சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான 'ஜனநாயகன்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்ந்து தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், படத்தில் 'சௌம்யா' கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சப்னா (Saps) வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "சில கனவுகள் நம்முடைய கற்பனைக்கும் எட்டாதவை. அதைவிட, கனவு காணக்கூட நினைத்திராத ஒரு விஷயம் வாழ்க்கையில் நடக்கும். அப்படி ஒரு படத்தில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. அதிலும் விஜய் சார் படத்தில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் இடம் பெறுவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்யவில்லை" என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், "இந்த கதாபாத்திரத்தில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால் என்னை தேர்வு செய்தது படக்குழுவா, இல்லை இந்த பிரபஞ்சமா என்று தெரியவில்லை. சினிமா செட்டில் கூட நிற்பேன் என்று நினைக்காத எனக்கு, விஜய் சார் வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம்" என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதிகாலை 3 மணியளவில் படமாக்கப்பட்ட ஒரு முக்கிய காட்சியை நினைவுகூர்ந்த அவர், "ரத்த வெள்ளத்தில் தரையில் படுத்திருந்தேன். சுற்றிலும் நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கேமரா மிக அருகில் இருந்தது. அந்த நேரத்தில் கேமராவைப் பற்றியோ, படத்தைப் பற்றியோ நான் யோசிக்கவில்லை. 'உண்மையிலேயே இது எனக்குத்தானா நடக்கிறது?' என்ற எண்ணம்தான் மனதில் ஓடியது. கனவாகக் கூட நினைக்காத வாழ்க்கையை அந்த நொடியில் வாழ்ந்தேன்" என்று நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார்.

Advertisement

நன்றி: இயக்குநர் ஹெச். வினோத்திற்கு நன்றி தெரிவித்த அவர், "'சௌம்யா' கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்ததற்கும், அந்த காட்சிக்குப் பிறகு என்னைப் பாராட்டி கூறிய வார்த்தைகளுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். எனக்கு நடிக்கத் தெரியாது என்ற எண்ணமே இருந்தது. அதை மாற்றியது இந்த படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

படக்குழு: அதேபோல், இணை இயக்குநர்கள், டயலாக் ரைட்டர்ஸ், ஒளி அமைப்புக் குழு, மேக்கப், ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம், ஒலிப்பிரிவு உள்ளிட்ட ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்துள்ள அவர், "இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் அவர்களின் உழைப்பும் அன்பும் இருக்கிறது. இத்தனை பெரிய படைப்பின் ஒரு பகுதியாக இருந்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வரம்" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

பிரபஞ்சத்திற்கு: இறுதியாக, "என் வாழ்க்கையில் 'சௌம்யா' என்ற கதாபாத்திரத்தை கொண்டு வந்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. நான் எதிர்பார்க்காத, ஆனால் என்றும் மறக்க முடியாத பரிசாக இந்த கதாபாத்திரம் இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.