twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்த்- இளையராஜா- பஞ்சு அருணாச்சலம்... ஒரு அபூர்வ சந்திப்பு!

    By Shankar
    |

    தமிழ் சினிமாவில் கண்ணதாசனின் அடியொற்றி வந்தவர்களில் பஞ்சு அருணாச்சலம் முக்கியமானவர். தயாரிப்பாளராக, கதாசிரியராக, வசனகர்த்தாவாக, சிறந்த பாடலாசிரியராக என்று எல்லாத் துறைகளிலும் தன்னை நிருபித்தவர். அதுமட்டுமில்லாமல் பி.ஏ.ஆர்ட்ஸ் மூலம் ரஜினி, கமல் என்ற இரண்டு திரைக்குதிரைகளை ஒரே வேகத்தில் ஓடவைக்கும் கலையைக் கற்ற சரியான ஜாக்கி இவர்.. ரஜினி கமலின் இருவரின் அதிக வெற்றிப்படங்ளை தயாரித்த தயரிப்பாளரும் கூட. இந்தவகையில் இரண்டு நட்ச்சத்திரங்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.

    இந்த இருவரின் அன்பிற்கு அடையளமாக கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும். இது சில இடங்களில் கேட்ட தகவலாக இருந்தாலும் சுவராஸ்யம் கருதி எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்.

    ரஜினி கமல் இணைந்து நடித்த பல படங்கள் நூறு நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது ஒரு தயாரிப்பாளராக இருவரும் சேர்ந்து நடிக்க ஒரு படத்தை தயாரிக்க பஞ்சு அவர்கள் முடிவு செய்து இருவரிடமும் கால்ஷீட் கேட்கிறார். தங்களுக்கு ஹிட் படங்கள் கொடுத்த தயாரிப்பாளர் என்ற மரியாதையில் இருவரும் அவர் தயாரிக்கும் படத்தில் சேர்ந்து நடிக்க முடிவு செய்து ஒப்பந்தத்தில், கையெழுத்திடுகிறார்கள். நினைத்ததை வெற்றிகரமாக முடித்த மகிழ்ச்சியில் படவேலைகளில் ஈடுபட்டு வருகிறார் பஞ்சு அவர்கள். சில மாதங்கள் ஓடுகின்றன. ரஜினி, கமல் நடித்து அப்போது சில படங்கள் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    ‘நினைத்தாலே இனிக்கும்' படப்பிடிப்பில் ரஜினிக்கும் கமலுக்கும் காட்சிகள் இல்லாத நேரத்தில் இருவரும் ரிலாக்ஸாக புல் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கமல் ஒரு முடிவெடுத்து ரஜினியிடம் சில விஷயங்களை மனம் விட்டு பேசுகிறார். "ரஜினி நீயும் வளர்ந்து பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டே. நானும் ஒரு லெவலுக்கு வந்திட்டேன். உனக்கும் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கும் ரசிகர்கள் இருக்காங்க.. அப்படியிருக்கும்போது நாம் இனியும் சேர்ந்து நடித்தால் நமக்கான சம்பளத்தை உயர்த்திக் கேட்க முடியாது. உனக்கும் குறைவாகவே சம்பளம் கிடைக்கும். இதைத் தவிர்க்க நாம் இன்மேல் சேர்ந்து நடிக்காமல் தனித்தனி ஹிரோவாகவே நடிக்கலாமே," என்ற யோசனையை ரஜினிக்கு சொல்லியிருக்கிறார் கமல்.

    இத்தனைக்கும் கமல் அப்போது ரஜினியை விட பெரிய ஹீரோவாக இருந்தவர். சக நடிகரின் வளர்ச்சிமேல் கொண்ட அக்கறை காரணமாக இந்த ஐடியாவை ரஜினிக்கு சொன்னார் கமல். இந்த யோசனைக்கு ரஜினியும் சம்மதிக்க அடுத்தடுத்த படங்களில் ரஜினி தனி ஹீரோவாகவும் கமல் தனியாகவும் நடிக்க ஆரம்பித்தனர்.

    இந்த நிலையில் இருவரையும் சேர்ந்து நடிப்பதற்காக ஒப்பந்தம் போட்டுச் சென்ற தயாரிப்பாளர் பஞ்சு படத்தை ஆரம்பிக்க இருவரையும் சந்தித்துப் பேச வருகிறார். அப்போதுதான் அவரிடம் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இப்படி வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால் அவர்கள் திகைத்துப் போய் திரும்பியிருப்பார்கள். ஒரு படைப்பாளியாக இருந்த காரணத்தால் பஞ்சு அவர்கள் சிரித்துக் கொண்டே "அதனாலென்ன இருவரும் சேர்ந்துதானே நடிக்க மாட்டீர்கள். பரவாயில்லை ஒப்பந்தபடி இருவரும் தனித்தனியாக ஆளுக்கு ஒரு படம் செய்து கொடுத்து விடுங்கள்," என்றிருக்கிறார்.

    "ரஜினி ஓகே என்றால் நானும் ஓகே" என்று கமல் சொல்லியிருக்கிறார். ஆனால் எதிர்பாரத விதமாக ரஜினியும் ஓகே சொல்லி விட்டார். அவர்கள் இருவரும் வைத்த ஒரே நிபந்தனை படத்தை ஆரம்பிக்க ஒரே வாரம்தான் கெடு. ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் எடுத்து முடித்து விட வேண்டும்.

    பஞ்சு அவர்களும் சளைக்காமல் ஏழு நாள் கெடுவோடு இரண்டு படங்களுக்கான கதைகளை எழுத உட்காருகிறார். இரண்டு கதைகளையும் எழுதி முடித்து விட்டு படப்பிடிப்பிற்கு செல்கிறார். இரண்டு படங்களையும் எஸ்.பி முத்துராமன் இயக்க, இளையராஜா இசையமைப்பில் பாடல்களை பஞ்சு அருணாச்சலமே எழுத, படப்பிடிப்புகள் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தன. படங்களும் வெளிவந்தன.

    படத்தின் கதையமைப்பிலும் பாடல்கள் கொடுத்த வெற்றியிலும் இரண்டு படங்களும் நூறு நாள் படங்களாக வெற்றி விழாக்களைக் கண்டன. அந்த இரண்டு படங்கள் ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாணராமன்!

    இப்படி படைப்புச் சாதுர்யத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென முத்திரை பதித்தவர் பஞ்சு அருனாச்சலம் அவர்கள்.

    சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு பஞ்சு அருணாச்சலம் அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியிருந்தார். இந்தகவல் இளையராஜா அவர்களுக்கு தெரிந்ததும் அவர் பஞ்சு அருணாச்சலத்தைச் சந்திக்க ஆவலானார். ஆனால் அந்த நேரத்தில் ஒரு படத்தின் பாடல் பதிவிற்காக இளையராஜா பிஸியாக இருந்த நேரத்தில் அவரைப் பார்க்க சூப்பர் ஸ்டார் ரஜினி திடீரென ஸ்டுடியோவிற்கே வந்து விட்டார்.

    அப்போது இளையராஜா அவர்கள் பஞ்சு அவர்களின் நிலை பற்றிச் சொல்லவும் "அவரை எப்படியாவது பார்க்கணுமே சாமி" என்று ரஜினி பரபரக்க, "நாளை நான் போய பார்க்கப்போகிறேன் சாமி" என்று பதிலுக்கு இளையராஜா சொல்லியிருக்கிறார்.

    "அப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்துபோய் பார்த்து விட்டு வரலாம் சாமி" என்று இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள். அப்போது இளையராஜா "நானே என் காரை அனுப்புகிறேன் சாமி" என்று சொல்ல "இல்லை சாமி நான் என் காரில் உங்கள் வீட்டிற்கே வந்து விடுகிறேன் இருவரும் சேர்ந்து போகலாம்" என்று சொல்லவும் ராஜாவும் அம்மதம் சொல்லியிருக்கிறார்.

    rajini, ilayaraja and panchu arunachalam

    மறுநாள் காலையில் ரஜினியின் கார் இளையராஜாவின் வீட்டின் முன் நிற்கிறது. வெள்ளை குர்தா, கரும் பச்சை கலர் காவி வேஷ்டியில் வந்திறங்கினார் ரஜினி. ராஜாவை ஏற்றிக்கொண்டு கார் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் இருக்கும் பாகீரதி அம்மன் தெருவிற்கு பறக்கிறது. அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் போய் நின்றது கார். முதலில் ரஜினி இறங்க, அடுத்து இறங்கினார் இளையராஜா இரட்டை சூரியனை வீட்டின் முன் பார்த்த அப்பார்ட்மெண்டின் காவலாளிக்கு பதற்றம், மகிழ்ச்சி, கொண்டாட்டம். இருவரும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே பஞ்சு சார் இருக்கும் முதல் தளத்திற்கு செல்கிறார்கள்.

    வீட்டில் இருவரையும் ஒருசேரப் பார்த்த பஞ்சு சாருக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி. வரவேற்று இருவரையும் அமர வைக்கிறார். சம்பிரதாய விசாரிப்புப் பேச்சுக்கள் முடிந்ததும் மூவரும் மனம் திறந்து உரையாட ஆரம்பிக்கிறார்கள். சில விஷயங்கள் அவர்கள் மூவரின் தனிப்பட்ட நிகழ்வுகள் அதனால் அதை இங்கு பதிவு செய்ய முடியாது.

    அப்புறம் ரஜினி, தான் மருத்துவமனையிலிருந்து காலங்கள் பற்றியும் அது தொடர்பான சில நிகழ்வுகளையும் சொல்கிறார். சூடான டீயும் தட்டு நிறைய பிஸ்கட்டுகள், பழங்கள் வருகிறது. மூவரும் ருசித்துக்கொண்டே ரசித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    அப்படியே பேச்சு சினிமா பக்கம் திரும்புகிறது. அப்போதுதான் ரஜினி மனம் திறந்து சில தகவல்களை பஞ்சு சாரிடம் பகிர்ந்து கொள்கிறார். "என்க்கு இப்ப வேற மாதிரி படங்கள் பண்ண ஆசையாக இருக்கு. ஆனால் சூழ்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. ஹிந்தியில் அமிதாப்ஜி பண்ணும் கதாபாத்திரங்களை போல் நானும் பண்ணனும் போல் இருக்கு. என்னோட அடுத்த படமே அப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஆச்சரியமில்லை," என்று சொல்லியிருக்கிறார்.

    அமிதாப்பின் 'பா' படம் பற்றியும் சிலாகித்துப் பேசியிருக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவிற்கான கதையில் இல்லாமல் எளிமையான கதையமைப்பில் அமிதாப் மாதிரியான கதாபாத்திரங்களில் இனி சில படங்கள் நடிக்கலாம் என்ற ரஜினி முடிவை பஞ்சு அருணாச்சலம் ஆமோதித்து உற்சாக[ப்படுத்த இளையராஜாவும் அதை வரவேற்றிருக்கிறார்.

    மூவரும் பேசி முடித்து புறப்பட்டனர் இளையராஜாவை அவர் வீட்டில் இறக்கிவிட்ட ரஜினியின் கார் பறந்தது புதிய பாதையில்...

    -தேனி கண்ணன்

    English summary
    Recently Rajinikanth and Ilaiyaraaja heve met veteran film maker Panju Arunachalam at his residence and discussed many things.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X