சென்னை: தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் நின்றவர் சிலர் மட்டுமே. அந்த வகையில் ஒரு காலத்தில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகை உமா சங்கரி, தற்போது மார்பக புற்றுநோயால் (Breast Cancer) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அவர் பகிர்ந்துள்ள உருக்கமான புகைப்படம் ஒட்டுமொத்தச் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை உமா சங்கரி 'வீரநடை' படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்துத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு, கேப்டன் விஜயகாந்த் நடித்த 'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் தங்கையாக உருகி உருகி நடித்துப் பலரது பாராட்டுகளையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து, பிரபல இயக்குனர் தங்கர்பச்சன் இயக்கத்தில் வெளியான 'தென்றல்' திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் உமா சங்கரியின் நடிப்புத் திறமைக்கு ஒரு மகுடமாக அமைந்து, அவருக்குத் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பேரையும் பெற்றுத் தந்தது.
மொட்டை தலையுடன் கையில் ட்ரிப்ஸ்: இதையடுத்து, கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு, சினிமா பக்கம் தலைகாட்டாமல் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள உமா சங்கரி, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். மருத்துவமனையில் மொட்டை தலையுடன், கையில் ட்ரிப்ஸ் ஏறும்படியாக, தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை எடுத்து வரும் அந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
தைரியமாக இருங்க: அத்துடன் கீமோ மற்றும் இம்யூனோ சிகிச்சையின் இரண்டாம் கட்டம் இது. நான் இப்போது ஒவ்வொரு நாளையும் மிகவும் சிரமப்பட்டுத்தான் கடந்து வருகிறேன். இந்த சிரமமான நாட்களை எப்படிக் கையாள்வது என்பதை இப்போதெல்லாம் கற்றுக்கொள்கிறேன். அதேவேளையில், உடல்நலம் கொஞ்சம் தேறி, உடம்பில் வலிமையாக உணரும் நாட்களை நான் கொண்டாடுகிறேன். எப்போதும் எனக்குத் துணையாக நிற்கும் என் குடும்பத்தினருக்கும், என் மீது அளவற்ற அன்பு மற்றும் ஆதரவைச் செலுத்தி வரும் ரசிகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. சிகிச்சையை நான் தொடர்ந்து மேற்கொள்கிறேன், அதிலிருந்து மெல்லக் குணமடைந்தும் வருகிறேன். மேலும் எனது உடல்நிலை முன்னேற்றத்தில் மட்டுமே தற்போது கவனம் செலுத்துகிறேன் என உமா சங்கரி மன உறுதியுடன், அதே சமயம் சோகம் நிறைந்த பதிவையும் அவரது புகைப்படத்தையும் பார்த்த திரையுலக பிரபலங்களும், ஃபேன்களும் அதிர்ச்சியடைத்து, நீங்கள் மிகவும் தைரியமான பெண்மணி.. விரைவில் இந்த நோயிலிருந்து மீண்டு முழுமையாகக் குணமாகிவிடுவீர்கள், தைரியமாக இருங்க என அவருக்கு ஆதரவாக இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.