சென்னை: தென்னிந்திய சினிமாவிலும் அரசியலிலும் நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் வெறும் கட் அவுட், பேனர் கலாச்சாரத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. சரியான நேரத்தில் அந்த கட்டமைப்பே அரசியல் சக்தியாக மாறும் என்பதற்கு கடந்த சில ஆண்டுகளில் பல உதாரணங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான் இப்போது திரையுலகில் புதியதாக பரவி வரும் ஒரு பேச்சு, கோலிவுட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

அதன்படி, சமீப காலமாக ஒரு முன்னணி நடிகரின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெறும் சினிமாவைத் தாண்டி அரசியலை நோக்கியே நகர்கிறது என்ற கருத்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர் மன்றங்களை மீண்டும் தீவிரப்படுத்துவது, சமூக நலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பது, ரத்ததான முகாம்கள், நலத்திட்ட உதவிகள், ரசிகர்களை மக்கள் மத்தியில் இருக்கும்படி அறிவுறுத்துவது என அடுத்த கட்டத்திற்கான நகர்வுகள் நடந்து வருவதாகவே பலரும் பார்க்கிறார்கள்.

Advertisement

இந்தச் சூழலில்தான், அந்த நடிகரின் ரசிகர் மன்ற பலத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள ஒரு அரசியல் வாரிசு தீவிரமாக யோசித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அந்த நடிகருக்கு இருக்கும் ரசிகர் மன்ற கட்டமைப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. மாவட்டம், ஒன்றியம், நகரம் என பல ஆண்டுகளாக உருவாகிய அமைப்பு. அதில் ரசிகர்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்பங்களும் இணைந்திருப்பது எந்த அரசியல் கட்சிக்கும் கூடுதல் பலமாக அமையும் என்று அரசியல் கணக்குகள் போடப்படுவதாக கூறப்படுகிறது.

வாக்கு வங்கி: அதிலும் குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ரசிகர் மன்ற வாக்கு வங்கியை தங்கள் பக்கம் திருப்ப முடிந்தால், எதிரணியின் அரசியல் வேகம் குறையும் என்ற கணக்கில்தான் சில நகர்வுகள் நடக்கின்றன என்ற பேச்சும் எழுந்துள்ளது. சினிமா உலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களின் வெற்றி, தோல்வி குறித்து பல கதைகள் இருந்தாலும், ரசிகர் மன்றம் என்பது இன்னும் அரசியல் களத்தில் முக்கிய ஆயுதமாகவே பார்க்கப்படுகிறது. அதனால்தான், அந்த நடிகரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் வெறும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளாகவோ, ரசிகர் சந்திப்புகளாகவோ மட்டும் பார்க்கப்படவில்லை.

Advertisement

அரசியல் கணக்கு: ஆனால், சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் கிசுகிசுக்களே. இருப்பினும், திரையுலகில் இருந்து அரசியலுக்கு நகரும் ஒவ்வொரு அடியும் இனி அதிக கவனத்தைப் பெறும் என்பதில் மட்டும் மாற்றுக் கருத்து இல்லை. ஒருபுறம் ரசிகர் மன்றம் வலுப்பெறுகிறது... மறுபுறம் அரசியல் கணக்குகளும் வேகமாக மாறுகின்றன. இந்தக் கிசுகிசு வெறும் பேச்சாகவே முடிவடையுமா? இல்லை புதிய அரசியல் கூட்டணிக்கான முன்னோட்டமா? என்பதற்கான பதில், வரும் மாதங்களில் வெளியாகும் நகர்வுகளில்தான் இருக்கிறது.