ஹைதராபாத்: கல்கி 2898 ஏடி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'ராஜா சாப்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் செம ட்ரோல் படமாக மாறி பிரபாஸுக்கு பெரிய தலைவலியாக மாறியது.
நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சமுத்திரகனி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்த அந்த காமெடி பேய் படம் பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்நிலையில், ஹனு ராகவப்புடி இயக்கத்தில் ராணுவ வீரராக பிரபாஸ் நடித்துள்ள ஃபெளஜி (Fauzi) திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்களுக்குப் பிறகு பிரபாஸ் பான் இந்தியா நட்சத்திரமாகவே மாறிவிட்டார். அவரை வைத்து படமெடுக்க வேண்டுமென்றாலே சுமார் 500 கோடிக்கு கீழ் பட்ஜெட் போகக் கூடாது என்கிற நிலை உருவாகி விட்டது. சொதப்பல்களும் பிரம்மாண்ட வெற்றியும்: பாகுபலி 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு சலார் மற்றும் கல்கி 2898 ஏடி படங்கள் தான் பிரபாஸுக்கு பெரும் வெற்றியை தேடித் தந்தன. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் மற்றும் இந்த ஆண்டு வெளியான ராஜா சாப் உள்ளிட்ட 4 படங்கள் ஃப்ளாப் படங்களாகவே மாறி சொதப்பின. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட், ஹனு ராகவபுடியின் ஃபெளஜி மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2 உள்ளிட்ட படங்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளார் பிரபாஸ். ஃபெளஜி ரிலீஸ் தேதி: ஜனவரியில் வெளியான படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், டிசம்பர் 3ம் தேதி Fauzi படத்தை ரிலீஸ் செய்கிறார் பிரபாஸ். இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான படங்களிலேயே சிரஞ்சீவியின் மன வரபிரசாத் காரு மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது. ராம் சரணின் பெத்தி படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில், பிரபாஸ் டோலிவுட்டுக்கு ஒரு வெயிட்டான வெற்றியை டிசம்பர் மாதம் 3ம் தேதி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 ஆண்டுகளாக உருவான படம்: இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சோஷியல் மீடியா சென்சேஷனல் இமான்வி நடித்துள்ளார். 2023ம் ஆண்டு பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இந்த படம் ராணுவ வீரரின் கதை என்பதால் கடந்த 3 ஆண்டுகளாக பிரபாஸ் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பிரபாஸ் ரசிகர்களுக்கு ஒரு ராயல் ட்ரீட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.More Articles