சென்னை: நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல திரைப்பிரபலங்களும் களமிறங்கியுள்ளனர். இந்தச் சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலக வேண்டும் என நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஆவேச அறிக்கை இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

Advertisement

நீட் தேர்வில் நடந்துள்ள அநீதிக்கு எதிராகத் தனது குரலை வலுவாகப் பதிவு செய்துள்ள ஜோதிகா, "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டின் எதிர்காலமான மாணவர்களுக்காகவும், ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தப்பட்ட கல்வி முறைக்காகவும் நான் உறுதியுடன் துணை நிற்கிறேன். போராடும் Gen Z தலைமுறையினரை எண்ணி ஒரு தாயாகப் பெருமைப்படுகிறேன். 'நாம் தான் இந்தியா' என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். பயத்தை உடைத்து எறிந்ததற்கு நன்றி!" என பதிவிட்டு சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ் போன்ற சமூக ஆர்வலர்களுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் பேரணி நடத்த முயன்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் கொடூரத் தடியடி நடத்தினர். டெல்லியில் வெடித்த இந்த விஸ்வரூபம் தற்போது சென்னையிலும் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை தி.நகரில் பாலன் இல்லத்தில் CJP மாணவர்கள் சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக, இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' களமிறங்கியுள்ளது. இதில் அமீர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், ரேவதி, ஆண்ட்ரியா, தேவதர்ஷினி எனப் பல பிரபலங்கள் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஜோதிகாவின் இந்த அரசியல் பதிவைக் கண்டு, சமூக வலைதளங்களில் அவரை வழக்கம் போல் கலாய்க்கவும், 'Paid Partnership' என முத்திரை குத்தவும் முயன்ற நெட்டிசன்களை கமெண்ட் செக்‌ஷனிலேயே வைத்துச் சமைத்து எடுத்துள்ளார் ஜோதிகா. "கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டீங்க மேடம்!" என கிண்டலடித்த நெட்டிசனுக்கு, "எதுவுமே தாமதம் இல்லை, முதலில் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பு என்ன என்பதைப் பற்றி யோசியுங்கள்!" என்று பொளந்து கட்டியுள்ளார்.

அதேபோல், "என்ன வேணாலும் பேசிட்டு மும்பைக்குப் போயிடுவீங்க" என்று விமர்சித்த நெட்டிசனிடம், "நான் எங்கே போவேன்? நான் இந்தியாவில்தான் வாழ்கிறேன், இன்னமும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!" என்று பதிலடி கொடுத்துள்ளார். "மாணவர்கள் தாக்கப்படுவதை விட பிற அரசியல்தான் நடக்கிறது" என்று கூறிய நெட்டிசனுக்கு, "அரசாங்கம் மாணவர்களின் மண்டையையும் உடலையும் அடித்து உடைப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், "CJP கட்டண விளம்பரத்திற்கு (Paid Partnership) நன்றி" என பதிவிட்ட நெட்டிசனை பார்த்து, "அப்படியானால் நீங்களும் எதிர்க்கட்சியிடம் இருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் பேசுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளவா?" என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

Advertisement

சினிமா பிரபலங்கள் தங்களது வழக்கமான சுயநலத்தைத் தாண்டி, நாட்டின் கல்வி முறையிலும் மாணவர்களின் உரிமையிலும் கேள்வி எழுப்புவது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால், அப்படிக் கேள்வி கேட்பவர்களை நெட்டிசன்கள் 'பெய்டு புரமோஷன்', 'எதிர்க்கட்சி ஆதரவாளர்' என்று முத்திரை குத்துவது தமிழ்நாட்டின் மற்றும் இந்திய அரசியலின் முதிர்ச்சியற்ற போக்கையே காட்டுகிறது. திரையில் மட்டும் வசனம் பேசாமல், நிஜத்திலும் கமெண்ட் செக்‌ஷனில் பயமின்றிப் பதிலடி கொடுத்து களமிறங்கியுள்ள ஜோதிகாவின் இந்தச் செயல், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது!