான் விழாக்குழுவினர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 50-க்கும் அதிகமாக படங்கள் இந்தப் போட்டிக்குக் குவிந்தன.

நார்வே தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழு பார்த்து தேர்வு செய்ததன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான நார்வே திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதித் தேதிக்குப் பிறகும்கூட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படங்களை அனுப்பலாமா... சேர்க்க முடியுமா என கேட்டவண்ணம் இருந்தது, இந்த விழாவின் பெருமையை பறைசாற்றுவதாக இருந்தது.

தமிழ் சினிமாவுக்கென்றே உலக அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. இந்த விழாவின் முடிவில் சிறந்த திரைப்படத்துக்கு தமிழர் விருதும், சிறந்த நடிகர் - நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்கள், சிறந்த இயக்குநருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் வசீகரன் சிவலிங்கம் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

Read more about: film festival, நார்வே, norway, திரைப்பட விழா
English summary
The 3rd edition of Norway Tamil Film Festival has kick started in Oslo in grand manner.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos