மாமியார் தேவை: குடும்ப ஒற்றுமையை கட்டிக்காக்கும் துர்கா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'மாமியார் தேவை' தொடர், 50 எபிசோடுகளை நிறைவு செய்து இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பெற்றுள்ளது.
குடும்ப பாங்கான கதைகளும், பிடித்த நடிகர்களும் இருந்தால் அதுபோன்ற சீரியல்களை இல்லத்தரசிகள் ரசிப்பார்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிகம் டப்பிங் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேரடி தமிழ் சீரியல் மாமியார் தேவை.
லேடீஸ் சென்டிமென்ட், மாமியார் மருமகள்கள் பிரச்சினை, கூட்டுக் குடும்பத்தின் சந்தோசம் போன்றவைகளை இயல்பாக சொல்லியிருக்கின்றனர்.

தொழில் அதிபர் கங்காதரன்
இளம் வயதில் மனைவியை இழந்த கங்காதரன் மிகப்பெரிய தொழில் அதிபர். இவருக்கு பிரேம்குமார், வசந்த்குமார், தீபக்குமார் என்று மூன்று மகன்கள். மூன்று பேருக்கும் திருமணம் நடந்து விட்டது. பிரேம்குமார் மனைவி நீலவேணியும், வசந்த்குமார் மனைவி கிரிஜாவும் தனிக்குடித்தனம் போக துடிக்கிறார்கள். அதற்காக தங்கள் கணவன்களையும் மிரட்டி பணிய வைத்து விடுகிறார்கள்.

மூன்றாவது மருமகள் மீரா
அந்த விவரம் மூன்றாவது மகன் தீபக்குமாருக்கும் அவன் மனைவி மீராவுக்கும் தெரிய வரும்போது துடித்துப் போகிறார்கள். அண்ணன்கள் குடும்பத்தில் சமாதானம் பேசி தோற்றுப் போகிறார்கள்.

வீட்டில் விரிசல்
வீடு விரிசல் விழும் நிலைக்கு வரும்போது கங்காதரன் துடிதுடித்துப் போகிறார். ‘இந்த நேரத்தில் குடும்பம் பிரிந்து போகாமல் தடுக்கும் விதமாக மனைவி இல்லாமல் போனாளே' என்று வருத்தப்படுகிறார். மாமனார் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட இளைய மருமகள் மீரா, மாமனாருக்கு திருமணம் செய்து வைக்க பொருத்தமான மாமியாரை தேடுகிறாள்.

மாமியார் துர்கா
அந்த வகையில் மீரா கண்டெடுக்கும் மாமியார் துர்கா. கங்காதரனை மணந்து கொண்டு பெரிய குடும்பத்தில் மருமகளாக, மூன்று பெண்களுக்கு மாமியாராக வருகிறாள் துர்கா.

குடும்ப ஒற்றுமை
துர்காதேவியை போன்று நீதிக்காக போராடும் போர்க்குணம் கொண்டவள். வந்த வேகத்தில் பிரிய நினைக்கும் மகன்களைமருமகள்களை கட்டுப்படுத்தி ஒரே குடும்பமாக வாழ வைக்க அவளால் முடிகிறதா என்பதே தொடரின் கதை.

யுவராணி, சுபலேகா சுதாகர்
இந்த தொடரில் சுபலேகா சுதாகர், யுவராணி, குமரேசன், சுக்ரன், சோனியா, விஸ்வநாத், வந்தனா, ரவி கவுடா, ஸ்ருதிகா, அழகு, ஜி.கே., ஈ.ராம்தாஸ் இவர்களுடன் பிரபல பட அதிபர் அழகன் தமிழ்மணியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்கம்: கே.ஜே.தங்கபாண்டியன்.


Click it and Unblock the Notifications