மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளாக சினிமாவில் அறிமுகமான ஜான்வி கபூர், இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். படங்களில் மட்டுமல்லாமல், தனது வெளிப்படையான பேச்சாலும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'தடக்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர், தொடர்ந்து பல்வேறு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவரா' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமானார். தற்போது ராம் சரணுக்கு ஜோடியாக 'பெத்தி' படத்தில் நடித்து வருகிறார். இதனால் பாலிவுட் மட்டுமல்லாமல் தென்னிந்திய ரசிகர்களிடமும் ஜான்விக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், தனது சகோதரி குஷி கபூருடன் இணைந்து பிரபல அரட்டை நிகழ்ச்சியான 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் ஜான்வி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் தங்களது சினிமா பயணம், குடும்பம் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.
மச்சத்தைக் கேட்ட நடிகர்: நிகழ்ச்சியின் 'ரேபிட் ஃபயர்' சுற்றில், "உங்களுக்கு வந்ததிலேயே மிகவும் வித்தியாசமான பிளர்ட்டிங் மெசேஜ் எது?" என்று கரண் ஜோஹர் கேள்வி எழுப்பினார். இதற்கு முதலில் சிரித்த ஜான்வி, அருகில் இருந்த தனது தங்கை குஷியை பார்த்து, "நான் இதை சொன்னால் நீ என்னை திட்டுவாய்" என்று கலகலப்பாக கூறினார். அதன்பிறகு அவர் கூறிய பதில்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. "ஒரு பிரபல நடிகர், 'உன் உடலில் இருக்கும் மச்சங்களை நான் பார்க்கலாமா?' என்று எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார்" என்று ஜான்வி தெரிவித்தார். ஷாக்: இந்த பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்த கரண் ஜோஹர், "அப்படியா... உனக்கு எத்தனை மச்சங்கள் இருக்கின்றன?" என்று நகைச்சுவையாக கேட்க, அதற்கு ஜான்வி, "நிறையவே இருக்கின்றன" என்று சிரித்தபடியே பதிலளித்தார். அவரின் இந்த பதில் அரங்கில் இருந்தவர்களையும் சிரிக்க வைத்தது. யார் அந்த நடிகர்: ஆனால், அந்த மெசேஜை அனுப்பிய நடிகர் யார் என்பது குறித்து ஜான்வி எந்த தகவலையும் வெளியிடவில்லை. பெயரை குறிப்பிடாமல் அவர் பேசிய இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த நடிகர் யார் என்ற கேள்வியையும் ரசிகர்கள் இணையத்தில் எழுப்பி வருகின்றனர்.More Articles